Puttalam Online
historical-notes

புதையல் 1: நெடுங்குளம் தரவை இன்று அது இல்லை எங்கே ?

  • 28 March 2015
  • 970 views

“புத்தளத்துப் புதையல்கள்”  என்ற இத் தொடர் மர்ஹூம் AMM ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களில் இருந்து ஆரம்மாகின்றது.

Asan neina maraikar and haniffa puttalamமர்ஹூம் AMM ஹனீபா அவர்கள்  புத்தளம் நகரில் இலை மறை காயாக வாழ்ந்து மறைந்த  ஓர் பெருந்தகையாவார். ஆசிரியராக, அதிபராக, சமய சீலராக, சமூக சேவகராக ஊரவர்களால் ஓரளவு அறியப்பட்ட அவர் பிரபலமாகப்  பேசப்படாதவராவார்.

அழகான கையெழுத்துக் கொண்ட அன்னார்  புத்தளத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தேடி ஆராய்ந்து தொகுத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்கும் கைங்கரியத்தைச் செய்தவர்.

 அவர் எழுதிய ஒரு குறிப்பு பின்வருமாறு :

“அல்லாஹ் காலத்துக்குக் காலம் உலகிலே பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறான். அம்  மாற்றங்கள் கால ஓட்டத்தில் மக்களின் இதயங்களில் இருந்து மறைந்துவிடுகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்களைப் பற்றி அடுத்து வரும் சமுதாயம் அறிய வேண்டும் என்று விரும்பி அவைகளை ஏடுகளிலே பொறித்து வைப்பதுவே சரித்திரம் ஆகும்.

புத்தளம் பழங்காலத்து நகர். எனது 58 வருட வயதின் காலத்திலே எத்தனையோ மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. பால்ய வயதிலே கேட்ட, கண்ட  அனுபவங்கள் இப்பொழுதும் மனத்திரையிலே பசுமையாகப் பளிச்சிட்டுப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும், வட்டாரத்திலும் எத்தனையோ மாற்றங்கள். போக்கிலே மாற்றங்கள். இவைகளை நினைவுக் கெட்டிய வரை எழுதிவைக்க உள்ளம் தூண்டியது. எனவே இதனை எழுதத் தொடங்கினேன்.”

1983. 04. 14 வியாழன் அஸரின்  பின்.

 

புதையல்    1

நெடுங்குளம் தரவை
 
புத்தளம் மரைக்கார் வீதி கிழக்கு அந்தத்தில் உள்ள “காலைப் பாலம்” என்ற பாலத்திலிருந்து வடக்கே நெடுங்குளம் வரை ஒரு வீதியும், அதிலிருந்து பிரிந்து வான் வரை ஒரு வீதியும் செல்கின்றது. இவையெல்லாம் உள்ளடக்கிய ஒரு பரந்த பிரதேசமே நெடுங்குளம் தரவை என்று அழைக்கப்பட்டது.

இத்தரவையின் எல்லைகளாவன, வடக்கே காலைப் பாலம், போல்ஸ் வீதி, தெற்கே நெடுங்குளம், கிழக்கே வான், மேற்கே வெட்டுக் குளம் றோட். இவ்வளவையும் உள்ளடக்கியதே அக்காலத்தில் நெடுங்குளம் தரவை என்று அழைக்கப்பட்டது.

அனைத்தும் பற்றைக் காடு, உடங் காடு.  கடமையான் குளத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ள இடம் நெல் வயல்களாக இருந்தன.

இந்த நெடுங்குளம் தரவையில் 3வது பெருநாள் தினத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சி. சே. அகமது அவர்களின் தலைமையில் ஒரு குழு இதனை நடாத்தி வந்தது. புத்தளத்தைப் பொறுத்த வரையில் இந்த பெருநாள் ரேஸ் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாக முன்னோர்கள் கூறுவர்.

புதையல்கள் தோண்டப்படும் . . .

குறிப்பு : இப் பதிவு தொடர்பான மேலதிக விபரங்கள், இங்கு குறிப்பிடப்படும் நபர்கள், நிகழ்வுகள், ஆண்டுகள், போன்றன தெரிந்திருப்பின், வெளிப்படுத்தி எமது எதிர்கால புத்தளம் சந்ததிக்கு உதவுங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All