Puttalam Online
puttalam-news

பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்.)

 கௌரவ மிகு,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளி, முஸ்லிம் சமய கலச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் உட்பட சகல இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள், ஜமாஅத்துக்களின் தலைவர்கள், பிரசித்தமான இஸ்லாமிய கல்வி நிலையங்கள், மத்ரஸாக்களின் தலைவர்கள், நாடறிந்த உலமாப் பெருமக்கள், இஸ்லாமிய அறிஞர்கள், சமூக சமய ஈடுபாடு கொண்ட பிரபலங்கள், புத்தி ஜீவிகள் அனைவரினதும் கவனத்திற்கு இது சமர்ப்பிக்கப்படுகின்றது.

பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்.

கடந்த பல மாதங்களுக்கு முன் மேற்குறிப்படப்பட்டிக்கும் பிரமுகர்களில் அதிகமானோருக்கு எங்களால் வெளியிடப்பட்ட ‘இஸ்லாமிய காலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்’ என்ற பிரசுரம் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியினரினால் வெளியிடப்பட்ட ஹிஜ்ரி காலண்டரும் வழங்கப்பட்டது. மேற்படி பிரசுரம் தொடர்பாக யாரும் சாதகமாகவோ, பாதகமாகவோ எக்கருத்தையும் வெளியிடவில்லை. 2013. 10. 30ந் திகதியிடப்பட்ட கடித மூலம் மேற்படி ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள காலண்டர் தொடர்பாக தாங்கள் தங்களது நிலைப்பாட்டை கூறும்படி வேண்டப்பட்டது. அதற்கும் மேற்குறித்த சமூக பொறுப்பாளர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. நாங்கள் தான் சமூகத்திற்கு வழிகாட்டுகின்றோம் என்று எண்ணிக்கொண்டும், காட்டிக்கொண்டும் இருப்பவர்களின் நிலைப்பாடுதான் என்னவோ?

 நாட்டுக்கு பிறையை அறிவித்து இஸ்லாமிய மாதம் தொடங்குவதை அறிவிக்கும் பொறுப்பை எடுத்துள்ளவர்கள் மாதா மாதம் மிகப்பிழையான திகதியை அறிவித்து வருகின்றனர். இக்குறைபாட்டையும் கூட நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்துள்ளோம். அவர்கள் அதனை ஏற்பதாகவோ அல்லது தங்கள் நிலைப்பாட்டுக்கு ஷரிஆ ரீதியான ஆதாரங்களை முன்வைத்து நிறுவ முன்வருவதாகவோ இல்லை. இப்பிழையான அறிவிப்பை பிரதியட்சமாக நீங்;கள் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு உத்தியை இன்ஷh அல்லாஹ் இம்மடலின் இறுதியில் தருவோம்.

 அதிகாரம் பெற்ற மேற்படி குழுவின் நிலைப்பாட்டால் வருடந்தோறும் நோன்பை ஆரம்பிப்பதிலும், பெருநாட்களைத் தீர்மானிப்பதிலும் சர்ச்சைப்படுவதை நாம் நன்கறிந்தே இருக்கின்றோம். சர்ச்சைகள் முற்றி தவிர்க்க முடியாத நிலை வரும்போது, இருநாட்களில் பெருநாட்கள் கொண்டாடவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இது ஷரிஆ அங்கீகரித்த வழிமுறைதானா? றசூல் (ஸல்) அவர்கள் எங்களை விட்டுச்சென்ற தெட்டத்தெளிவான பாதை அதன் இரவும் பகல் போன்று பிரகாசிக்கும் பாதை இதுதானா? (பார்க்க முஸ்னத் அஹமத் : 16813)

பொறுப்பை சுமந்துள்ள குழுவும், நாடறிந்த உலமா பெருந்தகைகளும் இதற்கு என்ன நியாயம் கற்பிப்பார்கள். பூமிக்கு நிலவு ஒன்றே! அல்லாஹ் அதன் ஒவ்வொரு படித்தரத்தையும், ஒவ்வொரு நாளுக்கு நிர்ணயித்து காலண்டரை அறிவித்துவிட்டான். (பார்க்க அல்குர்ஆன் – 02:189, 10:05, 36:39) இந்நிலையில் உள்நாட்டுப் பிறை, வெளிநாட்டுப் பிறை, சர்வதேசப் பிறை என அர்த்தமற்ற மரபு ரீதியான வாதப் பிரதிவாதங்களையே எல்லா மட்டங்களிலும் பேசி யதார்த்தங்களை விளங்கிக்கொள்ள தாமும் முற்படாது மற்றவர்களும் விளங்கிப் பின்பற்ற தடையாக இருந்து வருகிறீர்கள்.

