Puttalam Online
regional-news

முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸ் உடனான நேர்காணல்

  • 29 October 2015
  • 1,160 views

  ரூஸி சனூன்  புத்தளம்

baiz 7அரசியலில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு தனது குடும்பத்தாரோடும், சொந்த நலன்களை கவணித்துக்கொண்டும் சந்தோசமாக பொழுதை கழித்து வரும் புத்தளம் முன்னாள் நகர பிதாவும், முன்னாள் கால்நடைவளத்துறை பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸை அவரது சொந்த தோட்டத்தில்  மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர்.  தோற்றத்தில் உடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த போது மெல்ல அணுகி  கேள்விகளை தொடுத்த போது தனது களைப்புக்கு மத்தியிலும் அவர் வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
கேள்வி : புத்தளம் நகரில் சடுதியான, அதேவேளை பிரமிக்க தக்க வகையில் சேவைகளை செய்த தாங்கள் தற்போது அமைதியாக காணப்படுகிறீர்கள். தாங்கள் வழங்கிய சேவைகளில் அல்லது தாங்கள் ஏற்படுத்திய  அபிவிருத்திகளில் மன நிறைவை காண்கிறீர்களா?பதில் : புத்தளம் நகரம் 1989 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விகிதாசார தேர்தல் முறைமையின் காரணத்தால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. புத்தளம் நகருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அபிவிருத்திகளும் தடைபட்டன. புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் வறுமை நிலை தோன்றியது. இந்த விகிதாசார தேர்தல் முறைமையினால் நாம்  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நின்றபோது ஏனைய நகரங்களும், தொகுதிகளும் துரித வளர்ச்சி கண்டன. இந்த நிலையை கண்ணுற்று வேதனை அடைந்து எமது நகரத்தையும் ஓரளவுக்காவது அபிவிருத்தியின் பாதைக்கு  கொண்டு வருவோம் என்ற நிலையிலேயே அன்றைய அரசாங்கத்துடன் இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எனும் அரசாங்க கட்சியில் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டு ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் நகர சபை தலைவராக இருந்தும் கூட எனக்கு தரப்பட்ட அந்த  அமைப்பாளர் பதவியை முழுமையாக  பயன்படுத்தி அபிவிருத்திகளை ஆரம்பித்தோம்.kabஎமக்கு தரப்பட்ட புத்தளம் நகரின் அரை வாசி பகுதியை முழுமையான அபிவிருத்தி பிரதேசமாக மாற்றி அமைத்தோம். கல்பிட்டி பிரதேச சபைக்கான பிரிவு எனது பொறுப்பில் இல்லாமல் அது முன்னாள் அமைச்சர் விக்டர் என்டனியின் கையில் இருந்தது. எனவே எனது பொறுப்பில் இருந்த இலவங்குளம், கரைதீவு, வட்டக்கண்டல், மணல் தீவு, முள்ளிபுரம், புத்தளம் நகரம், பாலாவி, புளிச்சாக்குளம், உடப்பு போன்ற பிரதேசங்களில் மின்சாரம், பாதை அபிவிருத்திகள், கல்வி மேம்பாடு, குடி நீர் பிரச்சினைகள் போன்ற சகல அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளோம்.இத்தனை அபிவிருத்திகளையும் செய்து முடித்தமை ஒன்று அமைப்பாளர் பதவி என்ற அதிகாரம் மற்றையது ஜனாதிபதிக்குள்ள அதிகாரம். இவைகளை வைத்தே நாம் இத்தனை அபிவிருத்திகளையும் செய்து முடித்தோம். நீங்கள் கேட்டது போல அதில் உண்மையில் நான் மன நிறைவையும் அதே வேளை இறை திருப்தியையும் அடைகிறேன்.

கேள்வி : நீங்கள் ஆரம்பித்த அந்த அபிவிருத்தி திட்டங்கள்  இப்போதும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகிறதா?

