Puttalam Online
puttalam-news

‘அர்த்தமுள்ள ஊடகச் சுதந்திரம்’அரசியல் விஞ்ஞாபனத்தின் 11-ஆம் அத்தியாயம்

  • 17 January 2015
  • 1,099 views

Engalthesam

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஜனாதிபதியாக பதவியேற்றபோது நிகழ்த்திய கன்னி உரை, அரச ஊடகங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது; சுதந்திர ஊடகங்களின் வயிற்றில் பாலை வார்த்தது. அவர் கூறினார், ‘முன்னொருபோதும் இல்லாதவாறு அரச ஊடகங்கள்  இந்தத் தேர்தலில்,அனைத்து ஊடக தர்மங்களையும் மீறி செயல்பட்டன’. தேர்தலை அண்மித்த கடைசி வாரங்களில், எதிர்கட்சியினரை தாக்குவதற்காக, அரச ஊடகங்கள் மிக மோசமாக உபயோகிக்கப்பட்டதையும் படுபக்கசார்பாக நடந்துகொண்டதையும் இந்நாட்டுப் பிரஜைகள் பார்த்துக்கொண்டிருந்தனர். MATIRY

அரச ஊடகங்கள் நடப்பு அரசாங்கத்தின் ஊதுகுழலாகும் வரலாறு முன்னைய நாள் பிரதம மந்திரி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் கூட்டரசாங்க ஆட்சி காலத்திலிருந்து நடைபெறுகின்றது. லேக்ஹவுஸ் குழுமம் அரசுடமையாக்கப்படுவதில் இருந்து இந்த அவலம் ஆரம்பிக்கின்றது.

எனினும் இராஜபக்ஷ அரசாங்கம் அளவுக்கு அரச ஊடகங்களும் சில தனியார் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களும் கூட,வெட்கம் கூச்சம் சிறிதும் இல்லாமல் எதிரணியை தாக்குவதிலும் அரசாங்கத்தின் புகழ் புராணம் பாடுவதிலும் அசிங்கத்தின் ஆழத்திற்கு செல்லவில்லை.

புதிய அரசாங்கம், மாற்றத்துக்கான வாக்குறுதிகளை தந்துள்ளது. மைத்திரிபால சிரிசேனாவின் அரசியல் விஞ்ஞாபனத்தின் 11-ஆம் அத்தியாயம் ‘அர்த்தமுள்ள ஊடகச் சுதந்திரம்’ பின்வருமாறு கூறப்பட்டுள்ளது ‘அரச ஊடகங்கள் நாட்டை ஆளும் அரசியல் கட்சியின் பரப்புரை ஆயுதமாக மாற்றியமைப்பதை உடனடியாக நிறுத்தி, சமநிலையான சேவையை நாட்டிற்கு வழங்குவதற்கு, அவசியமான பின்னணியைத் தயாரிப்பேன். ஊடகச் சுதந்திரத்தையும்,தகவல்களை அறியும் உரிமையையும் உச்ச அளவில் உறுதி செய்வேன்”ஆனால், இந்த அரசாங்கமும் அரச ஊடக நிறுவனங்களுக்கான நியமனங்களை அரசியல் நியமனமாக வழங்குமாயின், மறுசீரமைப்புக்கான முன்னெடுப்புக்கள் வந்த வழி தெரியாமல் பின்வாசலால் சென்றுவிடும்.

ஊடகவியலாளர் ஷமா ரணவன பின்வருமாறு எழுதுகின்றார்: ‘உண்மையாகவே ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்றால், அரச ஊடக நிறுவனங்களுக்கான நியமங்களும் உள்ளீடுகளும் ஒழுங்குமுறைக் குழுவொன்றினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். குறிப்பாக நிறைவேற்று அதிகாரிகளான தலைவர்,பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் ஊடாக நியமிக்கபட வேண்டும்.

முக்கியமான பதவிகளுக்கு துறைசார் தகுதியுள்ள நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேர்தலில் தோள் கொடுத்த பங்காளிக் கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்பதினாலோ,அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தினாலோ நியமனங்கள் வழங்கப்படுமாயின், ‘ஊடக சுதந்திரம்’ என்ற புதிய அரசாங்கத்தின் கோஷம் பழைய குருடி கதவ திறடி என்றாகிவிடும்’ (கலம்பு டெலிகிராப் இணைய சஞ்சிகை (2015.01.11)அரச ஊடகங்களின் அளவுக்கு தனியார் ஊடகங்களினால் இலங்கையின் எல்லா பகுதிகளுக்கும் தமது சேவையை விஸ்தரிக்க முடியாமல் உள்ளன. இதன் காரணமாக அதிகமான மக்கள், வேறு தெரிவுகள் இல்லாமல், பார்ப்பதும் கேட்பதும் அறிவதும் அரச ஊடகங்கள் கூறும் செய்திகளை மட்டும்தான். அரசாங்கம் எதனை மக்கள் அறிய வேண்டுமென நினைக்கின்றதோ அதனை மட்டும் வடிகட்டி ஊட்டும் கைங்கரியத்தை அரசியல் நியமன நிருவாகிகள் செவ்வனே நிறைவேற்றியதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கண்டோம்.