உரிய தினத்தில்தான் உரிய இபாதத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் அது நிறைவேறும். அல்லாஹ் நிர்ணயித்த தினத்தை விட்டுவிட்டு யாரோ நிர்ணயித்த தினத்தில் நிறைவேற்றுவது இபாதத் ஆகுமா? இத்தடன் இணைத்துள்ள பிரசுரம் படிபபறிவுள்ள அனைத்து முஸ்லிமான ஆண்களும், பெண்களும், மாணவ, மாணவிகளும் விளங்கிக்கொள்ள முடியுமான முறையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது. படித்து விளங்கி தெளிவு பெற்று நடைமுறைப்படுத்துவது உங்களது பொறுப்பு. இப்பிரசுரத்தில் தெளிவின்மை இருந்தால் தொலைபேசியூடாக தெளிவுபெற முடியும்.

 குறிப்பு : மேற்குறிப்பிட்ட உத்தி இதோ, இன்ஷh அல்லாஹ் இம்மாதம் 14ந் திகதி (திங்கட்கிழமை) சூரியன் அஸ்தமித்ததும் பூரண (பௌர்ணமி) நிலவு கிழக்கு வானில் தோன்றும் அதனைப் பார்க்கவும். பிறை 15 என்பதற்கு இதுவே ஆதாரம். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அவர்களின் வழக்கப்பிரகாரம் 16ந் திகதி (புதன் கிழமை) பிறை 15 என அறிவிக்கும் அப்போது பிறையை அவதானிக்கவும். தேய் பிறை 17ஐச் சந்திப்பீர்கள். அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சியை யாரால்தான் மறைக்க முடியும். (அல்குர்ஆன் – 6:104, 10:101, 3:190-194)

 ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் ஆகிர் மாத முதல் பிறை இவ்வருட 31. 03. 2014 திங்கள் பஜ்ரோடு ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஜமாத்துல் ஆகிர் மாத முதல் பிறையை 02. 04. 2014 (புதன்கிழமை) என அறிவித்தது. இரண்டு நாட்கள் முரண்பாடு இப்போது வானில் மிகத் தெளிவாக தெரிகிறது இதுதான் உண்மை.

01. எங்களின் முதல் பிரசுரமும், 1435ற்கான ஹிஜ்ரி காலண்டரும் தேவையானோர் முகவரி எழுதப்பட்டு முத்திரையிடப்பட்ட கடிதஉறையை கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

 To
Ibrahim Nisar
VIRF, 29A, Viruthodai,
Madurankuli.

 02. இப்பிரசுரத்தை அறிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

03. அதனை www.puttalamonline.com இணையத்தளத்தில் இது தொடர்பான விளக்கங்களை ஒளி, ஒலி வடிவில் பார்க்கவும், படிக்கவும், கேட்கவும் முடியும். அல்லது 077-3171726,  077-9772938.

04. மேலும், விளக்கங்களுக்கு www.mooncalendar.in இணையதளம் ஊடாகவோ அல்லது   +91 9500794544, +91 9994344292

————————————————————————————————————————————————————–

 ஒரு பத்திரிகை செய்தி (17.02.2014 தினகரன்)

“அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் படி 26% மான அமெரிக்கர்கள் சூரியனை பூமி சுற்றுகிறது என்பதை அறிந்திருக்கவில்லை” என்பது புலனாகியுள்ளது.

நாம் (முஸ்லிம்கள்) அறிந்திருக்க வேண்டிய சில எளிய உண்மைகள்:

