Puttalam Online
star-person

சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்த அமீர் சேர்

விழுமியங்கள் மற்றும் பண்பாட்டின் மீதான வறுமை அல்லது தேக்க நிலை சமூக நகர்விற்கு பாரிய தடைகல்லாகும். முன்மாதிரியான ஆளுமைகளை அறியச் செய்தல் சமூக விழுமியங்களையும் பண்பாட்டினயும் போதிக்கச் செய்வதற்கு சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். முன்னுதாரணங்கள் அருந்தலாக இருக்கின்ற இக்காலப் பிரிவில் அத்தகைய அளுமைகளின் வாழ்வின் நடிபங்குகளை சகலரும் அறியச் செய்வது காலத்தின் அவசியத் தேவையாகும். இத்தகையோரின் சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளை ஆய்வு ரீதியாக அச்சுருவில் ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்வது ஒரு சமூக கடமையாகும்.

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் நினைவுகூறப்படாதவிடத்து அவர்களும் மறைந்த மனிதர்களாகவே கருதப்படுவார்கள். ஆளுமைகளின் சமூகப் பங்களிப்பினை அறியச் செய்து அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காகப் பிராத்திக்கும் நோக்கிலாவது தனிநபர் வாழ்வை ஆவணப்படுத்துவது அத்தகையவர்களுக்கு சமூகம் செய்யும் உயர்ந்த கைமாறும் நன்றிக்கடனுமேயன்றி வேறில்லை.

அமீர் ஆசிரியர் அவர்கள் புத்தளத்தின் வரலாற்றோடு சேர்ந்து பயணிக்கும் ஒரு வரலாற்று புருஷர். சாந்தமான முகம், வெள்ளை சேர்ட் தொப்பி சகிதம் ஊரை வலம்வரும் இவருடைய முகத்தில் ஒரு வரலாற்று தழும்பு. ஆம் 1976ம் ஆண்டு புத்தளம் பன்சலைக்கு முன்பாக கோலித்த தேரோவின் தலைமையில் கூடியிருந்த வன் முறைக் கும்பலினால் பலமாக தாக்கப்பட்டபோது ஏற்பட்ட தழும்பே அது…

மதிப்பிற்குரிய அமீர் ஆசிரியர் அவர்கள் தொழில் நுற்பபாடங்களில் ஒன்றான ரேடியொ ரிபயரிங் மற்றும் வயரிங்க் போன்ற விடயங்களையும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கற்பித்தவர். பிரத்தியேகமாகவும் இத்தொழிலில் கரிசனையுடன் ஈடுபட்டார். ஹைராத் பள்ளியில் சில காலம் பேஷ் இமாமாகவும் கடமை புரிந்தார்கள். அல் குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதிலும் அதனைக் கற்பிப்ப திலும் கரிசனயுடன் செயற்பட்டார்.

பிற்காலப் பகுதியில் பல பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தனது வீட்டிலேயே ஹிப்ளு மத்ரசாவை சில வருடங்கள் நடாத்திவந்தார்கள். அதற்காக பல பிரயாசைகள் மேற்கொண்டார்கள். அங்கு கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் வெள்ளை மற்றும் தலைப்பாகையுடன் தொழுகைக்கு வரிசையாய் செல்லும் காட்சி அபரிவிதமானது. அல்லாஹ் தஆலா அவரின் சேவைகளைப் பொருந்திக் கொள்வானாக. .

புத்தளத்தில் முதலாவது மத்ரசதுள் இர்ஷாதிய்யா குர்ஆன் மனன மத்ரசா தொடங்கிய பெருந்தகை இவராவார். அதற்குப் பிறகு தான் மற்றவைகள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் புத்தளத்திலிருந்து தண்ணீர் கப்பலில் சென்று ஹஜ் செய்து வந்தவர்.

Ameer Sir 2

இவர் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அனைத்து துறைகளிலும் தேர்ச்சிப்பெற்ற ஒரு சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் மிகையில்லை. அவர் அறியாத துறைகள் எதுவும் இருக்கவில்லை. ஹிப்னோடிஸம், மெஸ்மரிஸம், மந்திர தந்திர வித்தைகள், சவர்க்காரம் முதலாக பல்வேறு சிறு உற்பத்திப் பொருட்களை அவற்றின் கொம்போசிஷன் போன்றவற்றை அத்துபடியாக அறிந்த ஒருவர். ஹவுஸ் வயரிங், ரேடியோ ரிப்பெயார் என்பன இவரின் பகுதி நேரத்தொழில்கள்.

