Puttalam Online
star-person

இந்நாட்டின் திறைசேரியினைக் காத்து நின்றார் – புத்தளத்தின் நெய்னா மரைக்கார்

  • 24 April 2014
  • 1,509 views

பரிஸ்டர் நெய்னா மரைக்கார் பௌன்டேஷன் புத்தளத்தில் சமூக மற்றும் கல்விப் பணிகளில் ஆக்கபூர்வமான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதன் செயலாளர் A.W.M  சகீன் அவர்களின் அயராத முயற்சியினால் வருடந்தோறும் கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், பாராட்டு வைபவங்கள் மற்றும் கருத்தரங்குகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த வகையில், பரிஸ்டர் நெய்னா மரைக்கார் பௌன்டேஷன் புத்தளத்திலுள்ள சிங்கள, ஹிந்து முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான வருடாந்த கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றினை கடந்த 2014.03.30 ஆம் திகதி சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் நடாத்தியது.

அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹசீப் நெய்னா மரைக்கார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அர்மஷ் இனாமுல் ஹசன் மற்றும்அஹ்னப் முஸ்னி ஆகியோரினால் வழங்கப்பட்ட நெய்னா மரைக்கார் அவர்கள் பற்றிய உரைச்சித்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததுடன் சபையோரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

—————————————————————————————————————————-

Naina Marikkar

அர்:- அவைக்கு மகுடமாய் வீற்றிருக்கும் பரிஸ்டர் நெய்னா மரைக்கார் பௌன்டேஷன் தலைவர் அவர்களே!

அவர்களின் குடும்ப அங்கத்தவர்களே! இந்த மன்றத்தை வெற்றிப் பாதையில் வீருநடை போடவைத்துக் கொண்டிருக்கும் அதன் உறுப்பினர்களே!

சிறப்பு விருந்தினர்களே! பெற்றோர்களே! பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

அஹ்:- கல்வி எனும் ஆழ்கடலில் நீந்தி அறிவு எனும் அழகிய முத்துக்களை சுமந்து கொண்டிருக்கும் மாணவர்களே! நிச்சயமாக உங்களை பாராட்டி கௌரவப்படுத்தி ஊக்குவிப்பது இந்த சமூகத்தின் கடமையாகும். இவ்வாரான ஊக்குவிப்பு பணிகளை செய்து வரும் பரிஸ்டர் நெய்னா மரைக்கார் பௌன்டேஷனுக்கு முதலில் நமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அர்:- அது சரி நீங்கள் என்ன? ஆரம்பத்திலேயே நன்றியுறையை கூறுகிறீர்கள். நன்றியுறை கூட்டத்தின் இறுதியில் தானே கூறுவார்கள்.

அஹ்:- உண்மைதான், நன்றியை இறுதியில் தான் கூறுவார்கள். ஆனால் நமது ஊரில் கூட்டத்தின் இறுதியில் நன்றியுறை கூறினால் மண்டபத்தில் இருக்கும் கதிரைகளுக்கும் மேசைகளுக்கும் தான் கூறவேண்டும். அப்படித்தானே !

அர்:-  ஆம் சரியாக சொன்னீர்கள். உங்கள் வாயில் சீனியைதான் போட வேண்டும். நமது ஊரில் பொதுவாக என்ன நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஆரம்பத்தில் எல்லோரும் அழகாக இருப்பார்கள். தங்கள் பரிசு வந்தவுடன் வாங்கிக்கொண்டு திரும்பிகூடப் பார்க்காமல் ஓடி விடுகிறார்கள். கேட்டால் வேலை இருக்கிறதாம், பிசியாம். வேதனையாகவும் கவலையாகவும் இருக்கிறது சகோதரர்களே! இந்த நிலைமை மாறவேண்டும். நமது சமூகம் மாறவேண்டும்.

IMG_0006அஹ்:-  ஒரு நிகழ்வை கிராத் ஓதி அழகாக ஆரம்பித்தால் அது முடிவடைந்து துஆ ஓதும்வரை எல்லோரும் அவ்விடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்வதுதான் ஒரு நல்ல சிறந்த மனிதனுக்கு அடையாளமாகும்.

