Puttalam Online
puttalam-news

அரசியல் அனாதைகள் என்பதிலிருந்து விடுபடுவோம்.!

parliament

-Zakee Muradh-

பிரதேசவாரியான தேர்தல் முறைமையிலிருந்து விகிதாசார முறைமை எப்போது அமுல் படுத்தப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை புத்தளம் மக்கள் அரசியல் ரீதியாக அனாதைகளாக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு எங்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னால் யாரும் மறுப்பதற்கில்லை.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் பல பாராளுமன்ற தேர்தல்களை நாம் சந்தித்தாலும் இன்னும் எமக்கு புத்தி வந்ததாக தெரியவில்லை. மன்னிக்கவும் ஒற்றுமை ஏற்பட்டதாக தெரியவில்லை. அதனால் தான் இன்றும் சந்திகளில் நின்றுகொண்டு வெறுமனே அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறோம். யார் யாரோ எமது வளங்களை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற நாம் கைகொட்டி நிற்கிறோம்.

இதே தவறை நாம் மீண்டும் செய்து அரசியல் அனாதைகள் எனும் பட்டதை மீண்டும் பெறப்போகிறோமா, அல்லது இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எமது ஒற்றுமையை பயன்படுத்தி புத்தளம் தொகுதியை வென்றதை போன்று சாதிக்கப்போகிறோமா.? என்பது மக்களே எம் கைகளில் தான் உள்ளது. நானும் ஒரு வாக்காளன் தான் நீங்களும் ஒரு வாக்காளன் தான்.

அதற்கு அப்பால் நாம் புத்தளத்தான். புத்தளத்தான் எப்போதும் யாருக்கும் அடிமையாக கூடாது. நாமும் ஆளணும், நமது உரிமைகளை நாமே அனுபவிக்கனும். இனம் இனத்தை சாரும் என்பது பலமொழியானாலும் இதுதான் யதார்த்தம், மனித இயல்பு. எனவே காலம் தாழ்த்தாது இன்றே முடிவெடுக்க வேண்டும். காரணம் இன்னுமொரு பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ளன.

அதேநேரம் எமது ஊர் பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்ற வேண்டுமென்றால் எல்லோரும் வாக்களிக்க வேண்டும், எல்லோரும் ஒரே கூரையின் கீழ் அணித்திரள வேண்டும். நீல கட்சி, பச்சை கட்சி, சிவப்பு கட்சி, மஞ்சள் கட்சி என்று எப்படி இருந்தாலும் நாம் நமது உரிமையை முதன்மை படுத்த வேண்டும். அதற்கு பிறகுத்தான் கட்சி மரியாதை, கட்சி விசுவாசம் எல்லாம் இருக்க வேண்டும்.

கட்சி கட்சி என்று அலைந்து கடைசியில் முகத்தில் கரியை அள்ளி பூசிக்கொண்டு இருந்து என்ன பயன் இருக்கப்போகிறது. நீங்கள் சொல்வது கேட்கிறது. நீங்கள் சொல்வதை போல ஒருவர் ஒரு கட்சியில் இணைந்து வாக்கு கேட்கும் போது இன்னொரு கட்சி ஆதரவாளர் அவருக்கு வாக்கினை அளிக்க மறுக்கிறார். “அவரை இந்த கட்சிக்கு வரச்செய்யலாமே” என திருப்பி கேட்கிறார். இப்படி வாக்கு கேட்பவரும் கட்சியை விட்டு வர பிடிவாதமாக இருந்து, வாக்காளரும் கட்சியை விட்டுக்கொடுக்காது இருக்கும் நிலை தொடருமானால் புத்தளத்தானுடைய அரசியல் கனவு கனவாகவே சென்றுக்கொண்டிருக்கும்.

இது மாற்றப்பட வேண்டும், விட்டுக்கொடுப்புகள் நடைப்பெற வேண்டும். இப்படி இருக்குமானால் நாம் பாராளுமன்றம் ஏறுவோம், நமது உரிமைகளை மீண்டும் பெறுவோம். இன்ஷா அல்லாஹ்..

இதனடிப்படையில் தான் “புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு குழு” (PPAF) கட்சி பாகுப்பாடின்றி உங்கள் முன் வருகிறது. இதன் பிரதான நோக்கமே புத்தளத்தின் அனைத்து குடிமக்களையும் வாக்களிப்பில், ஒன்றினைத்து வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்து புத்தளத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதே ஆகும்.

என்ன இல்லை எம்மிடத்தில், அனைத்தும் இருந்தும் ஒரு பாராளுமன்ற ஆசனம் இல்லையே. இப்பாராளுமன்ற ஆசனம் இல்லாமையால் புத்தளம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எத்தனை எத்தனை, நாவால் சொல்ல முடியுமா, இல்லை கையால் தான் எழுத முடியுமா..?

நாம் வீறுக்கொண்டு எழவேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க கூடாது. வாக்களிப்பே எங்கள் ஒரே சக்தி, ஒரே பலம். கடந்த காலங்களில் வாக்களிப்பில் விட்ட தவறுகள், எமது அறியாமையை பயன்படுத்தி யாரோ பெற்ற ஆசனங்கள், வாக்களிப்பின் பெறுமதி தெரியாமை என்பன இனியும் தொடர இடமளிக்க கூடாது. புத்தளத்தான் மடையன் அல்ல அவன் புத்திசாலி என்று நிருபிக்க வேண்டும். வெறுமனே நின்று கதைத்து கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது. சற்று நேரம் உட்கார்ந்து சிந்தித்து பாருங்கள் அனைத்தும் விளங்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது, ஒற்றுமை அழைக்கிறது அனைவரும் அணித்திரளுங்கள் புத்தளத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதற்கு. புத்தளம் சமூகத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் ஏன் தேவைப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்டால் நாம் என்ன என்ன அநூகூலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா..?

WAK


One thought on “அரசியல் அனாதைகள் என்பதிலிருந்து விடுபடுவோம்.!

  1. Mahroof Marikkar says:

    இதை சொல்லபோய் தானே விரட்டி விரட்டி அடித்தார்கள். நான் தான் ராஜா எனக்கு மாத்திரம்தான் ஓட்டு போடனுமுண்டு அடம்பிடித்து அடுத்தவனை எல்லாம் வந்தான் வரத்தான் என்பதுபோல் நினைத்தால் எப்படி?

    தோத்து மூக்குடைந்து பெட்டிப் பாம்பாய் வீட்டுக்குள் முடக்கிருந்து கொண்டும் இன்னும் வீராப்புதானே பேசுறாரு நம்ம ஊரு பழைய ராஜா.

Leave a Reply to Mahroof Marikkar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All