Puttalam Online
puttalam-news

கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் கடந்த 25 வருடங்கள்

  • 2 November 2013
  • 729 views

  (ஏ.எல்.ஜுனைதீன்)

AMH-2கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் முன்னோடியான கல்முனைக்குடி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 25 வருடங்களில் இதன் துரித வளர்ச்சியையும் மக்கள் சேவையையும் நினைவு  கூறும் முகமாக வெள்ளி விழா வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கல்முனைப் பிரதேசத்தில் மேற்கத்தேய வைத்திய முறையிலான மருந்தகம்  ( தற்போதய ஆதார வைத்தியசாலையின் முன்னோடி ) முதன் முதலாக 1901 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்கத்தேய வைத்திய முறையில் மக்களின் நாட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து இம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரச மருந்தகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் 1952 ஆம் ஆண்டில் சாய்ந்தமருதில் ஒரு அரச மருந்தகம் கட்டப்பட்டு இயங்கியது. இம் மருந்தகத்தில் கடமையாற்றிய வைத்தியர் கல்முனைக்குடிக்கும் வாரத்தில் ஒரு முறை விஜயம் செய்து வைத்தியம் செய்தார்.

சில வருடங்களின் பின்னர் கல்முனைக்குடியிலும் நிரந்தரமாக ஒரு மருந்தகம் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பட்டண சபை வீட்டுத் தொகுதியில் இயங்க ஆரம்பித்தது.

1980 ஆம் ஆண்டில் சாய்ந்தமருது மருந்தகத்துடன் பிரசவ விடுதியும் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வைத்திய சேவைகள் விஸ்த்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைக்குடியிலும் ஒரு பிரசவ விடுதி ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை அங்குள்ள மக்களால் முன் வைக்கப்பட்டது. அன்றைய கலவரச் சூழல்கள் காரணமாக இக் கோரிக்கை மேலும் வலுப்பெற்றததைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர் மன்சூர் அவர்கள் இங்கு பிரசவ விடுதி ஒன்றைக் கட்டுவது எனத் தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டார். (அந்த நேரம் நான் தினபதி / சிந்தாமணி நிருபராக இருந்தபடியால் இது சம்மந்தமான செய்தியை பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள் என  மன்சூர் எம் பி அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் “கல்முனைக்குடியில் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலை. மன்சூர் நடவடிக்கை” என்ற தலைப்பில் அன்று தினபதி நாளிதழில் செய்தியாக எழுதியிருந்தேன். அச் செய்தியைப் படித்த சிலர் இச் செய்தியை நம்பவில்லை. தற்போதய அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை அமைந்துள்ள இடம் அன்றிருந்த நிலையில் இங்கு ஒரு வைத்தியசாலையா என்று இச் செய்தியை எழுதிய என்னையும் மன்சூர் எம்.பி அவர்களையும் என் முன்னாலேயே பரிகாசமாகப் பேசியதையும் இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.)

அக்கால கட்டத்தில் கல்முனைக்குடி மத்திய மருந்தகப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த அல்- ஹாஜ் டாக்டர் எம். ஐ. எம். ஜெமீல் அவர்களின் ஒத்துழைப்புடன் பிரசவ விடுதி கட்டுவதற்கான  நடவடிக்கைகளில் மன்சூர் எம்.பி. அவர்கள் இறங்கினார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி அன்று பிரதம மந்திரியாக பதவி வகித்த ஆர். பிரேமதாச அவர்கள் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இப் பிரசவ விடுதியை கோலாகலமாகத் திறந்து வைத்தார். இவ் வைத்தியசாலையின் முதல் வைத்திய பொறுப்பதிகாரியாக டாக்டர் எம்.ஐ.எம் ஜெமீல் செயல்பட்டார்.

