Puttalam Online
puttalam-news

நாச்சியாத்தீவு கல்ஆலை – ஓர் கள அறிக்கை

  • 5 September 2013
  • 1,028 views

எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்

PO 4காலைப் பொழுதின் ரம்மியமான தென்றல் மேனியை வருட, கீச்சிடும் கிளிகளின் குரல் காதுகளை தழுவ நாச்சியாத்தீவு கிராமத்தை அடைகின்றோம். அனுராதபுரம் மாவட்டத்தின் அழகிய கிராமம். இன்முகத்துடன் வரவேற்கின்றது. வீதியின் இருமருங்கும் பச்சைப்பசேல் என காட்சியளிக்கின்றது. வயல் வெளிகள் ஒருப்புறமும், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புக்கள் மரு புறமுமாக கிராமத்தின் அழகை மேலும் மெருகூட்டுகின்றது.

அழகான ஓடை வழியே சல சலக்கும் சத்தத்தோடு தண்ணீர் தாவி ஓடுகின்றது. பாரிய பரப்பளவில் ஒரு சமுத்திரத்தை போல் வாவி, வாய் பிளந்து நிற்கின்றோம். கரடு முரடான அந்த செம்மண் பாதையை தாண்டி கல் ஆலையை அடைகின்றோம். கல் ஆலை என்று சொல்வதை விட ஒரு சிறு மலைக்குன்று என்றே சொல்ல வேண்டும்.

சுமார் முப்பது, நாற்பது அடி பரப்பளவு கொண்ட இந்த கல் ஆலை சுற்றிவர மலைகளால் சூழப்பட்டு, பாரிய மரங்கள் புடைசூழ நடுவில் பாரிய குழியாக காணப்படுகின்றது. இதனை பொதுவாக “கல் வளை” என்று கூறுவார்கள்.

இக்கல் வளைக்கு செல்வதற்கு பாதைக் காணப்படும். இதனை உறுதியாக பேண வேண்டும். இதன் உறுதி தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே வாகனங்கள் உட்செல்ல அனுமதிக்கப்படும்.

PO 3இந்த கல்ஆலை பரம்பரை பரம்பரையாக கைமாறி வந்துள்ளதாம். அந்த அந்த காலத்தில் உள்ளவர்கள் உள்ளூராட்சி சபையின் அனுமதி கடிதங்களை பெற்று இதனை பராமரித்து வந்துள்ளனர். இன்னும் இது கைமாறி, கைமாறி செல்லக் கூடும். அந்த அளவுக்கு இதனூடாக மேலும் மேலும் கற்களை பெறக்கூடியதாக உள்ளது.

மாதத்திற்கு தேவையான வெடிப்பொருட்கள் வாங்கி வரப்பட்டு அது தேர்ச்சிமிக்க ஒருவரின் ஊடாக மலைக்குன்றுகளில் சிறு சிறு துளைகள் ஏற்படுத்தப்பட்டு அதனுள் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்யப்படும். இதன் போது கல் ஆலையின் பொறுப்பாளர் அவ்விடத்தில் கண்டிப்பாக இருத்தல் அவசியமாம். ஏனென்றால் இதன் போது கள நிலவரங்களை கண்காணித்து அதற்கேற்றவாறு பணிகளை தொடர வேண்டும்.

வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட இடங்களின் மேல் பாரியளவிலான பழைய டயர்கள் பாதுகாப்புக்காக வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்பட்ட பின்னர் ஒருவர் ஒருவராக வீதி நெடுகிலும் சென்று “வெடில் வைக்க போகிறோம், வெடில் வைக்க போகிறோம்” என்று கத்துவர். இதன் போது அருகில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தள்ளி செல்வர் மற்றும் அவதானமாக இருப்பர்.

PO 2இதன் பின்னர் ஒருவர் ஒருவராக பிரிந்து சென்று ஒவ்வொரு சந்திகளில் நின்று மக்களை அவ்விடத்துக்கு வர விடாது அவதானிப்பர். இச் செயற்பாடு பெரும்பாலும் காலை நேரங்கள் தவிர்ந்து மதிய நேரங்கள் மற்றும் மாலை நேரங்களில் இடம்பெறும்.

அதன் பின்னர்  தேர்ச்சிமிக்க நபர்கள் மூன்று மூன்று பிரிவுகளாக பிரிந்து வெடிப்பொருள் நிரப்பட்ட இடங்களில் பற்ற வைத்து விட்டு வருவார். சுமார் அரைமணி நேரம் வரை இச்செயற்பாட்டுக்கு எடுக்கும். இதன் போது கற்கள் சிதறியடிக்கப்படும். இதன் போது வெளியேற்றப்படும் கற்களின் வேகத்தை குறைக்கவே கல் வளையை சுற்றி காணப்படும் அவ் சிறுசிறு மலைக்குன்றுகளை அப்படியே வைத்திருக்கிறார்களாம். பின்னர் வெளியேற்றப்பட்ட கற்களை ஒழுங்குப்படுத்தி பெறுவர்.

ஒரு தரம் பற்றவைத்து பெறப்பட்ட கற்கள் ஒருக்கிழமை அல்லது இரண்டுக் கிழமைகளுக்கு போதுமானதாக இருக்கும். அதன் பின் அவை சிறு சிறு கற்களாக உடைக்கப்பட்டு சேகரித்து வைக்கப்படும். பின்னர் தேவையின் போது லொறிகளில் ஏற்றப்படும். சில போது உடைக்கப்பட்ட கற்கள் நேரடியாக லொறிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.

மழைக்காலங்கள் ஏற்படுமாயின் இத்தொழில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடுகின்றது. பாதைகள் பழுதடையும், வெடிப்பொருட்கள் நிரப்புவது கடினம் போன்ற இன்னோரன்ன செயல்களினால் இத் தொழில் ஒத்தி வைக்கப்படுகின்றது.

இத்தொழிற்பாட்டின் வெடிமருந்து வெடிக்கச் செய்யும் போது சில சில அசம்பாவிதங்களும் ஏற்பட்ட வரலாறுகளும் உண்டாம். ஆபத்து அதிகமான, இலாபமும் நட்டமும் மாறி மாறி ஏற்படக்கூடிய ஓர் தொழிலாக இதனை இம்மக்கள் செய்துக் கொண்டு வருகின்றனர்.
கல் ஆலை – அனுபவம் வாய்ந்த – ஆபத்து நிறைந்த ஓர் செயற்பாடு.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All