குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம்.
தற்போது கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம் இழந்த நம்பிக்கை மீண்டும் கிடைத்துள்ளது. முக்கியமாக களத்தடுப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பந்து வீச்சும் சிறப்பாக அமைந்துள்ளது.
டில்ஷான் நல்ல தொடக்கம் கொடுத்தார். இதன் காரணமாக விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. அனுபவ வீரர்களான ஜெயவர்தன, சங்கக்கார நல்லதொரு இன்னிங்ஸை விளையாடினர்.
அணியில் இருக்கும் இளம் வீரர்கள் இவர்களிடமிருந்து அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் 5 போட்டிகள் இருக்கின்றன. இதில் அதிகமான கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Share the post "மூத்தவர்களிடமிருந்து இளையவர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும்"