Puttalam Online
editorial

கருத்து – 19: வீதி விதிகளை மதிப்பது எப்போது.?

  • 5 October 2015
  • 1,592 views

karuthu 19அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் பலவகையான வீதி விபத்துக்களை பத்திரிகை வாயிலாகவும் வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துக்கொண்டும், வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். இருந்தாலும் வீதி விபத்து ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக என்ன இருக்கின்றது என்று என்றாவது ஒருநாள் நாம் சிந்தித்ததுண்டா.? என்றால் சிந்தித்தும் சிந்திக்காது இரண்டும் கெட்டான் நிலையிலேயே இருக்கிறோம் என்றே பதில் வருகிறது.

அந்தவகையில் வீதி விதிகளை மீறுவதும், அதனை துஷ்பிரயோகம் செய்வதுமே பிரதான காரணியாக இருக்கிறது. வீதி விதிகளை மதிக்காது அதனை மிதிப்பதன் காரணமாகவே அங்கு விபத்து உருவாகுகிறது. அது பாதசாரியாகவோ அல்லது சாரதியாகவோ இருக்கலாம். எல்லோருக்கும் தொடர்பு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது.

வீதி வழியாக செல்லும் பாதசாரிகளான எமக்கு விதியாக்கப்பட்டுள்ள விதிகளை மீறாது செயற்படுவோமானால் விபத்துக்களை ஓரளவு தவிர்க்க முடியும் அல்லவா.

நடு வீதி வழியாக நடந்து போதல், திடிரென வீதிக்கு குறுக்காக மாறுதல், கூட்டமாக நடு வீதியை மறைத்துக்கொண்டு போகுதல் என வரிசைப் படுத்தலாம். இவ்வாறன செயற்பாடுகள் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.

மாறாக பாதை வழியாக நடந்து செல்லும்போது ஓரமாக ஒதுங்கி செல்லல், வீதிக்கு குறுக்காக மாறும்போது மஞ்சள் கோட்டை உபயோகித்தல், கூட்டமாக அன்றி தனித்தனியாக செல்லுதல் எனும் போது விபத்தை தவிர்க்க முடியும்.

மேலும் ஒரு சாரதியாகவும் எமக்கு பொறுப்புக்கள் உண்டு. சாரதி அனுமதிப்பத்திரம் கிடைத்தவுடன் நான் தான் ராஜா, நான் தான் மந்திரி என்பது போல ஆகிவிடுகின்றோம். எனது வாகனம் – எனது இஷ்டம் என்றிருந்தால் எனது வாகனம் – எனக்கு கஷ்டம் என்ற நிலைக்கு கொண்டு போய் விடும்.

குடியிருப்புக்களில், நகர்ப்புறங்களில் வாகனத்தை செலுத்தும்போது வேகமாக செலுத்துதல், வீதி சமிஞ்ஞைகளை பேணாமை, பொலிஸாரின் பணிப்புரைகளை மீறுதல், அளவுக்கு மீறி வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல், தலைக்கவசம் அணியாது பயணித்தல், தவறான முறையில் முந்துதல், சிறுவயது பிள்ளைகள் வாகனங்களை செலுத்துதல் என இன்னோரன்ன விடயங்கள் சாரதியாய் வீதி விபத்தினை ஏற்படுத்த வழிவகுக்கின்றது.

அவசிய தேவைகள் என்பது தவிர்க்க முடியாததொன்றே எனினும் எல்லாப்போதும் அவசரம் ஆகாததொன்று அல்லவா. வேகத்தைக் குறைத்து செலுத்தும்போது பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க முடியும்.

வீதி சமிஞ்ஞைகள், வீதி போலிசார், தலைக்கவசம் அணிதல் எல்லாம் எதற்காக. எமது பாதுகாப்பிற்காகவே.

நாங்கள் வீதி விதிகளை மீறிவிட்டு பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என ஏறி இறங்குகின்றோம். தண்டப்பணம் செலுத்துகின்றோம். சிறைவாசம் அனுபவிக்கின்றோம். சில போது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது. கை, கால் முறிவு, பல நாள் தங்கியிருந்து வைத்தியம் என அலைச்சல், அகெளரவம், பண வீண்விரயம் அப்பப்பா ஏராளம் ஏராளம்.

சரியான முறையில் வீதி விதிகளை மதித்து கவனமாக, பக்குவமாக வாகனங்களை செலுத்தும் போது எமக்கு எந்தவித கஷ்டமோ நஷ்டமோ ஏற்படாமல் குறைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.

மேலும் மழைகாலங்களின் போதும் ஒரு சில நிகழ்வுகள் ஏற்படுகின்றன. வாகனங்களை செலுத்தும் போது பாதசாரிகளை கவனிப்பதில்லை. தாறுமாறாக செலுத்துகின்றோம். இதனால் நடப்பதற்கு சிரமம் மட்டுமில்லாது ஆடைகளும் அசுத்தப்படுகின்றது. இதன் போது பாதசாரிகளின் அநாவசிய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றோம்.

வீதி விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சாரதிகளின், பாதசாரிகளின் பொறுப்புக்கள் பற்றிய நிகழ்ச்சிகள் என எம்மத்தியில் நடாத்தப்பட்டும் நாம் தெளிவடையவில்லையாயின் கைசேதம் எமேக்கே.

பாதை என்பது தனி மனித பாவனை அல்ல. அது எல்லோருக்கும் உரித்தானது. எனவே எல்லோரினதும் உரிமைகளையும், பொறுப்புக்களையும் பேணி நடக்க வேண்டும். ஒரு நொடி பொறுத்தால் உயிரும் உடைமையும் மீதமாகுமே. சிந்தித்து செயற்படுவோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All