அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட உத்தேசிக்கப்படுவதாக அறிய முடிகிறது, மைத்ரி அரசு தனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை கலந்த ஒரு தேர்தல் முறையில் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்தபடி இலங்கை அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் நல்லாட்சிக் கட்டமைப்புக்கள் இந்தக் குறுகிய காலகட்டத்தில் இடம் பெறும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது, குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் மேலாண்மை உறுதி செய்யப்படுவதோடு, நீதி, போலிஸ்,பொது சேவைகள், தேர்தல்,ஊழல் மோசடி ஒழித்தல், ஊடகம் என சுயாதீன முக்கியம் வாய்ந்த துறைகளுக்கு சுயாதீனமான ஆணைக் குழுக்கள் நிறுவுதல் என்பன பிரதானமான மாற்றங்களாகும்.
இலங்கை வரலாற்றில் முன்னொரு பொழுதும் எதிர்கொள்ளாத அரசியல் சகவோட்டங்களுக்கு தேசமும் பிரதான அரசியல் கட்சிகளும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி மைத்ரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹா அவர்களது தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் அடுத்து வரும் தேர்தல் கலநிலவர யதார்த்தங்களை கவனத்தில் எடுத்தே கைகளை நகர்த்துவதனை மிகவும் தெளிவாக உணர முடிகிறது, ஜே வீ பீ, ஜாதிக ஹெல உறுமய, தமிழ் தேசியக் கூட்டணி, மற்றும் ஏனைய இடதுசாரிக் கட்சிகள் கூட இந்த விடயத்தில் அவதானமாகவே செயற்படுகின்றமை புரிகின்றது.
தற்போதய நிலையில் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியும், ஐக்கியதேசியக் கட்சியின் பிரதமரும், சுதந்திரக கட்சியின் எதிர்க் கட்சித் தலைவருமாக சகல கட்சிகளும் இடைக்கால நகர்வொன்றில் மைத்ரி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளனர்.
தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம் பெறுவது குறித்து திருப்திப் படும் நாம் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சமர்ந்தரமாக முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றோமா என்பதுவே பிரதானமான கேள்வியாகும், அந்தவகையில் அரசியல் களநிலை யதார்த்தங்களை உள்வாங்கி முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், நல்லாட்சி முன்னணி ஆகிய மூன்று அரசியல் பிரவாகங்களையும் ஒரு அவசர கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
சமகால மற்றும் எதிர்கால நேரடி தீவிர அரசியலில் ஈடுபடும் ஆர்வம் அறவே இல்லாத நிலையிலும் மேற்படி சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி நிரலையும், ஒரு சில முதல் கட்ட வழிகாட்டல் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான தேசிய அரசில் உள்ள பிரதான கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இரண்டு அணியும் சட்டத்தரணி சுஹைர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பொதுவான ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவசரமாக ஒன்றுபடல் வேண்டும்.
விரைவில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் அரசியலை தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு தெளிவான அடிப்படைகளில் உள்வாங்கச் செய்து மிகவும் சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும் முற்போக்கு தேசிய சக்திகளுடன் இணைந்து நாம் களமிறங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
நல்லாட்சி மாற்றங்களிற்கான தேசிய நிகழ்ச்சிநிரலை காயப்படுத்தும் இனரீதியிலான அரசியலை சந்தைப்படுத்த முனைவதும், எமது அரசியல் பிளவுகளை அரங்கேற்றுவதும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் எந்த வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை.
புதிய தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை கலந்த தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை இனங்களின் மட்டும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கின்ற வகையில் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படவும், இரட்டை உறுப்பினர் தொகுதிகள் அடையாளப் படுத்தப் படவும் இடமிருப்பதால் வேறுபாடுகளை களைந்து அவசரமாக ஒன்றுபடுவது அவசியமாகும்.
அதேவேளை, புதிய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்களது வாக்கு வங்கி ஆளும் எதிர்க் கட்சிக்குள்ளும் முஸ்லிம் கட்சிகளுக்குள்ளுமாக சிதறுண்டு போகும் பொழுது அந்தத் கட்சிகளும் பிரதிநிதித் துவங்களை இழந்து சமூகமும் மீண்டும் மீண்டும் அரசியலில் அனாதைகளாக நேரிடும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பான முயற்சிகளில் முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்தியிருந்தனர், ஆனால் ஆளும் கட்சியில் கடைசி நேரம் இருந்த முஸ்லிம் அரசியல் குழுக்களினால் எத்தகைய பங்களிப்புக்களும் செய்ய முடியவில்லை, எனவே இந்தக் குறுகிய காலத்திற்குள் தம்மால் இயன்ற ஒருங்கிணைந்த பங்களிப்பினை சகலரும் செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில்ஹுனைஸ் பாரூக் அசாத் சாலியும், சுதந்திரக் கட்சியில் Dr. இல்யாஸ், பைசர் முஸ்தபா போன்றோர் இணைந்திருந்தாலும் இவ்வாறான ஒரு புரிந்துணர்வை சகலரும் தமக்குள்ள ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
எதிர்வரும் தேர்தல்களில் தென்னிலங்கை அரசியலில் இனமதவாதிகளின் பங்களிப்பு முழுவீச்சிலும் கட்டவிழ்க்கப்படும் என்கின்ற காலநிலை யதார்த்தங்களை யான பரிமாணங்களில் முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கத் தவறின் காலம் கடந்து நாம் கைசேதப் படுவதில் அர்த்தமில்லை.
Share the post "அரசியல் களநிலை யதாரத்தங்களை முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கி ஒன்றுபடல் வேண்டும்"