அர்:-  இருதியாக பரிசு வாங்கும் மாணவர்கள் திரும்பி பார்த்தால் அங்கு யாருமில்லை. தயவுசெய்து யாரும் இடையில் செல்லாதீர்கள். இடையில் செல்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் இறுதிவரை இந்த நிகழ்வில் இருப்பேன் என நிய்யத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அஹ்:- யார் இருக்காவிட்டால் என்ன? நீ இரு என்று என் தாயார் எனக்கு அடிக்கடி புத்திமதி கூறுவார். எனவே நீங்கள் இவ்வாறான அடிப்படை நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். உங்கள் சமூகமும் மாறும்.வெற்றியும் உங்களைத் தேடிவரும்.

அர்:-  1917 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அன்னை செய்னம்பு நாச்சியாவிற்கும் சீ.அ.மு. முஹம்மது ஹனீபாவிற்கும் மஃமூத் நெய்னா மரைக்கார் மகனாக பிறந்தார். தனது ஒன்றரை வயதில் தாயை இழந்த அவர் தனது தந்தையின் சகோதரியின் அரவனைப்பில் வளர்ந்தார்.

அஹ்:- “அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா” என்று செல்லமா வளர்ந்திருப்பார். அதிகமாக செல்லம் கொடுத்திருப்பார்கள்.

அர்:-  இல்லை. மிகவும் கண்டிப்பான குடும்பம் அது. நெய்னா மரைக்கார் அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே அல் குர்ஆனை கற்றுக்கொடுத்தார்கள். கூடவே மார்க்க சட்டதிட்டங்களையும் கற்று கொடுத்தார்கள். அதனால் அவரது வாழ்வில் ஈமானின் இறையச்சம் இரத்தத்துடன் கலந்திருந்தது.

Naina Marikkar 1

அஹ்:- தனது ஆரம்ப கல்வியை புத்தளம் அன்ரூசில் கற்றுக்கொண்டார். அதனால் அகிலத்தின் பரிவர்த்தனை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அர்:- தொடர்ந்து கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். பின்னர் உயர்கல்வியை கொழும்பு பல்கலைகழகத்தில் கற்றார். அங்கு வரலாற்று துறையில் பீ.ஏ பட்டமும் பெற்றார்.

அஹ்:- அப்பொழுதும் நெய்னா மரைக்கார் அவர்களின் கல்வித்தேடலும் தாகமும் தீரவில்லை. மேலும் உயர்கல்வி கற்பதற்காக இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார். தன் தந்தையிடம்  அனுமதி கோரினார்.

அர்:- பொதுவாக அந்த காலத்தில் அதிக பணம் கிடைத்தால் காணி நிலம் என்று சொத்துக்களைத்தான் வாங்கிக் குவிப்பார்கள். அப்படித்தானே !

அஹ்:- ஆமாம், ஆனால் நெய்னா மரைக்கார் அவர்களின் தந்தை முஹம்மது ஹனீபா அவர்கள் கல்விதான் உலகத்திலேயே மிகச் சிறந்த சொத்து என்பதையும் உணர்ந்து இருந்தார். ஒரு தந்தை தன் மகனுக்கு கொடுக்கக்கூடிய உயர்ந்த செல்வம் கல்வி மாத்திரம்தான் என்பதையும் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். இங்கிருந்தாலும் அறியாத தெறியாத லண்டன் மாநகருக்கு எப்படி அனுப்புவது? என்று யோசித்தார்.

அர்:- ஆம், அன்றைய காலத்தில் ஒரு சில பெரியார்கள் இருந்தார்கள். அவர்களிடம் மகனை லண்டன் அனுப்பி படிக்க வைப்பது தொடர்பான ஆலோசனைகளை தந்தை ஹனீபா கேட்டார். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

அஹ்:- ஆம் திரு ஹனீபா! லண்டன் கொழும்பல்ல, நாகரீகத்தில் புகழ் பூத்த நாடு. அங்கு நம் பிள்ளைகளை அனுப்பினால் கெட்டுப்போய் விடுவார்கள். நமது கலாச்சாரம் பன்பாடு முழுவதும் சீரழிந்து விடும். உன் பிள்ளை உள்நாட்டில் படித்தாலே போதும் என்று கூறி விட்டார்கள்.