சாஹிராவின் பொற்காலம் என வர்ணிக்கப்பட்ட எழுபது, என்பதுகளின் ஒரு ஹீரோ! சாரணர் பிரிவுக்கு பொறுப்பாளர். கேம்பிங் என்றால் அது அமீர் ஆசிரியராகத்தான் இருக்கும். விளையாட்டு உட்பட சாஹிராவின் பல்வேறு துறைகளில் பிரகாசித்து பல மாணவர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. இன்னும் கூட மெனுவல் டைப் ரைட்டர் ஒன்றோடு அவர் வீட்டுக்கு யாராவது சென்றால் அவருக்கே உரிய அலாதியான ‘மெத்தட்’  மூலம் பயிற்றுவித்து சுமார் மூன்று மணித்தியாலங்களில் கீ போர்டைப் பார்க்காமல் டைப் செய்யும் வித்தையை பழக்கிவிடுவார். மாஷா அல்லாஹ்! இவர் வாழுகின்ற ஒரு மாபெரும் மேதை என்றும் சொல்லலாம்.

இவர் உலக, உள்ளூர் அரசியல், ஏனைய விவகாரங்களிளை பற்றி தெரிந்து வைத்திருப்பதிலும், அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதிலும் ரொம்ப கெட்டிக்காரர். பசித்திரு – தனித்திரு – விழித்திரு…பதவி உன்னைத் தேடி வரும்!
இந்த பிரபலமான கூற்றிற்கு அமீர் ஆசிரியரின் விளக்கம் வித்தியாசமானது.

இச்சைகளை, ஆசைகளை கையாளும் விடயத்தில் அவை கைகூடி வந்தாலும், அணுகாது விலகி பசியோடிரு. அது தான் பசித்திரு. உலகம் உன்னை மாமூலான ஒரு மனிதனாகவே காண விரும்பும். அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துப் போகும் ஒருவனாக நீ இருக்காது சரியானதை தெரிவு செய். அந்த வழியில் யாரையும் எதிர்பார்க்காது நடை போடு. அது தான் தனித்திருத்தல். பாவங்கள், பழிகள், குற்றங்கள் உன்னால் நடைபெறா வண்ணம் விழிப்போடு இரு. அது தான் விழித்திருத்தல்.

அமீர் ஆசிரியர் ஆயகலைகள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளவர். 1970 ம் ஆண்டுகளில் கல்பிட்டி அல் அக்ஸா பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டியில் A”Acrobatics” என்ற ஒரு கலையை மாணவர்களுக்குப் பழக்கி அனைவரினதும் பாராட்டைப் பெற்றவர்.

வெறுமனே கையெழுத்து போட மட்டுமல்ல பேப்பரை சரிபார்த்து றோணியோ பண்ணுவது, ஒழுங்கு முறைப்படி விநியோகிக்கும் வரை பொறுப்பு நிற்கும் ஆசானாக  இருந்த சமயம் றோணியோ இயந்திரம் பழுதடைந்தாலும் அதனை திருத்தி டைப் செட்டிங் செய்வார். இதெற்கெல்லாம் அவர் வாங்கியது வெறும் ஆசிரிய சம்பளமே. அர்ப்பணிப்பும் நேர்மையும் கடின உழைப்பும் சமய, சமூக அக்கறையும் கொண்ட பல்கலை வேந்தன் அவர்.

Ameer Sir 3புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் 1970 களில் அமீர் ஆசிரியருக்கென்று ஓர் வணிக அறை இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட தட்டச்சுப் பொறிகள், றோணியோ இயந்திரம் போன்றவையெல்லாம் அந்த அறையினுள் வைத்திருப்பார். வர்த்தகம், டைப்பிங் முதலிய பாடங்களை அந்த அறைக்குள் வைத்தே அவர் கற்பிப்பார். பரீட்சைக் காலங்களில் வினாத்தாள் அச்சிடும் பொறுப்பும் அவருடையது.

பாடசாலை நேரத்தில் கற்பித்தல் பணியைச் சரியாகச் செய்துவிட்டு இரவு நேரத்தில் அதிகாலை 3-4 மணி வரை வினாத்தாள் வேலைகளில் ஈடுபடுவார். காலையில் உரிய நேரத்தில் பாடசாலைக்குச் சமுகமளித்துவிடுவார். வர்த்தகம் கற்கும் மாணவர்களே வினாத்தாள்களைத் தட்டச்சு செய்வார்கள். யாராவது இதற்காக அதிருப்தி தெரிவித்தால் அவர் கூறும் பதில் ” எதிர்காலத்தில் கணக்காளர்களாகவும் வேறு உயர் பதவிகளுக்கும் வரவிருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்ச்சி , இரகசியத்தைப் பேணுதல் போன்ற மனப்பாங்குகளை இங்கே விருத்தி செய்யாமல் வேறெங்கே விருத்தி செய்வது? வினாத்தாள் பற்றிய இரகசியம் வெளியில் கசிந்தால் வந்து சொல்லுங்கள்” என்பதுதான். மாணவர்களும் அவரது நம்பிக்கையை வீணாக்கியதில்லை.