 1. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது.
 2. பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 ¼ நாட்கள் ஆகின்றன.
 3. அல்லாஹ்   பூமியை  தன்னைத்தான் மேற்கு, கிழக்காக சுழலச்  செய்துள்ளான் . இதனால் இரவு பகல் ஏற்படுகின்றது (24 மணி நேரம்).
 4. பூமியை சந்திரன் சுற்றி வருகின்றது.
 5. பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வர 29.53 நாட்கள் ஆகின்றது.
 6. பூமியைச் சுற்றும் சந்திரன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உருவ அமைப்பில் அல்லது படித்தரத்தில் காணப்படும்.
 7.  இவ்வொவ்வரு படித்தரமும் குறிப்பிட்ட ஒரு கிழமையின் (Particular Date) தேதியைத் தெரிவிப்பதாகும். (அல்குர்ஆன் 2:189). அதாவது வெள்ளிக்கிழமையில் தென்படும் பிறை அந்த வெள்ளிக் கிழமையின் தேதியைத் தான் காட்டுகின்றது.
 8. ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் இருக்கின்றதெனில் அந்த மாதத்தில் 28 பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் அவதானிக்கலாம். அதுபோன்று ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் எனின் 29 பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் காணலாம்.
 9. ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் பிறை புறக்கண்களுக்குத் தெரியாமால் பொதுவாக மறைக்கப்படும். இதுவே புவிமைய சங்கமநாள் (Geocentric Conjunction) எனப்படும்.
 10. சங்கமம் என்பது சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரு தளத்திலோ (Same Plane) ஒரே நேர்கோட்டிலோ (Straight Line) வரும்போது ஏற்படும் ஒரு நிகழ்வாகும். இச்சங்கம நிகழ்வைத்தான் அமாவாசை (நியூமூன்) என்று பொதுவாக அழைக்கின்றனர். இந்த நிகழ்வு நடைபெறும் நாளை கும்ம, கும்மிய, உஃமிய, கபி(கு)ய, க(பு)ம்மிய, ஹஃபிய மற்றும் குபிய போன்ற பதங்களால் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 11. இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  – (புகாரி 1913, முஸ்லிம்)
 12. இதன்படி இஸ்லாமிய வருடம் 354 அல்லது 355 நாட்களே. ஒவ்வொரு மாதத்திலும் இறுதியாகத் தென்படும் சந்திரனின் படித்தரங்களுடன் மறைக்கப்படும் நாளையும் கூட்டினால் மாதத்தின் நாட்களின் எண்ணிக்கை 29 அல்லது 30 தாக வரும். ரஸூல் (ஸல்) அவர்களின் கூற்றும் அதுவே.
 13. புறக்கண்களால் பார்க்கவியலும் பிறையின் இறுதி வடிவமான ‘உர்ஜூனுல் கதீம்’ (36:39) தென்படும் நாளுக்கு அடுத்த நாள் தான் சந்திர மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கம நாள். இந்த சங்கம நாளில் பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும். இந்த சங்கம நாளுக்கு அடுத்த நாள் தான் புதிய மாதத்தின் முதல் நாளாகும்.
 14. ஒவ்வொரு மாதமும் பிறையின் இறுதி படித்தரத்தை பஜ்ரின் பின்னர் கிழக்கு அடிவானத்தில் அவதானிக்கலாம். 29 நாட்களைக் கொண்ட மாதமாக இருந்தால் 28ம் தினமன்று பஜ்ரின் பின்பும், 30 நாட்களைக்கொண்ட மாதமாக இருந்தால் 29ம் தினத்தின் பஜ்ரின் பின்பும் தென்படும். தேய் பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்போது இதன் காட்சியைக் காணலாம்.
 15. சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றது. அதுபோலலே சந்திரனும் கிழக்குத் திசையில் உதித்து மேற்கில் மறைகின்றது. இதுவே நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். இதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் பூரண நிலவு (அதாவது பௌர்ணமி தினம்) அன்று சூரியன் மேற்கில் மறையும் மஃரிபு வேளையில் பூரண நிலவு கிழக்கில் உதயமாவதைக் காணலாம். அந்த நிலவு சுமார் 12 மணிநேரங்கள் காட்சியளித்துக் கொண்டு மேற்குத் திசையில் மறைவதைக் காணலாம்.
 16. பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் சுழற்சிப் பாதையில் அல்லாஹ் பல மனாஸிலை (தங்குமிடங்களை) சந்திரனுக்கு ஏற்படுத்தியுள்ளான். பிறையில் அந்த ஒவ்வொரு மன்ஸிலும் குறிப்பிட்ட ஒவ்வொரு கிழமைக்குரிய தேதியாகும்.
