ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாக நவி பிள்ளை வெளிப்படுத்திய கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் , அவரது இலங்கை விஜயம் சர்வதேச மட்டத்தில் மிகப் பயனுள்ளது என்றும் அவர் கூறினார். ஜெனிவாவில் ஐ..நாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியாகப் பணியாற்றிய தயான் ஜயதிலக்க பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
நவி பிள்ளையின் கருத்துக்கள், இலங்கை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள சர்வதேச அமைப்புகளும் அரசுகளும் தமது பார்வையைக் கூர்மைப்படுத்தவும் நிலைப்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
நவி பிள்ளை கொழும்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியென்று தயான் ஜயதிலக்க ஒப்பிட்டுப் பேசினார்.
ஒருவாரகாலம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்த்து நவி பிள்ளை வெளியிட்ட கருத்துக்களால், இலங்கை சர்வதேசத்தின் உன்னிப்பான கண்காணிப்புக்குள் வந்திருப்பதாகவும் தமிழோசையிடம் தயான் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை, இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் வாய்மொழி மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பார் என்றும் பின்னர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.
நவி பிள்ளை விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்தவர் என்றும் அவர்மீதே புலி முத்திரை குத்துவது இனவாதக் கருத்து என்றும் இலங்கையின் முன்னாள் ஜெனிவா பிரதிநிதி கூறினார்.
நவி பிள்ளையின் கருத்துக்களை உதாசீனம் செய்து நிராகரிக்கும் போக்கு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கே பாதகமாக அமையும் என்றும் இலங்கை மீதான நம்பகத் தன்மையை மேலும் சீர்குலைக்கும் என்றும் தயான் கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் இறுதிப் போர்க் காலப் பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சார்பில் தயான் ஜயதிலக்க வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( தகவல் : BBC )
WAD
Share the post "நவியின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி – தயான் ஜயதிலக"