Puttalam Online
editorial

கருத்து – 17: வாக்களித்தல் என்பது ஓர் அமானிதம் – ஒரு சாட்சி பகர்தல்!

  • 8 August 2015
  • 1,635 views

முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வேண்டும். அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம்.

_DSC7554

இம்மாதம் 17 ஆந் திகதி நடக்கவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் இலங்கை திருநாட்டிற்கு எப்படி முக்கியமோ.? அதனை விட எமது புத்தளம் மண்ணிற்கு மிக முக்கியமானது.

தொகுதிவாரி தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட்டு விகிதாசார தேர்தல் முறைமை எப்போது அமுல்படுத்தப்பட்டதோ அப்போதிலிருந்து நேற்று வரை பாராளுமன்ற செல்லும் ஆசை நிராசையாகவே தங்கிக்கொண்டது.

அந்த கனவை நனவாக்க புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஒற்றுமையுடன் எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்தவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்ட பாரிய பிரயத்தனங்கள் வரவேற்கத்தக்கதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

இந்த கூட்டுமுயற்சியில் புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு குழுவின் (Puttalam District Political Awareness Forum – PPAF) பங்களிப்பு மிக முக்கியமானது என்றால் மிகையாகாது. இவர்கள் தமது கால நேரங்களை, செல்வங்களை செலவழித்து இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்தவத்தை பெற்றுக்கொள்ளும் இப்பயணத்திற்கு உந்துசக்தியாக செயற்பட்டுள்ளனர்.

Vote

வேட்பாளர்கள் தொட்டு ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்றினணயும் இவ்வேளையில் வாக்காளர்களும் இப்பயணத்தில் இணைந்திட வேண்டும். மாறாக கடந்த கால தவறுகளை நிகழ்காலத்தினில் செய்திடுவோமானால் 26 வருடங்கள் 31 வருடங்களாக அதிகரித்துவிடும்.

காலம் காலமாக கட்சி கட்சி என்று சுற்றி திரிந்து கடைசியில் கைசேதப்பட்டதே மிச்சம். புத்தளத்தை பொருத்தமட்டில் பச்சையோ, நீலமோ எதுவாயிருந்தாலும் பெரும்பான்மை கட்சியில் வாக்கு கேட்டு பாராளுமன்றம் செல்வது என்பது மிகக்கடினமான காரியம். இந்த சூழ்நிலையிலேயே சுயேட்சை குழுவில், ஒற்றுமை நம்மை அழைக்கிறது. இந்த ஒற்றுமை தான் எமது இருபத்தாறு வருட கனவை நனவாக்க போகிறது. கட்சித்தான் முக்கியம் என்று கருதினால் மற்றவன் வெற்றி ஊர்வலமாக செல்லும் போது நாம் கைக்கட்டி வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.

மாற்றத்தை தேடி செல்லும் நாம் மாற்றத்துடன் கை கோர்ப்போம், வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இக்கூட்டணியில் இணைவோம், அபிலாசைகளை அடைந்திடவே அலையினில் நனைந்திடுவோம்.

அதேநேரம் ஆதரவாளர்களும் வேட்பாளர்களும் பிரசார யுக்திகளை கையாள வேண்டும். பழையனவற்றை தவிர்த்து புதிய வழிமுறைகளை முன்வைக்க வேண்டும். அடுத்த கட்சிக்காரன், அடுத்த வேட்பாளன் செய்யமாட்டான், அவர் தகுதியுடையவர் இல்லை, அவன் பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றான் என்பதை இயலுமானவரை தவிர்த்து நடக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒரே முஸ்லிம் உம்மத், நாம் எல்லோரும் ஒரு மண்ணின் வாரிசுகள் என்பதை மனதில் வைத்து எமது பிரசாரங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தாத விதத்தில் எமது பேச்சுக்களை நகர்த்தி செல்ல வேண்டும்.

தேர்தல் வரும் போகும், ஆனால் எமது உறவுகள் நீடிக்க வேண்டும், தேர்தலினால் எமது உறவுகள் முறிவடைந்து விடக்கூடாது. எமது முயற்சிகளை நாம் செய்யலாம். எமது பிரசாரங்கள் ஆரோக்கியமானதாக இருக்குமானால் வாக்காளர் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விடலாம்.

விட்டுகொடுப்புகளாலும், சகிப்புத்தன்மையினாலும் உருவாகி இருக்கும் இக்கூட்டணியின் கையினை பலப்படுத்த அனைவரும் முன்வருவோம். கட்சி பேதங்களை மறந்து, எமது சந்ததிகளின் எதிர்காலத்தினை மனதில் முன்னிறுத்தி வாக்கினை அளித்திடுவோம். வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் நமது வாக்கு ஓர் அமானிதம் என கொண்டு வாக்கினை அளித்திட முன்வருவோம்.

வீணாக்கும் ஒவ்வொரு வாக்கும் நாளைய எம் சமுதாயத்திற்கு நாம் விட்டுச்செல்லும் குழிகளாகும். குழியில் தள்ளிவிடாது, நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுவிடாது எமக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம். வெற்றிக்கனவை சுவைத்திடுவோம். நாம் பட்ட கஷ்டத்தை எம் சந்ததிகள் படாது அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கிடுவோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All