கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் யாப்பில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் இடம் பெறவுள்ளன, குறிப்பாக ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து அரசின் தலைவராக பிரதமரும் இருக்கின்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
அதேபோன்று தேர்தல், பொது சேவைகள், பொலிஸ், நீதித்துறை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு போன்ற துறைகள் சுயாதீனமான கமிஷன்களுக்கு கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது, தற்பொழுது அமுலில் உள்ள விகிதாசார முறைக்குப் பதிலாக, பழைய தொகுதிவாரி முறையுடன் மாவட்ட மற்றும் தேசிய விகிதாசார கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் தேசிய ஷூரா சபை முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடிய பொழுது, இடம் பெறவுள்ள பொதுத் தேர்தல் அமுலில் உள்ள விகிதாசார முறையிலேயே இடம் பெரும் என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார் . தேர்தல் ஆணையாளரும் கால அவகாசம் போதாமை கருதி அதே கருத்தினை கூறியிருந்தார்.
அதேவேளை, முன்வைக்கப்பட்டுள்ள நகல் யோசனைகளின் கோப்பொன்றை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தேசிய ஷூரா சபையின் நிபுணர்கள் கவனத்திற்கு சமர்ப்பித்தார், அதனை தேசிய ஷூரா சபை நிபுணர் குழுவொன்று ஆராய்ந்து முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சில பரிந்துரைகளை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய, சோபித தேரர் போன்றவர்கள், ஏற்கனவே தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஆராயப்பட்ட தேர்தல் முறை சீர்திருத்த யோசனைகளை இடம் பெறவுள்ள தேர்தலில் அமுல்படுத்தல் வேண்டும், தேர்தல் ஆணையாளருக்கு போதிய கால அவகாசம் பெற்றுக் கொடுக்கப்பட்டே பாராளுமன்றம் கலைக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நேற்று அமைச்சர் ஹக்கீமிடம் தனிப்பட்ட முறையில் வினவியபொழுது அதனை ஊர்ஜிதப்படுத்தியதேரடு ஜனாதிபதி மைத்ரி அவர்களும் அது குறித்து தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜாதிக ஹெல உறுமயவின் பிவிதுரு ஹெடக் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பின் மீதான நகல் நகல் யோசனைகளினூடாக முன்வைக்கப்பட்டிருந்த பல அம்சங்கள் தற்போதிய அரசின் கனத்தை ஈரத்துள்ளமை தற்போதைய நகல் யோசனைகளை வாசிக்கின்ற பொழுது புலப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் (18/11/2014) மாதம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த பட்டறை ஒன்றில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சட்ட வல்லுனர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரம ரத்ன போன்றோருடன் குறித்த தேர்தல் முறை மாற்றம் குறித்த பிவிதுரு ஹெடக் முன்மொழிவுகள் ஆராயப்பட்டது, அது தவிர நானறிந்த வகையில் வேறெந்த முஸ்லிம் அரசியல் அணியும் இது குறித்த காத்திரமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை.
உண்மையில் தற்பொழுதுள்ள தொகுதி முறையில் தேர்தல் இடம் பெற்றால் முஸ்லிம்களது பிரதிநிதித் துவங்கள் பாரிய அளவில் வீழ்ச்சி அடையட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேவேளை யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே புதிய தொகுதி எல்லை மீள் நிர்ணயங்கள் விவகாரத்தில் பேரின தேசிய சக்திகள் மும்முரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறுகிய காலத்திற்குள் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்து வரும் தேர்தல்கள் அதனடிப்படையில் இடம் பெற்றாலும், அல்லது தேர்தல் ஆணையாளருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு எதிர்கொள்ளவுள்ள தேர்தலும் இடம் பெற்றாலும் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனபதில் சந்தேகமில்லை.
தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய சுமார் 22 முஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம் இருப்பதனை நடை பெற்று முடிந்த தேர்தல்களின் தொகுதி வாரி வாக்களிப்பு விகிதங்களை பார்க்கும் பொழுது அறிய முடிகிறது.
துரதிஷ்ட வசமாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் குறித்து இதுவரை தமது பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆய்வுகள் அறிக்கைகளை இதுவறை தயாரிக்க வில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
அதேவேளை நாளை திங்கள் (16/02/2014) முன்னால் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் தலைமையில் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஒரு அமர்வு இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பில் இடம் பெறவுள்ளது, இவ்வாறான அமர்வுகளைத் தொடர்ந்து உடனடியாகவே அரசியல் மற்றும் சட்ட நிபுணர் குழுவொன்று அமையப் பெறுவதே உரிய இலக்குகளை நோக்கி எங்களை நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஆணை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் உள்ளூராட்சி,மாகாண சபை மற்றும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தம்மிடமுள்ள அதிகாரங்கள் வளங்கள் வரப்பிரசாதங்கள் என்பவற்றை ஒன்று திரட்டி மேற்படி விவகாரத்தில் தமது கவனத்தை அவசரமாகவும் அவசியமாகவும் செலுத்துதல் வேண்டும், அதற்கான நிபுணர் மற்றும் தன்னார்வ குழுக்களை அவர்கள் ஒன்றிணைந்து அமைத்து கூட்டாக செயற்படுவதே சிறந்த ஏற்பாடாக இருக்கும்.
Share the post "முஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்"