 17. சங்கமத்தைத் தொடர்ந்து வெளிப்படும் முதல் நாள் பிறையானது, அது மறையும் போது பூமியிலிருந்து பார்ப்பவருக்கு எங்காவது சில வேளை சூரிய அஸ்தமனத்தின் பின் சில நிமிடங்கள் தென்பட்டு மறையலாம். அது அந்த நாளுக்குரிய பிறையாகும் (அடுத்த நாளுக்குரியதல்ல). (ஸஹீஹ் முஸ்லிம்; – 1885) அறிவிப்பவர் அபுல்பக்தரி (ரழி)
 18. அடுத்த நாள் பிறை மறையும் போது நாம் புறக்கண்களால் பார்க்கையில் வடிவத்தில் சற்று பெரிதாகவும்  முந்தைய நாள் காட்சியளித்ததைவிட சற்று உயரத்திலும் தென்படும். மேலும் இந்தப் பிறையானது முந்தைய நாளின் பிறையைவிட சில நிமிடங்கள் அதிகமாக நின்று காட்சியளித்து மேற்கு திசையில் மறைவதைக் காணலாம். நாம் எந்த கிழமையில் பிறையை காண்கின்றோமோ அது குறிப்பிட்ட அந்தக் கிழமைக்குரிய பிறையேயாகும், அடுத்த நாளுக்குரியதல்ல.
 19. சங்கமம் நிகழ்ந்த மறு நிமிடமே சந்திரன் பூமியை நோக்கிய தனது புதிய சுற்றை ஆரம்பித்து விடுகிறது. இந்த சங்கநாளுக்கு New Moon Day என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இந்த New Moon Day க்கு அடுத்து வரும் ஃபஜ்ரு வேளையிலிருந்து இஸ்லாமிய சந்திர மாதத்தில் முதல் தினம் துவங்குகிறது.
 20. இஸ்லாமிய புதிய மாதத்தை ஆரம்பிப்பதற்காக முதற்பிறையை புறக்கண்களால் தேடுவோர் பெரும்பாலும் 2ம் நாள் மறையும் பிறையையே தரிசிக்கின்றனர். இப்பேருண்மையை பலர் சிந்திப்பதாகவோ ஏற்பதாகவோ இல்லை. மாறாக இவ்வாறு தென்படும் 2ம் நாள் பிறையை அல்லது 1ம் நாள் பிறையை அடுத்த நாளுக்குரிய பிறையாக பிரகடனம் செய்கின்றனர். இந்டைமுறைக்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரம் கிடையாது.
 21. கிறிஸ்தவர்கள் தங்களின் நாட்காட்டியின்படி ஒவ்வொரு நாளையும் நடுநிசியிலிருந்து (இரவு 12:00 மணியிலிருந்து) ஆரம்பிக்கின்றனர். யூதர்கள் தங்களின் ஹீப்ரு கலண்டரின்படி ஒவ்வொரு நாளையும் மஃரிபிலிருந்து அதாவது சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கின்றனர். இந்துக்கள் சூரிய உதயத்தின் போது தங்களுடைய நாளை ஆரம்பிக்கின்றனர். முஸ்லிம்களாகிய நாம் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல் படி ஒவ்வொரு நாளையும் ஃபஜ்ரு வேளையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
 22. ஒரு நாளின் முதல் தொழுகை ஃபஜ்ர், நடுத் தொழுகை அஸர். முஸ்லிம்களுக்கு நாள் ஃபஜ்ரில் ஆரம்பிக்கின்றது. குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல ஆதாரங்கள் உண்டு.
 23. முஸ்லிம்களில் பலர் நாள் மஃரிபில் ஆரம்பிக்கின்றது என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். குர்;ஆனிலோ, ஹதீஸிலோ இதற்கு ஆதாரமில்லை. மஃரிபின் பின் பிறை பார்க்கும் பழக்கமே இப்பிழையான கருத்து ஏற்படக் காரணமாகும்.
 24. பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தே தினமும் நாள் துவக்குகிறது. அந்த இடமே உலகத் தேதிக்கோடாகும் (International Dateline). உலகில் எப்போதுமே இரு தேதிகள் இருந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்களின் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும் அருகருகே நடைபெற்று கிழமைகள் மாறும் பகுதியாகவும் அந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதியே அமைந்துள்ளது.
 25. புரியும்படி சொன்னால், அமெரிக்கன்சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளின் பகுதிகளை இந்த சர்வதேசத்தேதிக் கோடு பிரிக்கிறது. ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அமெரிக்கன்சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ் இருப்பர். அந்த ஒரேசூரியனை அவ்விரு நாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.
 26. அந்த இருநாட்டவரும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு கிழமைகளுக்கு உரியவர்களாக இருப்பதைத்தான் ‘ரப்புல் மஷ்ரிக்கைனி வரப்புல் மஃரிபைன்’ (55:17) என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். அந்த சர்வதேசக் கோட்டுப் பகுதியை ஒரு நாளின் ஆரம்ப பகுதியாகவும், முடியும் பகுதியாகவும் கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத கடல் பகுதியாக அல்லாஹ் அமைத்துள்ளான்.
