Puttalam Online
puttalam-news

எமது கருத்து – 09 : தேர்தல் காலத்துத் தேவை

மாகாண சபைத் தேர்தல் நெருங்கி விட்டது.

downloadமக்கள், நிதானத்துடனும் அக்கறையுடனும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது.

தமக்கு விருப்பமான கட்சியையோ வேட்பாளர்களையோ தெரிவு செய்து ஆதரிப்பதும் வாக்களிப்பதும் ஒவ்வொரு பிரஜைக்குமுள்ள ஜனநாயக உரிமையாகும்.

அதேநேரம், மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ துன்பம் இழைக்காமலிருப்பது ஜனநாயக உரிமைகளின் முக்கிய நாகரிகமாகும்.

நாட்டிலும் சமூகங்களுக்கிடையிலும் சமூகத்துக்கு உள்ளேயும், அமைதியும் ஒற்றுமையும் நிம்மதியும் வேண்டப்படும் காலகட்டம் இது. இவை, நலிவடைந்து போவதற்கு தேர்தல் ஒரு காரணியாக அமைந்துவிடக் கூடாது.

புத்தளத்து மக்கள், தமக்கென்று  ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்து  நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதில் பலமுறை தோற்றுப் போயுள்ளனர். இதற்கான காரணங்கள் யாவரும் அறிந்தவையே. எதிர்காலத்திலாவது சமூகம் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் பொருத்தமான செயல் திட்டமொன்றை வகுத்து அதன்  அடிப்படையில் செயற்படவேண்டியது அவசியமாகும்.

மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி சார்பாகவும் எதிர்க் கட்சி சார்பாகவும் பல பிரதிநிதிகளைப் புத்தளப் பிரதேச மக்கள் தெரிவு செய்து அனுப்பி வந்துள்ளனர். இதைவிடக் கூடிய தொகையினரை மாகாண சபைக்கு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மக்களின் புத்தி சாதுரியம் மூலமே இது சாத்தியமாகும்.

இவை தவிர, புத்தளத்து மக்கள்  கடந்துபோன தேர்தல் காலங்களில் பல்வேறு முன்மாதிரிகளைக் காட்டியிருக்கின்றார்கள்.தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று  நடைபெறும்போது பல்வேறு கட்சி சார்பானவர்களும் அக்கூட்டத்துக்குச் சமுகமளித்து அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதும் தேவைப்படின், தத்தமது பிரசாரக் கூட்டங்களில் பதிலளிப்பதும் புத்தளம் மக்கள் காட்டும் பாராட்டக்கூடிய ஜனநாயகப் பண்பாகும்.

ஒரே கூரையின் கீழும் ஒரே தெருவில் எதிரெதிரேயுள்ள கட்டிடங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அரசியல் நடத்திய காலங்களில், அவ்வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் காட்டிய  கண்ணியமும் பொறுமையும் அனைவரையும் வியப்படையச் செய்ததை நாம் மறுக்க முடியாது.

ஒரே வீட்டினுள் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இருந்தபோதும் அவர்களின் குடும்ப உறவுகள் விரிசலடையா விதத்தில் விட்டுகொடுப்புடன் வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம்.

இவ்வாறு புத்தளம் மக்கள் காட்டிய முன்மாதிரிகளைப் பாதுகாப்புத் தரப்பினரும் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பாராட்டியதையும் நாம் மறக்க முடியாது.

இவ்வாறான சுமுக நிலை, எதிர்வரும் மாகாண  சபைத் தேர்தலிலும் நிலைத்திருக்க வேண்டும்.

எதிர்பாரா விதத்தில் சிறுசிறு முரண்பாடுகள் – முறுகல்கள்  ஏற்படும் சந்தர்ப்பங்களில், அல்லாஹ்வின் பொருட்டால், சமூக ஒற்றுமை கருதி நாம் பொறுமையாளர்களாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, நமது வாக்குகள் வீணடிக்கப்படாமல் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டியது முக்கியமானது .

வாக்களிக்காமல் தவிர்த்துக் கொள்வதும் வாக்களிக்கத் தாமதிப்பதும், எமது வாக்குச் சீட்டுக்களைப் பிறர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் துஷ்பிரயோகம் செய்யவும்  வழிசெய்யும் என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தினத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் அமைதியும் சுபீட்சமும் நிலவுவதற்கும் நமது பிரதேசத்துக்கும் சமூகத்துக்கும் நற்பணிகளை மாத்திரமே செய்யக்கூடிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்து அனுப்புவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருள் மழையைச் சொரிவானாக.

05.09.2013


One thought on “எமது கருத்து – 09 : தேர்தல் காலத்துத் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All