ஹிப்னாட்டிசம்-மெஸ்மரிசம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற அமீர் ஆசிரியர்  அன்றைய காலங்களில் அல்-அக்ஸாவில் பல சாகசங்கள் செய்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது மாணவர்களை மரக் கட்டைகள் போலாக்கி பிடரியும் குதிகாலும் மட்டும் இரு கதிரைகளின் விளிம்பில் இருக்க இடையில் எந்த தடுப்பும் இல்லாமல் பல நிமிடங்கள் வைத்திருப்பார். இன்னும் சொல்லப்போனால் சீனடி-சிலம்பாட்டம் இரண்டிலும் அவர் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

இதுமட்டுமல்ல இவர் ஒரு சைக்கிள் பிரியரும் கூட. 1954/56 களில் இலங்கை எங்கும் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது இவரது வழிகாட்டலில் ஊரில் ஒருசிலரை இணைத்துக்கொண்டு வெள்ள அனர்த்தம் பார்க்க மாத்தறை வரை சைக்கிளில் பவனி சென்று திரும்பி வந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் ஹிப்ளு மத்ரஸா நடாத்துகையில் வான் வீதி, தக்வா பள்ளியில் தராவீஹ் தொழுகையின் பின்னர் ஹிஸ்புல் குர்ஆன் மஸ்லிஸ் நடைபெறும். நோன்பு காலங்களில் தனது மத்ரஸா பிள்ளைகள் சகிதம் வந்து மஜ்லிஸை முன்னின்று நடாத்திவைப்பார். மத்ரஸா பிள்ளைகளின் குர்ஆன் ஓதலில் மஹல்லாவாசிகள் மெய்ம்மறந்து கேட்டிருப்பர்.

இன்று இவரிடம் படித்த, ஓதிய மாணவர்கள் நல்ல நிலையில், பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கிறார்கள். அவருக்கு இதைவிட பெரிய சந்தோஷம் இருக்காது. தான் கற்ற கல்வியறிவை கொண்டு ஏனையோருக்கு அறிவு புகட்டிய அமீர் ஆசிரியர் தன்னடக்கமிக்க ஒரு வரலாற்று மனிதர்.

Ameer Sir 1

குறிப்பு: இந்த ஆக்கம் புத்தளம் படிஸ் முகநூல் குழுமத்தில் பிரதான பதிவாக (PINNED POST) நீண்டகாலம் பிரசுரிக்கப்பட்டிருந்நதுடன் பல நூறு கருத்துக்களும் (Comments) கிடைக்கப்பெற்ற ஒரு பதிவின் தொகுப்பாகும். இவ்வாறனதொரு வரலாற்று புருஷரை அறியச் செய்த புத்தளம் படிஸ் முகநூல் குழுமத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

WAK


3 thoughts on “சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்த அமீர் சேர்

  1. […] சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்த அமீர் … […]

  2. //மாஷா அல்லாஹ். அமீர் ஆசிரியர் தொடர்பில் சிறந்ததொரு பதிவைப் பார்த்து பரவசம் அடையக் கிடைத்தது. அன்னார் பற்றிய அழகான அர்த்தமுள்ள குறிப்புக்களை வெளிக் கொணர்ந்த “புத்தளம் பட்டீஸ்” ற்கும் அதை மீள்பதிவு செய்த “புத்தளம் ஆன்லைன்”ற்கும் பாராட்டுக்கள். அமீர் ஆசிரியரின் அணித்து நற்பணிகளையும் அல்லாஹ் அங்கீகரித்து அன்னாருக்கு மேநேம்ளும் பேரருள் புரிவானாக. அமீர் ஆசிரியர் புத்தளத்தின் பன்முக ஆளுமைகளில் ஒருத்தர்.// பதிவாளர்களை நான் முழுமனதோடு பாராட்டுகிறேன் இவர் கற்பித்த காலத்தில் இறுதிப் பகுதியில் சாஹிராவில் (1978) ல் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. மாமா முறை உறவு. நல்ல நண்பர்.ஆனால் இவரும். ஆங்கில கலீல் சேரும், ஆர்ட் ரபீக் சேரும், நானும் அற்ப அரசியல் காரணங்களுக்காக சாஹிறாவிலிருந்து தூக்கி வீசி எறியப்பட்டோம். என்ற பதிவும் இருந்தால் பதிவு நிறைவடையும் என நம்புகிறேன்

  3. Mohamed Muhusi says:

    மாஷா அல்லாஹ். அமீர் ஆசிரியர் தொடர்பில் சிறந்ததொரு பதிவைப் பார்த்து பரவசம் அடையக் கிடைத்தது. அன்னார் பற்றிய அழகான அர்த்தமுள்ள குறிப்புக்களை வெளிக் கொணர்ந்த “புத்தளம் பட்டீஸ்” ற்கும் அதை மீள்பதிவு செய்த “புத்தளம் ஆன்லைன்”ற்கும் பாராட்டுக்கள். அமீர் ஆசிரியரின் அணித்து நற்பணிகளையும் அல்லாஹ் அங்கீகரித்து அன்னாருக்கு மேநேம்ளும் பேரருள் புரிவானாக. அமீர் ஆசிரியர் புத்தளத்தின் பன்முக ஆளுமைகளில் ஒருத்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All