Puttalam Online
editorial

கருத்து – 15: வித்தியா பற்றிய பதிவுகளும் சமூக ஊடகங்களின் செல்நெறியும்..!

  • 6 June 2015
  • 1,069 views

editorபுங்குடுதீவு மாணவி வித்தியா பலாத்கார வன்புணர்வுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அவளின் புகைப்படங்கள், ஒளிபதிவுகள் எமது சமூக ஊடகங்களில் இன்னும் பரிமாறப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன.

வன்புணர்வு என்ற கற்பழிப்புக் குற்றம் கொடூரமானது தான், அதுவும் ஒரு பாடசாலை சிறுமி மிக மோசமான​ முறையில் பாலியல்ரீதியாக இம்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பது அனைவருக்கும் புரியும். அதனால்தான் நாடு தழுவியரீதியில் மக்கள் போராட்டங்கள் இன்றுவரை நடைபெற்றுவருகின்றன. ஜனாதிபதிகூட பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்ததுடன், விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து இதனை விசாரணை செய்யும்படியும் கட்டளை இட்டார்.

அவ்வாறிருக்கையில் அவளின் இறந்த, சிதைந்த முகங்களையும், அவள் அசிங்கப்பட்டு போன புகைப்படங்களையும், ஒளிப்பதிவுகளையும் மறுபடி மறுபடி சமூக ஊடகங்களில் பகிருவது ஆரோக்கியமான விடயமல்ல.

அந்த ஐந்து நபர்கள் சருகுக்குள் செய்த அசிங்கத்தை இங்கு ஐயாயிரம் நபர்கள் சந்தியில் போட்டு விற்கிறார்கள். அனுதாபம் தெரிவிக்கின்றோம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அசிங்கத்தை நோக்கியல்லாவா செல்கின்றனர். சகோதரி என்கிறார்கள், நண்பி என்கிறார்கள் வாஸ்தவம் தான். இப்படியா சகோதரி, நண்பி மானத்தை மீண்டும் மீண்டும் பகிரங்கப்படுத்துவது..?!.

இறந்த உடல்களையும், நிர்வாண புகைப்படங்களையும் பகிர்ந்தும், பரிமாறியும் மேலும் மேலும் அவளை களங்கப்படுத்துவது தவறாகும். அந்த நாசகாரர்கள் செய்த செயலை நாமும் செய்வதா..?!. இறந்த பின்னும் அவளுடைய மானம் அவளுக்கு முக்கியம் என்பதை மறக்கமுடியுமா..?!

அவளுக்கு குடும்பங்கள் இருக்கிறது, உறவினர்கள் இருக்கிறார்கள், அயலவர்கள் இருக்கிறார்கள் எனும் போது அனுதாபம் அவர்களுக்கு நோவினையாக இருக்க கூடாது இல்லையா.

இன்னும் சில மேதாவிகள் அவளுடைய புகைப்படங்களுக்கு ஹிஜாப்பை அணிந்தது போல எடிட்டிங் செய்து பிரசுரிக்கின்றனர். எமக்கு தெரிகிறது நீங்கள் திறமையானவர் என்று. அதற்காக இப்பெண்ணின் புகைப்படத்தில் எடிட்டிங் செய்ய உமக்கு உரிமை இல்லை.

கருத்து சுதந்திரம் இருக்கின்றது, எமக்குகவலை வாட்டுகிறது என்பதற்காக மரத்திலிருந்து விழுந்தவனுக்கு தேள் கொட்டுவது போல் இன்னும் இன்னும் துன்பத்தை கொடுக்கத்தான் வேண்டுமா..?!

வித்தியா எனும் விதை விருட்சமாக முன் கருகிப்போனாள் -அது இறந்தகாலம். இறந்தகால செயலுக்கு நீதி கேட்கும் அதேவேளை, நிகழ்காலத்தில் வித்தியாக்கள் பாதுகாப்பான சூழலில் வளருவதற்கு எமது பதிவுகளும் சமூக ஊடகங்களும் தடையாக அமைந்துவிடக்கூடாது.

இது இவ்வாறிருக்க, இன்று இனச்சுத்திகரிப்புக்குள்ளாகிவரும் பர்மா முஸ்லிம்களின் அவலங்களையும் துயரங்களையும் தாங்கிக்கொள்ள முடியாத எம்மவர்களின் சமூக ஊடகப் பதிவுகள்… சில வேளைகளில் அவற்றின் நம்பகத்தனமையினை கேள்விக்குட்படுத்தியுள்ளன.

எமது நாட்டில் நடந்து முடிந்த அரசியல் மாற்றத்தில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக்க இன்றியமையாததாகும். கத்தி அது ஆப்பிளையும் வெட்டும் ஆளையும் வெட்டும். இது பயன்படுத்துபவர்கள் கைகளிலேயே உள்ளது.

சமூக ஊடகமும் அவ்வாறானதொன்றே அது பயன்படுத்துபவர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆப்பிளை வெட்டினால் நல்லது, ஆளை வெட்டினால் அது ஆபத்து. இதனடிப்படையில் சமூக ஊடகங்களுக்கு ஒரு வரைமுறை இருப்பது கட்டாய தேவையாக இருக்கிறது.

வரையறைகளை பேணி, பக்குவமான கருத்துக்களை பதிவிடும் போது எம்மையும் பாதுகாத்து, சமூகத்தையும் பாதுகாத்து செல்ல முடியும் என்பது திண்ணம். அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு சமூகங்கள் பயணிக்கின்றன. ஆரோக்கியமான கருத்துக்களால் ஆழ்மனதை பிடியுங்கள். நாகரிகமான பதிவுகளால் நற்பெயரை உழைத்திடுங்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All