Puttalam Online
editorial

கருத்து – 16: நோன்பினில், மனதினை நோவினை செய்ய வேண்டாமே..!

  • 1 July 2015
  • 842 views

hgope_206924புனித ரமழானுடைய நோன்பை அடைந்து ரஹ்மத்துடைய முதல் பத்தையும் நிறைவு செய்து விட்டோம். ஆனாலும் எமது கேலி கதைகளும், அவதூறுகளும், புறம் பேசுவதும் இன்னும் எம்மைவிட்டு அகலவில்லை. பதினொரு மாதம் தொடர்ந்து வந்த இவைகள் ரமழானுடைய மாதத்திலும் தொடருகின்றது.

நன்மைகளை அதிகமாக உழைத்துக்கொள்ள, நல்லமல்களை அதிகமாக கொள்ளையடித்து கொள்ள உதவும் இம்மாதத்தில் மேலும் மேலும் தீமைகளை, தீயமல்களை சம்பாதித்து கொள்கிறோம். இம்மாதத்தில் இவைகளை நிறுத்தாது எப்போது நிறுத்தப்போகிறோம்.

நோன்பினில் ஒருவன் தொப்பி சகிதம் பள்ளிவாயலுக்கு வருவதை பார்த்தால் போதும் “என்ன கஞ்சிக்கு போட்ட தொப்பியா.?” என்று ஆரம்பமாகின்றது கேலி கதைகள். தொழுகைக்கு அணிந்த தொப்பியாக இருக்ககூடும், நன்மையை எதிர்பார்த்து அணிந்திருக்கலாம். இறைவன் அறிவான்.

அவனது மனதினை நோவினை செய்வது மட்டுமல்லாது, தீமைகளையும் சம்பாதித்து, அவனை இதற்கு பிறகு பள்ளிவாயலுக்கு வராது தடைப்பன்னுகிறோம். ஏன்.? ஏன்.? அவன் தொழுகைக்கு அணிந்தால் என்ன., கஞ்சிக்கு அணிந்தால் என்ன., நமது நாவை பேணி நடப்பது நமது பொறுப்பல்லவா.!

நோன்பினில் பசார்களில் நின்றுக்கொண்டு அரட்டை அடிப்பது மட்டுமல்லாது அது நீண்டு அடுத்தவர்களை அவதூறு பேசுவது வரை தொடர்கிறது. குழுக்களாக கூடி புறம் பேசுவது மட்டுமல்லாது “வாட்சப் குருப், டெலிக்ரம் குருப்” வரையும் தொடர்கிறது.

ரமழானுடைய கண்ணியத்தை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல், நோன்புடைய மகத்துவத்தை தெரிந்திருந்தும் தெரியாதது போல் எத்தனை நாளைக்குத்தான் இருப்பது. எமக்கு கிடைத்த இந்த ரமழான் எத்தனையோ நபர்களுக்கு கிடைக்காது போயிருக்கிறது. இன்னும் எத்தனை நபர்களுக்கு கிடைத்தும் (நோய்வாய்ப்பட்டு, ஆரோக்கியமிழந்து) அதன் பலனை அனுபவிக்க முடியாது போயுள்ளது.

ஆனால் எமக்கு இவை இரண்டும் கிடைத்திருந்தும் பொடுபோக்காகவும், மற்றவர்களின் மனதினை நோவினை செய்தும் காலத்தை கழிக்கிறோம். இதனால் எமக்கு எந்தவொரு அனுகூலமும் கிடைக்க போவதில்லை. எமக்கு சாதகமான பலன்கள் கிடைக்காத எந்தவொரு வேலைகளையும் நாம் செய்ய முற்படுவோமா.? அப்படியிருக்கும் நிலையில் ஏன் இதனை மட்டும் செய்ய முன்வருகிறோம்.. இல்லையென்றால் ரமழானுடைய காலத்தில் மட்டுமாவது நிறுத்தி வைக்கலாமே..!

குழுக்களாக நின்று அடிக்கும் அரட்டை அண்மைக்காலத்தில் நமதூர் விருந்தோம்பல் பண்பை மீண்டும் பறைசாற்றி இருக்கிறது. குழுக்களாக நின்று அடிக்கும் அரட்டைத்தான் சமூக சேவையில் இளைஞர்களின் முன் வருகைக்கு காரணம். இன்னும் எத்தனையோ அரட்டைகள் அனுகூலமாக சிந்திக்கப்பட்டிருக்க இன்னும் எத்தனை எத்தனையோ வெற்று அரட்டைகளாகவே நீண்டு செல்கின்றன.

அடுத்தவர் மனதினை நோவினை செய்ய முற்படும் ஒருவர் தன்னை பற்றி சிந்திக்க வேண்டும். தன் மனதினை ஒருவர் காயப்படுத்தினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவனது மனது இருக்கும் என சிந்திக்க வேண்டும். வெகுளித்தனமாகத்தான் செய்யப்படுகின்றன, நண்பர்களுக்கிடையே தான் செய்யப்படுகின்றன. இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா.?

இது போதாதென்று அரசியல் வாய் சண்டைகளும் ஆரம்பித்தாயிற்று இப்புனித ரமழான் காலப்பகுதியில். குர்ஆனை அதிகமாக ஓதவேண்டிய வாய்கள் அடுத்தவரின் குறைகளை அதிகமாக மொழிகின்றது. இரவில் நீண்ட நேரம் நின்று வணங்க வேண்டிய நாம் இரவில் நீண்ட நேரம் நின்று மொணங்குகிறோம்.

சகோதரத்துவம் பேண வேண்டிய நாம் சண்டையிட்டு திரிகிறோம், ஒற்றுமைப்படவேண்டிய நாம் ஒதுங்கி செல்கிறோம். இவைகள் புனித ரமழான் மாதத்தின் ஆரோக்கியமற்ற அறிகுறிகளாகும். மற்ற மாதங்களுக்கும் இம்மாதத்துக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடுகிறது.

குர்ஆன் இறங்கிய இம்மாதத்தை, நோன்பு கடமையாக்கப்பட்ட இம்மாதத்தை எமது நாவினை பேணி, விட்டுக்கொடுப்புகள் செய்து பயன்படுத்தினால் வல்ல இறைவனின் அருள் என்றுமே எம்மை நோக்கி வரும், இறைவனின் கருணை என்றுமே எமக்கு கிட்டும்.

நோன்பினால் அடுத்தவர் மனதினை காயப்படுத்துவதை விட்டும் எம்மை நாமே பாதுகாப்போம், ரமழானின் மகத்துவத்தை பேணுவோம். இறைவனின் திருப்தியை பெறுவோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All