அர்:- அவருக்கும் தடைகல்லை தூக்கிப் போட்டுவிட்டார்களா? என நினைத்தேன். ஆனால் தந்தை ஹனீபாவின் முடிவினில் மாற்றமில்லை. மகனுக்கு நல்ல புத்திமதிகள் கூறி தைரியமாக லண்டனுக்கும் அனுப்பி வைத்தார். இறைவனின் துணையோடும் அடிமனதில் உறுதியாக விதைத்த ஈமானின் அச்சத்தோடும் மகனை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.

அஹ்:- லண்டனுக்கு சென்ற நெய்னா மரைக்கார் அவர்கள் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இனைந்து நவீன வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்பவற்றில் பீ.ஏ பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

அர்:- தொடர்ந்து சிவில் சேவை பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றார். அதனை தொடர்ந்து புனித கெத்தரீன் கல்லூரியில் இனைந்து கொண்டார். அங்கு எல்எல்.பீ மற்றும் எல்.எல்.எம் போன்ற பட்டங்களைப் பெற்று தனது 25 வயதிலேயே பரிஸ்டர் என்ற அந்தஸ்த்தையும் அடைந்து கொண்டார் நமது புத்தள இளைஞர் எம்.எச்எம். நெய்னா மரைக்கார் அவர்கள்.

IMG_0003அஹ்:- அதாவது 1942 ஆம் ஆண்டு எமது புத்தளம் ஒரு பரிஸ்டரை உருவாக்கியிருக்கிறது என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.  சந்தோஷமாகவும் இருக்கிறது.

அர்:- பரிஸ்டர் பட்டம் கிடைத்தது சந்தோஷம் தான். ஆனால் நெய்னா மரைக்காரின் குடும்பம் துக்கத்தில் துவண்டு போனது.

அஹ்:- ஏன் அவரது குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தது என்று தெளிவாகத்தான் கூறுங்களேன்.

அர்:-  அன்றைய காலத்தில்தான் 2 ஆம் உலகப்போர் உக்கிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. ஹிட்லரின் குண்டு வீச்சால் இங்கிலாந்தின் பக்கிங்ஹோம் அரண்மணையின் ஒரு பகுதி பாதிப்படைந்திருந்தது. லண்டன் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். நமது இளைஞர் நெய்னா மரைக்காரும் இங்கிலாந்து இராணுவத்தில் ஹோம்காட்டாக சேர்க்கப்பட்டார்கள். போர் பயிற்சிகள் அவருக்கும் வழங்கப்பட்டன. சுமார் 3 வருடங்கள் அங்கு பணியாற்றினார். அக்காலப்பகுதியில் கால் பந்தாட்டக் குழுவில் தலைவராகவும் இருந்துள்ளார்கள்.

அந்த காலத்தில் செய்திகளை அறிந்துகொள்வதற்கு தபாலும் தந்தியும் மாத்திரம்தான் இருந்தது. 2 ஆம் உலக யுத்தம் நடைபெறுகிறது தன்மகனுக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. மாதக் கணக்கில் தபால் எதுவும் வரவில்லை. எப்படி இருந்திருக்கும். இப்பொழுது புரிகிறதா கவலைக்கு காணம் என்னவென்று ?

அஹ்:- புரிகிறது, புரிகிறது. இறைவனின் கிருபையால் சுமார் 9 வருடங்களின்பின் தாய்நாட்டுக்கு வருகிறார். இலங்கையில் கால்பதித்த பரிஸ்டர் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்கள் சட்டத்தரணியாக சிறிது காலம் இங்கேயே பணிபுரிந்தார்கள்.

அர்:- பின்னர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன் பின்னரே 1960 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் களமிறங்கினார்.

அஹ்:- ஆஹா! அரசியலில் இறங்கிவிட்டாரா? அரசியலை எல்லோரும் ஒரு சாக்கடை, சாக்கடை என்றுதானே கூறுவார்கள்.

அர்:- சாக்கடை, சாக்கடை என்று எல்லோரும் ஒதுங்கி நின்றால் யார்தான் அதில் இறங்கி துப்பறவு செய்வது? என்று நினைத்த அவர் அரசியலில் இறங்கி அதையொரு அழகிய தெளிந்த நீரோடையாக ஆக்கிக்காட்டினார். தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டார். தேவைக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். புத்தள மண்ணின் பிரதிநிதியாய் வெற்றிவாகை சூடினார். புத்தள மக்களின் புகழ்பூத்த தலைவரானார். ஆவர் பின்னால் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

அஹ்:- அப்போது கூறியிருப்பாரே இது நானா சேர்த்த கூட்டமில்லை, தானா சேர்ந்த கூட்டம் என்று.

