Puttalam Online
puttalam-news

கருத்து – 10 : 75 ஆம் அகவையில் பெரிய பள்ளிவாசல்

  • 21 September 2013
  • 2,533 views

                         75 ஆம் அகவையில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் 
 
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ,

புத்தளம் பெரிய பள்ளி என்று அழைக்கப்படும் ‘ புத்தளம் முஹியித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் ‘ இன் ( 21.09.2013 )  75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது ;அல்ஹம்துலில்லாஹ்.

 
இவ்வேளையில், இம்மஸ்ஜிதின் வரலாற்றுப் பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றோம். நமது ஊரில் முஸ்லிம்களின் குடியேற்றம் எப்போது ஏற்பட்டது? புத்தளத்து முஸ்லிம்களின் பூர்விகம் என்ன?  போன்ற கேள்விகளுக்கு விடை கூறக்கூடிய தகவல்கள் துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் இல்லை. என்றபோதும் ,  நமது இருப்பு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பல வரலாற்றுச் சான்றுகளை  ஆங்காங்கே நாம் காண்கின்றோம்.
 
நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ,  புத்தளத்தின் ஜூம்ஆப் பள்ளிவாசல் இப்போதைய மஸ்ஜித் வீதியில்  ‘ பழைய கொத்துபாப் பள்ளி வளவு ‘ என்று அழைக்கப்படும் காணியில் அமைதிருந்ததாக அறிய முடிகின்றது. இக்காணியின் பரப்பளவு அன்று மிகப் பெரியதாக இருந்துள்ளது. அதன் எல்லைகளாக , மேற்குத் திசையில்  கடலேரியும் தெற்குத் திசையில் கங்காணிக் குளத்திலிருந்து நீர் வழிந்தோடும் ‘ இரேகு அடி ‘ கால்வாயும் கிழக்குத் திசையில் கங்காணிக் குளமும் வடக்குத் திசையில் இப்போது முதலாம் குறுக்குத் தெரு என்று அழைக்கப்படும் பழைய மீன்கடைத் தெருவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. 
 
அக்காலத்தில் சிங்கள மன்னர்களால் செப்புப் பட்டயங்களும் வன்னியனார் என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட , செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான  ‘ மீரா உம்மா ‘  என்ற பெண்மணி இக்காணியைஅன்பளிப்புச் செய்துள்ளார்.  இக்காணியின் மேற்கே ,  இப்போது பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் ‘ முகையிதீன் தர்கா ‘ என்ற பெயரில் ஓர் அடக்கத்தலம் இருந்தது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் ரபீவுல் ஆகிர்  மாதம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றஹ் ) அவர்கள் பெயரில் கொடியேற்றப்பட்டு சந்தனக் கூடு வைபவம் மிகக் கோலாகலமாக நிறைவேற்றப்பட்டு வந்தது. பல்லாக்குதூக்குதல், தீமிதிப்பு, பஞ்சா எடுத்தல் போன்றவையும் இந்த தர்காவை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்தன.
 
இந்த தர்காவுக்குக் கிழக்கே அமைத்திருந்த பழைய கொத்துபாப் பள்ளிவாசல் , அக்காணியை அன்பளிப்புச் செய்த மீரா உம்மாவைக்  கௌரவிக்கும் வகையில் ” மீரா மக்காம் பள்ளிவாசல் ” என்றும் ” மீரா லெப்பைப் பள்ளிவாசல் ” என்றும் அழைக்கப்பட்டது. இப்பள்ளிவாசலிலேயே ஐவேளைத் தொழுகைகளும் ஜும்ஆவும் நடைபெற்றன.  
 
நாளடைவில் இப்பள்ளிவாசல் பழுதடையவே அதற்குப் பதிலாக அவ்வளவிலேயே வேறொரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. காலப்போக்கில் அப்பள்ளிவாசலும் பழுதடைந்தபோது , முகையிதீன் தர்கா கட்டிடத்திலேயே தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன.
 
