Puttalam Online
current

முற்றத்து மல்லிகை மணக்கட்டும்..!

  • 16 February 2015
  • 1,237 views

MAB Wasim Akram[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]

புத்தளம் சமூகத்தின் ஒரு குரலாக ஒலிக்கும் புத்தளம் ஒன்லைன் செய்தி இணையத்தளம் பிறந்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிறது. 2011-02-16 அன்று பூத்த புத்தளம் ஒன்லைன் ஐந்தாவது அகவையில் காலடியெடுத்து வைக்கும் போது புதுப்பொலிவுடன் எம்மை வரவேற்கிறது, மணக்கிறது.

கிணற்று தவளைகளாக இருந்த புத்தளம் மக்களின் செய்திகளை, மனுக்களை எல்லை கடந்து அறிய செய்யும் உன்னத பணியை அறிமுகப்படுத்திய பெருமை இத்தளத்திற்கு உரியது என்று சொன்னால் தப்பேதுமில்லை.

இவ்வாறானதொரு நிலையில் புத்தளத்தின் பெருமைகளை, புத்தளத்தின் அருமைகளை பேணி பாதுகாக்கும் பெட்டகமாக, வரலாற்று ஆவணமாக விளங்கும் புத்தளம் ஒன்லைனின் பணிகள் என்றும் தொடரவேண்டும் என்பதே எமது அவா.

எமது முற்றத்து மல்லிகை என்றும் மணக்க வேண்டும். அதற்கான உரமாக நாம் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். எமது சந்ததிகளுக்கு வரலாறுகள் அழிவடையாது சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். சில போது புத்தளம் ஒன்லைனின் வேகம் குறைந்து இருக்கலாம், மந்த கதியில் சென்று இருக்கலாம். ஆனாலும் அது தனது முயற்சியை என்றும் தளர விட்டதில்லை.

Logo.JPEG

முயற்சி செய்தால் என்றும் வாழலாம் என்பதை நாம் இதிலிருந்து படிப்பினையாக பெறவேண்டும். இது எமது சொத்து. இதை பாதுகாக்க வேண்டியது எமது கடமை. எமக்காக உழைக்கும் இத்தளத்திற்கு எமது பங்களிப்பை வழங்க நாம் முன்வர வேண்டும்.

எண்ணற்ற மனித தேவைகளுடன் ஒப்பிடுகையில் வளங்கள் பற்றாக்குறை என்கின்ற போது இதன் வேகத்தில் தளம்பல் ஏற்படலாம். ஆனால் அது ஒரு போதும் சோர்ந்து போகாது. புத்தளத்தின் முயற்சி அதன் இலக்கை சென்றடைந்தே தீரும்.

முக்கியமாக எல்லை கடந்து வாழும் தன் சொந்தங்களை அனைத்து செல்லும் இத்தளம் சுவடிக்கூடத்தின் ஊடாக புத்தளத்தின் மரபுகளையும் பேணி செல்கின்ற போது இன்றும் எமது மூதாதையர்கள் எம்மோடு சேர்ந்து பயணிக்கிறார்கள்.

ஒரு விடயத்தை உருவாக்குவது என்பது கடினமான காரியம். அவ்வாறிருக்கும் போது புத்தளத்திற்கென்று ஒரு இணையத்தளம் வடிவமைக்கப்பட்டு இன்றுவரை திறம்பட நகர்த்தி சென்று ஐந்தாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்க செய்த, இவ்வண்டியின் சாரதிகளை நாம் மறக்க இயலாது.

சாதிக்கின்ற ஒருவனுக்கு ஊக்குவிப்புகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும், தட்டிக்கொடுப்புகள் தாராளமாக இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைய சூழலில் பணம் எந்தளவு முக்கியமோ, அதுபோலவே நேரமும் இன்றியமையாதது. இவ்வாறானதொரு பின்னணியில் தான் தமது கால நேரத்தை, பணத்தை தியாகம் செய்து இதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த, பின்னால் இருந்து சேவை செய்தவர்களை மறக்க கூடாது. மரத்தினை நாட்டியவர்களை மறந்து போகலாகாது.

இம்மரம் இதன் கிளைகளை இன்னும் விசாலப்படுத்த வேண்டும், இம்மரத்தின் கனிகளை சுவைக்கும் வழிபோக்கனாக இராது இதனை தாங்கும் விழுதுகளில் ஒன்றாக நாமும் மாற வேண்டும். எமது பாரம்பரியங்கள், பண்பாடுகள் மூலை முடுக்கெங்கும் ஒலிக்க வேண்டும்.

முற்றத்து மல்லியொன்று
மணக்கிறது அது
மகிழ்ச்சியில் மிதக்கிறது

செடியொன்று
செழிக்கிறது அது
செந்தமிழை வளர்க்கிறது

பூவொன்று
பூத்தது அது
புத்தளமாக பிரகாசிக்கிறது

புத்தளம் ஒன்லைன் – முற்றத்து மல்லிகை – மணக்கிறது..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All