இதுவும் போதா குறைக்கு எதிரணிக்கு அரச ஊடகங்களில் பிரசாரத்துக்கான நேரம் ஒதுக்குவதை மறுப்பது முதல்,தாராளமாக தனிமனித சேறு பூசல்கள் நடைபெற்றதையும் இந்நாட்டு பிரஜைகள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அரச ஊடகங்களுக்கும் தனியார் ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாடு குறித்து கலாநிதி லியனகே அமரகீர்த்தி (பேராதனை பல்கலைக் கழகம்) கூறும்போது, ‘ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு தனியார் ஊடகங்களில் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. ஆனால் விமர்சன ரீதியான கலந்துரையாடல்கள் நடைபெறுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்கள் உண்மையான பிரஜைகளின் ஜனநாயகம் தொடர்பான அர்த்தமுள்ளவைகளாக நடைபெறுவது குறைவு. மேலோட்டமான வாய்த் தர்க்கங்கள் மட்டும் நடைபெறுகின்றது; வெறும் கூச்சல் மட்டும் மீதப்படுகின்றது”. (ராவய சிங்கள பத்திரிகை – 2015.01.11) மறுபுறத்தில்,சமூக ஊடகங்கள் வேறொரு திசையில் பயணித்தன.

இச் சமூக ஊடகங்கள் இல்லாமல் இருந்திருந்தால், இந் நாட்டுப் பிரஜைகள் எதிரணியின் அரசியல் விஞ்ஞாபனத்தைக் கூட அறியாதவர்களாக இருந்திருப்பார்கள் எனின் மிகையன்று. ஆனாலும்,இலங்கையைப் பொறுத்தவரையில் சமூக ஊடகங்கள் சென்றடையும் தூரம் மிகக் குறைவு. வாக்களிப்பு வரைபடத்தை பார்க்கும்போது இது தெளிவாகின்றது. எங்கெல்லாம் இணைய வசதிகள் உள்ளனவோ,அப் பகுதிகளில் எல்லாம் (வடக்குஇகிழக்கு நீங்கலாக – பெரும்பான்மை சிங்கள வாக்காளர் வாழும் பகுதிகள்) ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கான ஆதரவு அதிகரித்திருப்பது காணக்கூடியதாக உள்ளது.

ராவய (சிங்கள பத்திரிகை – 2015.01.11)க்கு வழங்கிய செவ்வியில், “இணையத்துடன் தொடர்புள்ளவன் என்ற வகையில்இஎனது தனிப்பட்ட அவதானத்திற்கு ஏற்ப மைத்திரிபால அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. இணையத்தில் நடைபெறும் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களில் மைதிரீ முன்னணியில் இருக்கின்றார். குறிப்பாக முகநூல் பாவிக்கும் வாலிப வாக்காளர்கள் மைதிரீ மீது கவரப்பட்டுள்ளனர். இது தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம் சேறு பூசுவதையும் இரு பிரிவினரும் செய்துகொள்கின்றார்கள்” எனக் கூறினார் கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவசிரி (கொழும்பு பல்கலைக் கழகம்)அரச ஊடகங்கள் தனியார் ஊடக நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என்று பரந்து விரியும் ஊடக பெருவெளியில் அரசியல் கட்சிகளின் பேரம் பேசுதல்களுக்கும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கும் பிரஜைகளின் அபிலாஷைகளுக்கும் இடையிலான மும்முனைச் சந்திப்பில் புதிய கருத்துப் பரிமாறலொன்று உருவாகியுள்ளது.

இக் கருத்துப் பரிமாறல் நிர்மாணிக்கப்பட வேண்டிய வடிவம் குறித்து புரவெசி பத்ரிகா (சிங்களம்) இணைய சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ள கருத்து கவனிக்கத்தக்கது:‘கட்சிகளின் அபிலாஷைகள் – மக்களின் அபிலாஷைகள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான இடைவெளியைப் புரிந்துகொண்டு,தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் இலங்கையர் யாவரும் திருப்தி அடையக்கூடிய உடன்பாடொன்றை இறுதித் தீர்மானமாகக் கண்டடைதலே புதிய ஜனாதிபதிக்கு முன்னுள்ள மிகப்பெரும் சவாலாகும்.
மாற்றத்தை நோக்கிய அரசியல் மறுசீரமைப்பின் முழுமொத்த வடிவமானது கட்சிகளின் தேவைகளுக்கேற்ப அமையாமல் மக்களின் தேவைகளுக்கேற்ப அமையும்போதே அது மதிப்பார்ந்ததாய் அமையும்.

ஃபேஸ்புக் முதலான சமூகவெளிகளில் அத்தகையதொரு தேவைப்பாட்டுக்கான வலியுறுத்தலே முதன்மையானதாக அமைதல் வேண்டும்’. ‘மாற்றம்’ தொடர்பான எமது எதிர்பார்ப்புகள் மிக அகலமானது; உயர்வானது. ஊடக சுதந்திரம் குறித்த புதிய ஜனாதிபதியின் வாக்குறுதியின் மீது நம்பிக்கைகொள்வோம். நம்பிக்கை வீணடிக்கப்படும்போது, இன்னும் 90 நாட்களில், மஹிந்தவை ஏற்றிச்சென்ற வாகனம் மைத்திரிபால வரவேற்க தயார் நிலையில் நிறுத்தப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All