1707 ஆம் ஆண்டு தொடக்கம் 1739 ஆம் ஆண்டுவரை கண்டியில் ஆட்சி செய்த ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் என்ற மன்னன் புத்தளத்துக்கு விஜயம் செய்தமை எமது இருப்பை உறுதிப்படுத்தும் சான்றுகளில் ஒன்றாகும். கண்டியிலிருந்து நாவற்காட்டுக்குச் சென்ற மன்னன் நரேந்திர சிங்கனுக்கு 1720 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 04 ஆம் திகதி  , புத்தளம் முஸ்லிம்கள் பெரும் வரவேற்பளித்தனர். அதனால் மகிழ்ந்த மன்னன் , தர்காவுக்குப் பல அன்பளிப்புகளை வழங்கினான். அதில் இரண்டு வெண்சாமரைகள் , பதினெட்டு வெள்ளிக் குஞ்சங்கள் ,  அரசனின் உத்தியோகபூர்வ கொடி ஒன்று , பாரிய ஊது குழல் ஒன்று ஆகியவற்றோடு ஆலவட்டங்கள் , தோரணங்கள், காழாமணி விளக்கு எனப்படும் பெரிய விளக்குகள் போன்ற பல்வேறு பொருள்கள் அவ்வன்பளிப்பில் அடங்கியிருந்தன. தர்காவில் சந்தனக்கூடு எடுக்கப்பட்டபோது இந்தப் பொருள்கள் யாவும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன. துரதிஷ்டவசமாக அவற்றுள் ஒரு வெண்சாமரையையும் ஊதுகுழலின் ஒரு பகுதியையும் தவிர்ந்த ஏனையவற்றுக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. 
 
தற்போதுள்ள முஹியித்தீன் ஜும்ஆ மஸ்ஜிதை அமைப்பதற்காக , பல்வேறு கருத்து முரண்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டபின்னர் அவ்விடத்திலிருந்த தர்கா 1934 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி உடைக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்வரை புதுப்பள்ளி என்று அழைக்கப்படும் ஐதுரூஸ் பள்ளியில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்பட்டது. அக்காலத்தில் , புத்தளம் சோனகர் தலைவர் என்ற முறையில் சி.அ .க .ஹமீது ஹுஸைன் மரைக்கார் இப்பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.
 
பள்ளிவாசல் திறப்பு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.உள்ளூர் மக்கள் மாத்திரமன்றி கொழும்பு உட்பட வெளியூர்களிலிருந்தும் பெருந்திரளாக மக்கள் சமுகமளித்திருந்தனர். ஆண்  பெண் வேறுபாடின்றி அனைவரும் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டு , பள்ளிவாசலைக் கண்டு களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இன்றும்கூட கண்கொள்ளாக் காட்சி தரும் இப்பள்ளிவாசல் அன்றைய மக்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
 
பள்ளிவாசல் திறப்பு விழாவுக்குச் சமுகமளித்த அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.அதனைப் பகிர்ந்தளிப்பதற்காக  பள்ளிவாசலின் படமும்   அதன்மேல் ‘ இலாஹி ‘ என்றும் படத்தின் கீழே ” புத்தளம் முகையதீன் கொத்துபாப் பள்ளி திறப்பு விழா  21.09.1938 ” என்றும் அழகாக அச்சிடப்பட்ட , தரமிக்க படிகத் தாளால் ஆன பெரிய பைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
 
பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்ட சந்தனக்கூடு வைபவம் , இப்பள்ளிவாசல் திறப்பு விழாவோடு எவ்வித பிரச்சினைகளுமின்றி நிறுத்தப்பட்டது.
 
இப்பள்ளிவாசலைக் கட்டும் பொறுப்பு ,  50739 ரூபா 11 சதம் கேள்விப் பத்திரத்தின் மூலம் கொழும்பைச் சேர்ந்த எம்.ஐ.முஹம்மத் என்ற கொந்தராத்துக்காரருக்கு வழங்கப்பட்டது. இப்பள்ளிவாசலின் வரைபடத்தைத் தயாரித்தவர்கள்  ” பில் மோரியா என்ட்  டீ  சில்வா Kariba  ” என்ற நிறுவனத்தினராகும். இதற்காக, திரு B . பில் மோரியா என்பவருக்கு 1600 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இப்பள்ளிவாசல் காலத்துக்குக் காலம் பல்வேறு நிருவாகிகளால் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் பள்ளிவாசல் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலைச் சுற்றிவளைத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் புத்தளம் முஸ்லிம்கள் 7 பேர் பலியாகியமை பெரிய பள்ளியின் வரலாற்றில் மாத்திரமன்றி புத்தளம் வரலாற்றிலும் ஏற்பட்ட கறை படிந்த அத்தியாயமாகும்.
 
