நாட்டில் கடந்த காலங்கள் தொட்டு இக்காலப்பகுதி வரை முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான குற்றசாட்டுகள் பெரும்பான்மை சமூகத்தவர்களால் சுமத்தப்பட்டு வருவதை அவர்களின் அறிக்கைகள் மூலமாக காணுகிறோம், கேட்கிறோம். அதில் ஒன்றுதான் முஸ்லிம்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்பது.
இக்குற்றசாட்டை பொய் என்றும் கூறமுடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பொதுவாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது எதிரணிக்கு தமது ஆதரவினை தெரிவிப்பது, தேசியக்கீதம் இசைக்கப்படும் போது அதற்கு மரியாதை அளிக்கத்தவருவது, சுதந்திரத்தின கொண்டாட்டங்களின் போது தமது இருப்பிடங்களை வெறுமையாக வைத்துக்கொள்வது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது ஏன் இவ்வாறு காணப்படுகிறது என பார்க்கும் போது அது மனித இயல்பின் ஒரு வகை என முடிவு வருகிறது. மனிதனின் விருப்பு வெறுப்புகள் ஆளுக்காள் வேறுப்படும் போது இவ்வாறன பெறுபேறுகளை காணமுடியும். இக்குற்றசாட்டுகளை தனியே முஸ்லிம்கள் மீது மட்டும் சுமத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இக்குற்றசாட்டில் நான்கு சமுதாயமும் உள்ளடங்கும்.
தமிழர்களிலும், கிறிஸ்தவர்களிலும் ஏன் பெளத்தர்களிலும் கிரிக்கெட்டில் எதிரணிக்கு ஆதரவினை வழங்கக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தேசிய கீதம் இசைக்கும் போது அதற்கு மரியாதையளிக்க தவறுபவர்களை நான்கு சமுதாயத்திலும் காணலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தமது இருப்பிடங்களை வெறுமையாக வைத்திருப்பவர்கள் நான்கு சமுதாயத்திலும் இல்லாமலில்லை.
இவ்வாறிருக்க தனி சமுகத்தை மட்டும் குறிப்பிட்டு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இருந்தாலும் இவ்வாறன குற்றசாட்டுகள் எம்மத்தியில் உலாவருவதை முழுதாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் குறைப்பது சுகமல்லவா.
கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் நாடு என்று வரும் போது எமது விருப்பு வெறுப்புகளை ஒருபுறம் வைத்து விட்டு நமது நாடு என்பதற்கு முதன்மை அளிப்போமானால் நாம் ஒன்றும் குறைந்து போக மாட்டோம், மாறாக எம்மீதான குரோத பார்வை நீக்கப்படும்.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது ஐந்தாறு நிமிடம் அமைதியாக மரியாதை செலுத்தும் போது எமக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட போவதில்லை, மாறாக எம்மீதான கீழ்த்தரமான பார்வை இல்லாமல் ஆக்கப்படும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை நாடே கொண்டாடும் போது எமது வீடுகளை, எமது கடை தெருக்களை வெறுமையாக வைத்து அவர்களின் வஞ்சனை பார்வை சுமக்காது சிறிய கொடிகளை பறக்கவிட்டு முஸ்லிம்கள் அப்படி அல்லவென நாம் வாழும் நாட்டை கொஞ்சம் சந்தோஷப்படுத்தினால் மனித மனங்களும் சந்தோஷமடையுமே.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்களின் பின்னணியில் இக்காரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாம் தனியே அல்ல, சூழ பல்வேறுப்பட்ட சமயங்களை பின்பற்றுவோர், வேறுப்பட்ட குணாதிசயங்களை கொண்டோர் மத்தியில் வாழ்கிறோம்.
எனவே நாம் வாழும் நாட்டை நேசித்து நமது அயலவர்கள் மனங்கள் புண்படாது வாழும் போது இறைவனின் உதவிகளும் எமை தேடிவரும். தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு கிட்டும். இனியும் எம்மீதான அவப்பெயர் தொடரக்கூடாது. எமது செயற்பாடுகள் அவ் அவப்பெயரை நீக்க வேண்டும், புதிய வரலாற்றை நோக்கி நகர வேண்டும்.
WAK