
ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுஸி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்துக்கான அங்கீகாரம் 1988 இல் இடம் பெற்ற வட மேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் உறுப்பினர் ஒருவரைப் பெற்றது மூலமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற,மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு புத்தளம் மாவட்டத்தில் ஏற்ற, இறக்கங்களுடன் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்திலும், யானைச் சின்னத்திலும், கதிரைச் சின்னத்திலும்,வெற்றிலைச் சின்னத்திலும், ஒரு சந்தர்ப்பத்தில் அன்னாசி சின்னத்திலும் கூட போட்டியிட்டது. பாராளுமன்றத் தேர்தலைத் தவிர்த்து மாகாண சபைத் தேர்தல்களில் ஒன்று,இரண்டு, சில போது மூன்று உறுப்பினர்கள் கூட பிரதிநிதித்துவம் செய்த வரலாறு முஸ்லிம் காங்கிரசுக்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ளது.
2004 இல் தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை புத்தளத்துக்கு வழங்கியது முஸ்லிம் காங்கிரஸ் செய்த மாபெரும் கைங்கரியமாகும். இறுதியாக நடந்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கி ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன கூட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாத போது முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஒரு பிரதிநிதியை தக்க வைத்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சகல தரப்பிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் இவ்வேளை புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆறு பொது தேர்தல்களிலும் தமது பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியாமல் நிராசையாகிப் போன நமது மக்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இழந்து தவிக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை இரு பிரதானக் கட்சிகளையும் தவிர்த்து சிறுபான்மைக் கட்சியை முதன்மைப்படுத்தி, புத்தளத்தில் இயங்கும் சிவில் அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் என்பவற்றுடன் கைக்கோர்த்து பெறலாம் என்ற அதீத ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
எனவே அம்மக்களின் உணர்வுகளுக்கும், அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து, தனித்து போட்டியிட முன்வருவது குறித்து தீர்க்கமான முடிவொன்றை புத்தளம் மக்களுக்காவும், அவர்களுடன் இரண்டறக் கலந்து வாழும் , வாக்காளர்களாக கூட தம்மை பதிவு செய்து கொண்டுள்ள வட மாகாண மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டும் என்று வினயமாக வேண்டுகிறோம்.
மேலும் பெரும்பான்மைக் கட்சிகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாததை நிதர்சனமாக உணர்ந்து, மாற்று வழிமுறை ஒன்றை கடைப்பிடித்து, மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு முனைப்புடன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தையும் (PPAF) அணுகி, காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் தயவாய் வேண்டுகிறோம். அவர்களினதும், மக்களினதும் மனங்களில் படிந்திருக்கும் பாராளுமன்றப் பிரதிநித்துவம் தொடர்பிலான கனவை நனவாக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்துக்கு தாங்களும் பங்குதாரராக வேண்டும்.