Puttalam Online
puttalam-news

பெண்களின் அறிவியலுக்கோர் முன்மாதிரிஆயிஷா அப்துல் ரஹ்மான் (ரஹ்)

  • 6 December 2013
  • 981 views

மர்லின் மரிக்கார் 

இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகின் சிந்தனை மற்றும் அறிவியல் மறு மலர்ச்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் விரல் விட்டெண்ணிவிடக் கூடிய ஒரு சில பெண்களும் அடங்குவர்.

அந்த வகையில் முஸ்லிம் உலகின் சிந்தனை மற்றும் அறிவியல் மறுமலர்ச்சிக்காகத் தன் சிந்தனையாலும், எழுத்துத் திறமையினாலும் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்தான் ஆயிஷா அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களாவர். அவர் ஒரு பெண்ணாக இருந்தும் இவ்வாறான பங்களிப்பைச் செய்திருப்பது பெரும் சாதனை என்றே கூற வேண்டும்.

முஸ்லிம் உலகின் சிந்தனை மற்றும் அறிவியல் மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்துள்ள இவர் அருள் மறையாம் அல் குர்ஆனின் பல அத்தியாயங்களுக்கு விளக்கவுரை எழுதிய ஓர் தப்kர் ஆசிரியராகவும் விளங்குகின்றார்.

இவ்வாறு முஸ்லிம் உலகிற்குப் பங்களிப்புகளை நல்கித் தனக்கெனத் தனித்துவம் மிக்க இடத்தைப் பெற்றிருக்கும் ஆயிஷா அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் பெண்களின் அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கான ஓர் முன்னுதாரணமாகவும் திகழுகின்றார்.

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் எகிப்து உலகிற்கு அளித்துள்ள புத்திஜீவிகளில் இவரும் ஒருவராவார். எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையோர மாகாணமான ‘தும்யாத்’திலுள்ள ‘திம் ஈதர்’ என்ற ஊரில் வசித்து வந்த இஸ்லாமிய பற்றுமிக்க குடும்பமொன்றில் 1913ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி இவர் பிறந்தார்.

இவரது பாட்டனார் முஸ்லிம் உலகின் முதல் பல்கலைக்கழகமாக விளங்கும் அல் – அஸ்ஹரின் இமாமாக ஒருகாலத்தில் இருந்துள்ளார்.

ஆழமான மார்க்கப்பற்று மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பக் கல்விக்காக இஸ்லாமியக் கல்வி நிறுவனமொன்றில் அவரது பெற்றோரால் சேர்க்கப்பட்டார். அங்கு கற்றுக்கொண்டிருந்த ஆயிஷா பத்து வயதாகும் போது அறபு இலக்கியத்தில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அதேநேரம் அவரது பெற்றோர் அவரை மேற்படிப்புக்காக அல் மன்சூராத் நகருக்கு அனுப்பி வைத்தனர். அது எகிப்தின் பழைய நகர்களில் ஒன்றாகும். அங்கு கல்வியை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்ட ஆயிஷா பல்கலைக்கழகக் கல்விக்காக கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.  அங்கு அறபு மொழி கற்கையை அவர் மேற்கொண்டார்.

இதே காலப் பகுதியில் ஆயிஷா எழுத்துத்துறையிலும் அதிக கவனம் செலுத்தினார். அவரது முதலாவது கட்டுரை 1935ம் ஆண்டில் உள்ளூர்ப் பத்திரிகையொன்றில் பிரசுரமானது. அக்கட்டுரை எகிப்திய ஏழை விவசாயிகளின் உணர்வுகளையும், அவலங்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருந்தது. அதனால் அக்கட்டுரை அன்றைய காலகட்டத்தில் பெரிதும் கலந்துரையாடப்பட்டது.

எனினும் அறபு இலக்கியத்தின் மீதும், எழுத்துத் துறையின் மீதும் ஆயிஷாவிடம் காணப்பட்ட ஆர்வத்தையும், சிரத்தையையும் அவதானித்த அவரது பாட்டனார் அவரை அத்துறைகளில் ஊக்குவிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயதோ 22 ஆகும்.

என்றாலும் அன்றைய கால கட்டத்தில் பெண்களின் பெயர்கள் பகிரங்கமாகக் குறிப்பிடப்படுவதும், எழுதப்படுவதும் எகிப்தில் தடை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் தமது உணர்வுகளையும் உளக்கிடக்கைகளையும் எழுத்தில் வடித்தெடுத்தாலும் அதனை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆயிஷா ஆழ அகலமாகச் சிந்தித்தார்.

அப்போது தான் மத்திய கிழக்கின் மிகப் பழைமையான பத்திரிகையாக விளங்கும் ‘அல் அஹ்ரம்’ புனைப் பெயரில் எழுதுவதற்கு அவருக்குக் களம் வழங்க முன் வந்தது. அந்தவகையில் அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள நைல் நதியை அடையாளப்படுத்தி ‘பிந்த் அல் ஷாதி’ (நதிக் கரையின் மகள்) என்ற புனை பெயரில் எழுதத் தொடங்கினார். அத்தோடு அல் நதா அல் நஸரிய்யா’ (பெண் மறுமலர்ச்சி) என்ற சஞ்சிகையிலும் அவர் புனைப்பெயரில் எழுதினார்.

