Puttalam Online
editorial

கருத்து 18: கருத்து சுதந்திரத்திற்கு வரையறை வேண்டும்

  • 3 September 2015
  • 943 views

தேர்தல்கள் நிறைவுக்கு வந்து வாரங்கள் நகர்ந்துவிட்டது. ஆனாலும் தேர்தல்களின் தடையங்கள் இன்னும் எம்மை விட்டு அகலவில்லை. மழை விட்டாலும் துவானம் விடாது என்பது போல மேடை பேச்சுக்களில் ஒலித்த வார்த்தைகள், தீப்பிழம்புகள் இன்றும் வீசுகின்றது.

எமை சூழ எம் உறவுகளே, ஒரே உம்மத்துகளே இருக்கிறார்கள், வேற்றுக்கிரக வாசிகளோ, காட்டுவாசிகளோ இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் எமது கருத்துகள் எல்லையை மீறி செல்ல வேண்டும், சங்கடங்களை சுமக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எதுவும் அளவாக இருக்குமானால் எல்லாமே சிறப்பாக இருக்கும் இல்லையா..!

தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் குறை பேசித்திரிந்த வாய்கள் விடாது சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்கின்றது. தட்டச்சில் கைகள் தாறுமாறாக வேலை செய்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான செயலாக ஆகிவிடாது.

your-voice-graphicகருத்துக்களை தெரிவிக்கும் நாம் இதன் பாரதூரம் என்ன, இவைகள் தனிமனித, சமூக தாக்கம் என்ன, மனிதநேயத்தினை மீறுகின்றதா என வரையறுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். சுதந்திரம் இருக்கிறது என்று மனதில் நினைத்ததை எல்லாம் பேசுவோமானால் அங்கே வேற்றுமை உருவாகிறது.

நான் சொல்வதெல்லாம் சரி, என் பக்கமே நியாயம் இருக்கிறது என்று முன்னரே ஒருவர் நினைப்பாரானால் அக்கணமே எல்லாம் முடிந்துவிடும். அடுத்தவர் என்ன மனநிலையில் உள்ளார், அவரின் நிலையில் நானிருந்தால் எப்படி என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் நல்லதுதானே..!

வில்லிருந்து புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து புறப்பட்ட சொல்லும் திரும்பி எடுக்க முடியாது, அதேநேரம் உடைந்து போன கண்ணாடியை திரும்ப ஒட்டிவைக்க முடியாது. இவ்வாறானதொரு நிலையில் எமது நாவினை பக்குவமாக பயன்படுத்த வேண்டும்.

தட்டச்சு செய்யும் எமது கைகள் நிதானத்தை கையாள வேண்டும். தேர்தல்களில் வெற்றியும் வரலாம், தோல்வியும் வரலாம். இறைவனின் நியதியை மாற்ற முடியாது.

எல்லாம் இன்றோடு முடிந்து போவதில்லை, சகோதரத்துவத்தை பேணி நடக்க நாம் தயாராக வேண்டும். வெற்றி கொடியை நோக்கி ஓடும் போது போட்டி கட்டாயம் இருக்க வேண்டும். அந்த போட்டி பொறாமையாக மாறக்கூடாது.

நாம் மனித இறைச்சியை இல்லை இல்லை, சமைக்காத இறைச்சியை உண்ண விரும்புவோமா.? இயலவே இயலாது. அதே போலத்தான் இதுவும். கருத்துக்கள் சொல்வதில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது, எல்லோருக்கும் பொறுப்பும் ஆகும்.

உங்களது கருத்துக்கள் நாளைய சமூதாய மாற்றத்திற்கு வித்திடலாம். உங்களது கருத்துக்கள் உங்கள் சுற்றத்தார்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். உங்கள் கருத்துக்கள் பலருக்கு நேர்வழி தந்திடலாம். எப்போதும் எந்நேரமும் எம் கருத்துக்கள் ஆரோக்கியமாக இருக்குமானால் எல்லாம் நன்றாகவே அமைந்திடும். வரையறைகளை தாண்டாது எம் கருத்துக்களை பகிர்ந்திடுவோம், சமத்துவத்தை விதைத்திடுவோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All