Puttalam Online
puttalam-news

எத்தகைய விசாரணைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்?

  • 27 March 2014
  • 1,413 views

நேர்காணல்: ஸிராஜ் எம். ஸாஜஹான்

dayaan jayatilaka28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியுறும் பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடுமென பிரபல அரசியல் ஆய்வாளரும் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். 

இது தொடர்பில் எமது டெய்லி ஸிலோன் இணையத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கேள்வி: ஜெனீவா பிரேரணை வாக்கெடுப்பில் இலங்கைக்கு என்ன நடக்கும்? 

பதில்: எனது கருத்துப்படி இலங்கை மோஷமான தோல்வியை எதிர்கொள்ளும். கடந்த முறை ஏற்பட்டதை விட மிக மோஷமான தோல்விக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும். 

கேள்வி: நாடுகளின் ஆதரவு எவ்வாறிருக்கும்? 

பதில்: ஏறத்தாழ 15 நாடுகள் அல்லது அதற்குக் குறைவான நாடுகளே இலங்கைக்கு ஆதரவான போக்கினைக் கொண்டிருக்கும். ஒரு சில அரபு நாடுகளும், ஆசிய இலத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். பெரும்பாலான நாடுகள் நடு நிலைமையைக் கையாளக் கூடும். 

கேள்வி: இலங்கை தோல்வியுற்றால் என்ன நடக்கும்? 

பதில்: சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். கடந்த முறை தோல்வியை விட இந்தத் தோல்வி கடுமையான விளைவுகளைத் தோற்றுவிக்கும். இந்த விளைவுகள் இலங்கையின் எதிர்காலத்தை முழுமையாகப் பாதிக்கும் செயற்பாடாகவும் அமையக் கூடும். 

கேள்வி: எத்தகைய விசாரணைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்? 

பதில்: இறுதிக்கட்ட யுத்தம், யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணை, அதிகாரம் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கப்படும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரவை இலங்கைக்கெதிராக முழுமையான விசாரணைகளை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுக்கும். 

கேள்வி: சர்வதேச விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும்? 

பதில்: இலங்கைக்கெதிரான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணை கிடைக்கப் பெற்றதும் சர்வதேச நிறுவனமொன்றிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஐ.நா மனித உரிமைப் பேரவை இந்த விசாரணைகளை நேரடியாக முன்னெடுக்காது. ஐ.நா மனித உரிமைப் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சர்வதேச நிறுவனம் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் ஏஜென்டாகக் கூட இருக்கலாம். இந்த நிறுவனம் 2002 முதல் 2009 வரை இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட சகலவிதமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் பூரணமான விசாரணைகளை மேற்கொள்ளும். இந்த விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் பின்னர் கையளிக்கப்படும். 

கேள்வி: விசாரணைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? 

பதில்: அதுகுறித்து சர்வதேச மனித உரிமைப் பேரவை காலக்கெடுவொன்றினைத் தீர்மானிக்கும். ஏறத்தாழ ஒருவருட காலமாக இருக்கலாம். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், செயற்பாடுகள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2015 மார்ச்சில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எதிர்வரும் செப்டெம்பரில் விசாரணைகள் தொடர்பான வாய் மூலத் தகவல்களை மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். 

கேள்வி: அப்படியானால் அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு எமக்குப் பிரச்சினைகள் இருக்காதா? 

பதில்: அப்படிச் சொல்ல முடியாது. சர்வதேச விசாரணையொன்று ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். இது சர்வதேச முதலீடுகளைப் பாதிக்கும். பொருளாதார ரீதியிலான இழப்புக்களையும் எதிர்கொள்ள நேரிடும். 

கேள்வி: இலங்கைக்கெதிராக சில நாடுகள் தனிப்பட்ட முறையில் தடைகளைக் கொண்டு வருமா? 

பதில்: சிலவேளை, அவ்வாறு நடக்கவும் கூடும். இது அந்தந்த நாடுகளைப் பொறுத்த விடயம். சில நாடுகளின் பாராளுமன்றங்களில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படலாம். இப்பிரேரணைகள் ஏற்கப்பட்டால் இலங்கை மீது சில தடைகள் கூட முன்னெடுக்கப்படவும் கூடும். 

கேள்வி: அதாவது இப்போதைக்கு மோஷமான பாதிப்புகள் கிடையாது என்கிறீர்கள்? 

பதில்: 28 ஆம் திகதி பிரேரணை வென்றதும் இலங்கைக்கெதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்த விசாரணை அறிக்கை இலங்கைக்குப் பாதகமாக இருக்கும் பட்சத்தில் 2015 மார்ச்சில் இலங்கை மீது எத்தகைய தடைகள், தண்டனைகள் வழங்கப்படும் என்பது பற்றித் தீர்மானிக்கப்படும்.

 

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All