பெண்கள் தொடர்பான மூடக் கொள்கை பரவி மிக இறுக்கமான ஒழுங்கு விதிகள் காணப்பட்ட போதிலும் எழுத்துத் துறையில் பிரவேசித்த ஆயிஷா தமது உயர் கல்வி நடவடிக்கைகளையும் தொடரவே செய்தார். மாறாக அவர் ஒரு போதும் கல்வி நடவடிக்கைகளை இடைநடுவில் நிறுத்தவில்லை.

அந்தவகையில் 1939ம் ஆண்டில் அவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் அறபு மொழித் துறைப் பட்டதாரியானார். இதே காலப் பகுதியில் அவர் அப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய அமீன் அல் கெளலியுடன் மணவாழ்க்கையில் இணைந்தார். இதன் மூலம் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாரானார். ஆனபோதிலும் அவர் தொடர்ந்தும் கற்று 1941ம் ஆண்டில் முதுமாணிப் பட்டதாரியானார்.

அதனைத் தொடர்ந்து எகிப்திய கல்வி அமைச்சு அறபு இலக்கியப் பாடக் கண்காணிப்பாளராக 1942 ல் அவரை நியமித்தது.

குடும்பப் பொறுப்பு, பிள்ளைகளின் பணிகள், அரச தொழில் பொறுப்பு என்பன ஆயிஷாவைச் சூழ்ந்து கொண்ட போதிலும் அவர் எழுதுவதையும், கல்வி நடவடிக்கைகளைத் தொடருவதையும் ஒரு போதும் இடைநிறுத்தவில்லை. அந்தடிப்படையில் 1950ம் ஆண்டில் சிறந்த முறையில் சித்தியடைந்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் எகிப்தின் மூன்றாவது பழைய பல்கலைக்கழகமான ஐன்சம்ஸில் இலக்கியத் துறை பேராசிரியராக நியமனம் பெற்றார்.

இதே காலப் பகுதியில் பெண்நிலைவாத அமைப்புக்கள் எகிப்தில் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தன. இருந்தும் பெண்களுக்குக் குரல் கொடுக்கக் கூடியவராகவும் விளங்கிய ஆயிஷா அந்த அமைப்புகளில் பங்குபற்றுவதை முழுமையாகத் தவிர்த்துக் கொண்டார். என்றாலும் நஜீப் மஃபூஸ் என்ற பெண்நிலைவாதி இஸ்லாம் குறித்து விமர்சன ரீதியாக எழுதி வந்தார். அவரது விமர்சனங்களுக்கு அல்குர்ஆனின் நிழலில் ஆயிஷா தக்க பதிலளித்தார்.

இவர் அல் குர்ஆன் தொடர்பாகவும், இஸ்லாமிய ஷரிஆவில் பெண்கள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அந்நூல்கள் அதிக கவனயீர்ப்பைப் பெற்றன.

அல் – குர்ஆனின் அற்புதம், அல் குர்ஆனும் சுதந்திரமும், அல் – குர்ஆனும் மனித உரிமைகளும், ரசூல் (ஸல் அவர்களின் மனைவிமார், ரசூல் (ஸல்) அவர்களின் பிள்ளைகள் ஆகியன அவரது குறிப்பிட்டுக்கூறக் கூடிய நூல்களாகும். அத்தோடு எகிப்தின் நாட்டுப்புறம், விவசாயிகளின் பிரச்சினை, கரையோரத்தின் இரகசியம், அறபு இலக்கியத்தின் புதிய பரிமாணங்கள், சமகால அறபு பெண் கவிஞைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இதேவேளை ஒரே நேரத்தில் ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், நூல்களின், ஆசிரியராகவும், கவிஞையாகவும், பெண்களுக்குக் குரல் கொடுப்பவராகவும், இலக்கிய பேராசிரியராகவும் விளங்கிய ஆயிஷா அப்துர் ரஹ்மான் அல்குர்ஆனின் ஜுஸ¤உ அம்ம உள்ளிட்ட பல அத்தியாயங்களுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். அதுவே ‘அத் தப்kருல் பயானி தில் குர்ஆனில் கரீம்’ ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் தனித்துவம் மிக்க தப்kர்களில் ஒன்றாக விளங்குகின்றது.

அருள் மறையாம் அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவது என்பது இலேசான காரியமல்ல. அதற்கு ஆழ அகலமான பரந்த அறிவும், சிந்தனைத் தெளிவும் மிகவும் இன்றியமையாதது. அந்தவகையில் ஆயிஷா தப்kர்த் துறைக்குப் பங்களிப்புச் செய்த முப்பஸ்ஸிர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.

இவ்வாறு இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்து வந்த முஸ்லிம் பெண் ஆளுமையான ஆயிஷா இரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதத்திற்கு உள்ளாகி 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி தமது 85வது வயதில் கெய்ரோவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு பெண் குடும்ப மற்றும் வீட்டுப் பொறுப்புகளுக்கு மத்தியில் ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞையாகவும், பெண்களுக்குக் குரல் கொடுப்பவராகவும், நூல்களின் ஆசிரியராகவும், இலக்கியப் பேராசிரியராகவும், அல் குர்ஆன் விளக்கவுரையாளராகவும் எனப் பன்முக ஆளுமை பெற்றவராக ஒரே நேரத்தில் திகழுவது இலகுவான காரியமல்ல. ஆயிஷா அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் பெண்களின் அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கான ஓர் முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

SAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All