அர்:- இல்லை நிச்சயமாக இல்லை! பதவி, பட்டம் கிடைத்ததால் அவர் துறக்கவில்லை.  அமைதி, அடக்கம், இறையச்சம், உண்மை, நேர்மை, வெளிப்படையான பேச்சு, திறமைக்கு மதிப்பளித்தல், பெரியோருக்கு மரியாதை செய்தல் போன்ற சிறந்த நற்குணங்கள் அவரிடம் நிறைந்து காணப்பட்டன.

அஹ்:- இவரின் இவ்வாறான சிறந்த நற்குணங்கள் அன்றைய இலங்கையின் தலைவர்களை கவர்ந்தன. சுதந்திர இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய முதலாவது ஜனாதிபதி கௌரவ ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் நெருங்கிய நண்பராகவும் நமது தலைவர் இருந்தார். என்பது கூட பெருமைப் படவேண்டிய விடயம்தான்.

அர்:-  ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்த நாட்டின் பொருளாதாரம்தான். அந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பாரிய பணியை நமது கௌரவ எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்றால் மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது.

அஹ்:- நிதி திட்டமிடல் பிரதியமைச்சராகவும் நிதி திட்டமிடல் அமைச்சராகவும் நாட்டுக்கு பல சேவைகள் செய்தார். மத்திய வங்கியின் நிதி கொள்கைகளை அமுலாக்கம் செய்யும் அதிகாரமும் நமது தலைவரிடமே இருந்தது. அந்தப்பாரிய பணியை மிகச்சிறப்பாகச் செய்தார். அதுமட்டுமல்ல உலகவங்கி, நாணய நிதியம் என்பவற்றுடனும் நேசத்தொடர்புகளை வைத்திருந்தார்.

அர்:- அது மட்டுமா? ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏனைய அமைச்சர்கள் செல்லும் போதும் பல அமைச்சுக்களின் பொறுப்புக்க​ளை நம்பிக்கையின் பேரில் சுமந்நிருக்கிறார்.

அஹ்:- ஒரு சமயம் ஜனாதிபதி கௌரவ ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் கூறினார். “யாப்பு சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் நிகழ்ந்து உப ஜனாதிபதி என்று ஒருவர் வரவேண்டும் என்றிருந்தால், நான் நெய்னா மரைக்காருக்குத்தான் அப்பதவியை வழங்குவேன்” என்றார்.

Naina Marikkar 2அர்:- அத்தனை மரியாதையும் மதிப்பும் இருந்தும் நமது தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்கள் ஒரு போதும் கர்வம் கொண்டதில்லை. ஆணவம் கொண்டதில்லை.

அஹ்:- ஆம் நிறைக்குடம் தழும்பாது என்பார்களே! பட்டம் பதவி பெயர் புகழ் அனைத்தும் இருந்த போதும் அவரின் தன்னடக்கம் ஆடம்பரமில்லாத வாழ்க்கை என்பன மூலம் ஒரு நல்ல நம்பிக்கைக்குறிய தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார். அந்த தன்னடக்கமே அவரின் அனைத்து வெற்றிகளுக்கும் ஆயுதமாய் இருந்தது.

அர்:- சரியாக சொன்னீர்கள். புத்தளத்தின் பெருந்தேவை குடிநீர் திட்டத்தை நவீன குடிநீர் வினியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்க வழங்கினார்.

புத்தளம் தொழில் வாய்ப்பில் தலைசிறந்து நிற்பதற்காக தரமான திட்டங்களை முன் வைத்தார்.

பாடசாலை, பள்ளிவாசல், வைத்தியசாலை, போக்கவரத்து, தகவல்பறிமாற்றம், மின்சராம் விவசாயம் மீன்பிடி கிராமிய கைத்தொழில்கள் காணி, குடியேற்றம் வீடமைப்புத் திட்டங்கள், விவசாய அணைகட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களை நம் மக்களுக்காக செய்தார். புத்தளத்தை சூழ உள்ள ஊர்களுக்கும் செய்தார்.