 • பல வருடங்களின் கணக்கை சந்திரனின் படித்தரங்களைக் கணக்கிட்டு அறிந்து கொண்டு நாட்காட்டியை தயார் செய்வதற்கு அல்குர்ஆன் (10:5) வலியுறுத்துகிறது.
 • சூரியனும், சந்திரனும் கணக்கின் படியே உள்ளன (55:5) என்று அல்குர்ஆன் கணக்கிடுதலின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
 • உலகைப் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்ற  அல்குர்ஆன் (9:36) வசனத்தின் மூலம் நாட்காட்டியின் ஒரு வருடத்திற்குரிய மாதங்களின் எண்ணிக்கை வரையறுக்கப் பட்டுவிட்டன.
 • மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்ற இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் போதனைபடி ஒரு மாதத்திற்கு இருக்க வேண்டிய நாட்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு விட்டன.
 • ஒவ்வொரு நாட்களுக்கும் சந்திரனின் படித்தரங்கள் தேதிகளைச் சரியாக காட்டும். அதில் மாற்றம் செய்வது குஃப்ரு அதாவது இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் (9:37) என்கிறது அல்குர்ஆன்.
 • புவிமைய சங்கமம் ஏற்பட்டு சந்திரனின் ஒளி பூமிக்கு வராத நிலைபற்றி இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கும்ம, கும்மிய, உஃமிய, கபி(கு)ய, க(பு)ம்மிய, ஹஃபிய மற்றும் குபிய போன்ற ஆழமான கருத்துக்கள் நிறைந்த சொற்களால் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள்.
 • ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கையை 29 அல்லது 30 என்ற நபி (ஸல்) அவர்கள் கட்டளைக்கு முரணாக 28 நாட்கள் என்றோ, 31 நாட்களாகவோ தீர்மானிக்கக் கூடாது என்பதே அல்லாஹ்வுடைய, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையாகும்.
 • முஸ்லிம்களாகிய நாம் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல் படி  நமது கிப்லாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கிழமையையும் ‘ஃபஜ்ரு’ நேரத்திலிருந்தே ஆரம்பித்து நபி(ஸல்) அவர்களுக்கு சாட்சி பகர வேண்டும்(2:142,143).
 • இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக கிரிகோரியன் நாட்காட்டி என்ற ஒன்றை தயாரித்துள்ளனர்.  அதில் பல்வேறு குளறுபடிகளையும் செய்துள்ளனர்.
 • அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர்.
 • அல்லாஹ் இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைத் துல்லியமானதாகவும், தவறுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும் பாதுகாத்துள்ளான் – அல்ஹம்துலில்லாஹ்.
 • அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாக தயாரிக்கப்பட்டுள்ள கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியனின் நாட்காட்டி மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த ஒன்றாகும். என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
 • அல்லாஹ் இப்பிரபஞ்சத்தை படைத்தபோதே மனிதர்களுக்கான நாட்காட்டியை பிறைகளின் படித்தரங்களை வைத்து அந்தந்த நாட்களுக்கான அத்தாட்சிகளாக்கி நிர்ணயித்தும் விட்டான். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித குளறுபடிகளுமில்லை. இந்நிலையில் பிறைக் காட்சியை யார் பார்த்தார்? எப்போது பார்த்தார்? எங்கு பார்த்தார்? ஏன விவாதித்து நாட்களை சுயநிர்ணயம் செய்ய அதிகாரம் எவருக்குமில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 இறுதியாக மேற்கூறியவைகள் அனைத்தும் வஹியின் வழிகாட்டல்களும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுமாகும். அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

வெளியீடு

(VIRF) விருதோடை இஸ்லாமிய ஆய்வு நிலையம்
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

 

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/


One thought on “பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்.

 1. […] பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்… […]

Leave a Reply to பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல் II | PuttalamOnline Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All