இதேவேளை கடற்கரையில் அமைந்திருந்த மத்திய மருந்தகத்தில் நடைபெற்று வந்த வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவை இங்கு மாற்றுவதில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. எனினும் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் முயற்சியினால் திறப்பு விழா நடந்து ஒரிரு மாதங்களுள் இங்கு வெளி நோயாளர் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. அவ்வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம் எச், எம் அஷ்ரப் அவர்கள் இதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இங்கு ஆரம்பத்தில் குடும்ப நல உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் ஜனாபா சம்சுதீன் என்பவராகும். அத்துடன் டாக்டர் எஸ்.ஆர்.ஏ.எம். மெளலானா டாக்டர், சிவ அன்பு டாக்டர், எம்.எம். லியாகத் அலி, மர்ஹும் டாக்டர் ஏ. றிஸ்வி,  ஆகியோரும் இங்கு கடமையற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

1990 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதம் காரணமாக இவ்வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வேலை செய்வதில் பல சிக்கல்கள் தோன்றியதால் பகல் வேளைகளில் மட்டும் சிகிச்சைகள் நடைபெற்றன. இதன் காரணமாக 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே வழங்கப்பட்டு வந்தன.

1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டாக்டர் ஏ.எல்.எப் றஹ்மான் அவர்கள் இவ் வைத்தியசாலையைப் பொறுப்பு எடுத்ததைத் தொடர்ந்து இவ் வைத்தியசாலை மிக வேகமாக அபிவிருத்தி அடையத் தொடங்கியது.

1995 ஆம் ஆண்டில் சுற்றயற்கூறாகவும் 1996 ஆம் ஆண்டில் மாவட்ட வைத்தியசாலையகவும் 1999 ஆம் ஆண்டில் ஆதார வைத்தியசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டு பின்னர்  2002 ஆம் ஆண்டு அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று ஒரு பொது வைத்தியசாலை வழங்கும் சேவைகளைச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

1995 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரையிலான இவ் வைத்தியசாலையின் துரித வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினது பங்களிப்புடன் அக்கால கட்டத்தில் இயங்கிய வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் செயற்பாடுகள் மிக உன்னதமானது. அதன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் இப்பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். அவர்களில் விசேடமாக டாக்டர் ஏ.எல்.எப் றஹ்மான் அவர்களின் தலைமைத்துவமும் மர்ஹும் டாக்டர் ஏ. எல். எம்.ஜெமீல் அவர்களின் வழிகாட்டல்களும் ஜனாப் எச்,எம்.எம் அமீர் அலி அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கது.

2000 ஆம் ஆண்டின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அகால மரணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினதும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினதும் மற்றும் பல அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடனும் வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடனும் இவ் வைத்தியசாலை மேலும் அபிவிருத்தி அடைந்தது. 2002 ஆம் ஆண்டில் மேலும் தரம் உயர்த்தப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வைத்தியசாலை அபிவிருத்தியிலும் சுனாமியின் பின்னரான பாரிய அபிவிருத்தி வேலைகளிலும் தற்கால வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களினதும் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களினதும் அவர்களோடு இணைந்து செயலாற்றிய டாக்டர் ஆபிதா கையும், டாக்டர் எம்.எஸ். ஜெஸிலுல் இலாஹி, டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் போன்றோரினதும் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது. இவர்கள் அனைவரும் இப் பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் இவ் வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள், தாதிமார்கள், பல்வேறு உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஆகியோர்களின் உன்னத சேவைகள்  இவ் வைத்தியசாலை  தென் கிழக்குப் பிராந்தியத்தில் முதல் தரமாக மிளிர்வதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இவர்களும் இப் பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

எதிர்காலத்தில் இவ் வைத்தியசாலை பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்கு மேலதிகமாக இப் பிரதேச மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் சிக்கல்களையும் குறைகளையும் கண்டறிந்து புதிய பொறி முறைகளுடன் கூடிய நவீன சிகிச்சை வசதிகளை மக்களுக்கு வழங்க முன் வரல் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All