இத்தளம் ஈன்றெடுத்த புத்தளத்தின் மைந்தர் அவர். செல்வத்தின் பரம்பரையில் சீனா ஆனா மூனா அவர். அரசியல் அகராதியின் பக்கமவர். அன்றைய பெரியோரின் செல்லத் தம்பி இவர். புத்தள பொன்னேட்டில் பெயர் பதித்த எம்.பி அவர். நிதியமைச்சையே சுமந்து நின்றார். அக்காலம் புத்தளம் பூத்தது.  அன்றைய விழாக்கோலம் புதிய விழாக்கோலம்.

அஹ்:- ஆம்! அது தான் புத்தளத்தின் பொற்காலம். அவர் அரசியலின் ஆணி வேர். அபிவிருத்தியின் அத்திவாரம். நியாயத்தின் நீதியாளர். நம்பிக்கையின் நேர்மையாளர். நம் சமூகத்தின் சேவையாளர். காலத்தின் கரைப்படியா மனிதரவர்.

இறைவா, அன்னாரின் மறுமை வாழ்வை அழகாக ஆக்கி வை. அவரது கப்ரை சுவன பூங்காக்களில் ஒன்றாக ஆக்கி வை. அவரின் பாவங்களை பொறுத்து மேலான உயர்ந்த சுவனத்தை அவருக்கு வழங்கிடு இறைவனே.

அர்:- எனவே, சகோதர சகோதரிகளே! மர்ஹூம் அல்ஹஜ் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களை உங்கள் வாழ்கையின் முன்னுதாரணமாக ஆக்கிக்கொள்ளுங்கள். அவரது அறிவும் ஆற்றலும் ஆளுமையும் உங்களுக்கு வர வேண்டும்.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை கொடுங்கள். கல்விச் செல்வமானது மற்ற அனைத்து செல்வங்களையும் உங்கள் அருகில் கொண்டுவந்து சேர்க்கும்.

சகோதரர்களே!!! புத்தளம் உங்களை பெற்ற ஊராயிருக்கலாம். அல்லது உங்களை வளர்த்த ஊராக இருக்கலாம். அல்லது உங்களை வரவேற்று வாழ வைத்த ஊராக கூட இருக்கலாம்.

புத்தளம் உங்களின் அளப்பரிய சேவைக்காகக் காத்து நிற்கிறது. தோளோடு தோள் கொடுக்க முன் வாருங்கள்.

நாளை நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த கண்டத்தில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் ஒரு கணம் இந்த புத்தளத்தை நினைத்துப்பாருங்கள். என்னை வளர்த்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும். என் இளைய சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என மனதில் உறுதி கொள்ளுங்கள். விரைந்து வாருங்கள். அறிவும் ஆற்றலும் உடைய புத்தி ஜீவிகளின் சேவைகளை எதிர்பார்த்து நம் புத்தளம் காத்திருக்கிறது.

வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்று வாழ்ந்து விடாதீர்கள். உங்களுக்கும் கடமைகள் இருக்கின்றன. பொறுப்புக்கள் இருக்கின்றன. இந்த ஊரில் உரிமைகளும் இருக்கின்றன. நாளைய சமூகமும் நீங்கள்தான். ஏன்? நாளைய தலைவர்களும் நீங்கள்தான். உங்களால்  முடிந்த பணிகளை செய்யுங்கள்.

அஹ்:- உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் ஆக்கிக்கொள்ளுங்கள். அதாவது நல்ல எண்ணங்களையும் நல்ல மனப்பாங்குகளையம் ஆளுமைத்திறன் என்பவற்றை உங்களக்குள் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

அஹ்:- கல்விக்காக செய்யும் சேவைகள் ஒருநாளும் அழிந்து விடாது என்பார்கள். எனவே எல்லாம் வல்ல இறைவன் இந்தக் கல்வி ஊக்குவிப்புப் பணியை செவ்வனே செய்து வரும் கௌரவ அல்ஹஜ் எம்.எச்.எம். நெய்னா மரைக்காரின் குடும்பத்துக்கும் அவர்களது பரம்பரைக்கும் நல்ல பரகத்தையம் றஹ்மத்தையும் இம்மையிலும் மறுமையிலும் வழங்க வேண்டுமென பிரார்த்தித்து விடைபெறுகிறோம்.

வஸ்ஸலாம்.

SAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All