இன்றைய கால கட்டத்தில் இப்பள்ளிவாசல் புத்தளம் நகர மக்களுடன் மாத்திரமன்றி ,புத்தளம் பிரதேசத்தின் சகல பள்ளிவாசல்களுடனும் அவற்றின் ஜமாஅத்தாருடனும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது.  மேலும், தனது சமுதாயப் பணிகளை விரிவாக்கி பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
 
இவற்றுள் , ஸக்காத்தை இஸ்லாம் கூறும் வழியில் சேகரித்து விநியோகிக்கும் பணி முக்கியமானதாகும். 1984 ஆம் ஆண்டு 47000 ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிதியம் இப்போது சில இலட்சங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது . எனினும் , புத்தளத்து மக்களின் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது இந்நிதி போதுமானதல்ல. எனவே , ஸக்காத் விதியான நமது சகோதரர்கள் இவ்விடயத்தில் தமது பங்களிப்பை முழுமையாக நல்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
 
புத்தளத்தில் பாரிய நோய்களுக்குள்ளாகி அவற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள நிதி வசதியற்றவர்களுக்கு உதவும் வகையில் வைத்திய சகாய நிதியம் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
 
உயர் கல்வியைப் பெறுவதற்கு நிதி வசதியற்ற பிள்ளைகளுக்கு உதவும் வகையில் புலமைப் பரிசு  வழங்கும் திட்டம் 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
 
1993 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பள்ளிவாசலில் ஹிப்ழு மத்ரஸா ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கான செலவுகளைப் பள்ளிவாசலே பொறுப்பேற்றுள்ளது.
 
பள்ளிவாசலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை , திங்கட்கிழமைகளில் நடைபெறும் பிக்ஹ் மஜ்லிஸில் பிக்ஹ் சம்பந்தமான விடயங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறப்படுகின்றன.சபையினரின் வினாக்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றன.
 
இற்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே புத்தளம் நகரில் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் மீலாத் விழா நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றமை.
 
தனி நபர்கள் அல்லது குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் சிறு சிறு பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் பள்ளிவாசல் நிருவாகம் ஈடுபட்டு வருகின்றது.
 
இலங்கையில் எப்பகுதியிலேனும் இயற்கை அனர்த்தங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது , புத்தளம் வாழ் மக்களால் வழங்கப்படும் உதவிகளை   இன,மத பேதங்கள் பாராமல் உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இப்பள்ளிவாசல் தனது பங்களிப்பை நல்கி வருகின்றது.
குர்பான் விநியோகம் பள்ளிவாசல் மூலம் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டு உதவி திட்டத்தின் கீழ் சிறு இல்லங்கள், கூரையமைப்பு, வீடு திருத்தங்கள் , மலசல கூடங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படுகின்றன.

சுய தொழில் ஊக்குவிப்புத்  திட்டத்தின் கீழ் தொழிலுக்கான ஆரம்ப மூலதனம் வழங்குதல், சிறு வியாபாரத்துக்கான  தள்ளு வண்டி, மரவேலை, ஒட்டு வேலை இயந்திரம், முச்சக்கர வண்டி, மிதி வண்டிகள், சமையல் உபகரணங்கள், மீன் பிடி வள்ளம் , மோட்டார் வண்டி என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 

 
மிக அண்மையில் , புத்தளத்தில் வறிய மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் இப்பள்ளிவாசல் முன்னின்று செயற்பட்டுள்ளது.
வீடமைப்பு, பைதுஸ் ஸகாத் கிராமத்திற்கான காணி கொள்வனவு,  நெறி பிறழ்வானவர்களாக இனங்காணப்பட்டவர்களை  சமூக மயப்படுத்தல், புதிதாக இஸ்லாத்தை தழுவியோருக்கான பயிற்சி மன்றம் அமைத்தல், கைத்தொழில் பயிற்சி நிலையம் அமைத்தல், சனசமூக நிலையம் ஒன்றை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இன்ஷா அல்லாஹ்  எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன
 
இதுபோன்ற இன்னும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளன. எனினும், புத்தளம் வாழ் மக்கள் தொகை ,அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது , எமக்கு ஜமாஅத்தாரினதும்  தனவந்தர்களினதும் ஒத்துழைப்பு இன்னும் இன்னும் அதிகமாகத் தேவை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். எனவே, இப்பணிகளை நிறைவேற்றுவதற்கு நீங்களும் எம்மோடு ஒன்றிணைந்து செயற்பட்டு  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ள முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
 
 இப்பள்ளிவாசலின் வளர்ச்சியில் அதன் ஆரம்ப காலம் தொடக்கம் யார் யாரெல்லாம் சிறிதளவேனும் பெரிய அளவிலேனும் பங்களிப்பை நல்கியிருக்கிறார்களோ அவர்கள் அனைவரினதும் பாவங்களை அல்லாஹ்  தஆலா  மன்னித்து அவர்கள் செய்த நற்கருமங்கள் அனைத்தையும் ஏற்று நற்பாக்கியங்களை இருமையிலும் வழங்கி அருள் புரிவானாக. ஆமீன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All