பதில் :  இத்தைகய அபிவிருத்திகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான் ஜனாதிபதி மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட துவங்கின. அனால் அபிவிருத்திகளிலே மாற்றங்களோ அல்லது அதிகரிப்புகளோ ஏற்படவில்லை. அவை ஸ்தம்பிதமடைந்துள்ளன. நாம் கொண்டு வந்த கோடிக்கணக்கான ரூபா அபிவிருத்திகளில் உலக வங்கி  உதவி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி போன்ற சர்வதேச நிதி உதவிகளின் அபிவிருத்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புதிய அரசாங்கம் புதிய திட்டங்களை வகுக்கும் வரை இது இப்படியே தொடரும். ஆனால் தொடங்கி  வைத்த அபிவிருத்திகளில் பெரும்பாலும் 90 சத வீதமானவை தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இத்தகைய அபிவிருத்திகளை நிறுத்தக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளார்.

ஆனால் இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் புதுப்புது அரசியல் வாதிகள் புதிய புதிய பெயர் பலகைகளை வெளியிடுகிறார்கள். நாங்கள் செய்த அபிவிருத்திகளுக்கு அவர்களின் பெயர் பலகைகளை போடுகிறார்கள். நாங்கள் சொல்கிறோம் என்னவென்றால் நீங்கள் அபிவிருத்திகளை கொண்டு வந்த பிறகு உங்களது பெயர் பலகைகளை போடுங்கள். நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு உங்கள் பெயர்களை போடாதீர்கள். எல்லோருக்கும் தெரியும் அது நாங்கள் பெற்ற பிள்ளைகள்  என்று. எனவே நீங்கள் பிள்ளைகளை பெற்று நீங்கள் பெயர்களை போடுங்கள்.

கேள்வி : அண்மையில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக புத்தளம்  நகரில் இருந்து மூன்று முஸ்லிம் பிரநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருந்தும் தாங்கள் சுயேட்சை குழு மூலம் களம் இறங்கி வாக்குகளை பிரித்ததால் அந்த சந்தர்ப்பம் கை நழுவி போனதாக உங்கள் மீது அதிகமான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இது தொடர்பாக நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் ?

பதில் : விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட  காலத்திலிருந்து நடந்து முடிந்த அத்தனை தேர்தல்களிலும் நமக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது.  நான்  உட்பட தேர்தலில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்று போயுள்ளோம். இது நமக்கு புதிய விடயமும் அல்ல. இப்படி சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்று போவது இது முதல் முறையல்ல. என்னை பொறுத்த வரை நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி வென்று கூட இருக்கலாம். அதே போல 2010 தேர்தலில்  நான் வெற்றி பெற்றவன் என நான் நம்புகிறேன். இங்கே இருக்கின்ற துவேசமும், இனவாதமும், விருப்பு வாக்கு எண்ணிக்கைகளின் சதிகளும்தான் இதற்கு காரணம். baiz 6புத்தளம் பெரிய பள்ளியில் வைத்து இதனை நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். தேர்தல் ஆணையாளரை சந்தித்து வாக்குகள் எண்ணும் விடயத்தில் புது ஆட்களை நியமித்தல், புதிய அணுகு முறைகளை  ஏற்படுத்தி தருதல் போன்ற விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம். மர்ஹூம் ஹாபி அவர்கள் வென்று விட்டே தோற்று போனார். ஏதோ ஒரு மாயாஜாலம் அதற்குள் நடக்கிறது. புத்தளம் மாவட்டத்தில் 05 பேர் தெரிவு செய்யப்பட்டால் நாம் 05 வது நபராகவே தொங்கிக்கொண்டு வருவோம். இந்த மாயாஜால வித்தைகள் தொடர்ந்து நடப்பதால்தான் நாம் எமது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு விட்டு சுயேட்சை குழுவில் களம்  இறங்கினோம்.

மறு புறம் யோசித்து பார்த்தால் எமது வெற்றியினால் ஐ.தே.கட்சி தோல்வி அடைந்து விடும் என பயந்து அல்லது அவர்களின் பிரச்சாரத்தில் மயங்கி புத்தளம் முஸ்லிம்கள் ஏறக்குறைய 50 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை ஐ.தே.கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். முஸ்லிம் வாக்குகளில் எமக்கு 10 ஆயிரம்தான் கிடைத்துள்ளது. மொத்தமான 60 ஆயிரம் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை முஸ்லிம்கள் வழங்கியுள்ள போதிலும் 33 ஆயிரம் வாக்குகளையே நவவி அவர்களினால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. நாங்கள் அந்த வாக்குகளில் மேலும் 10 ஆயிரத்தை எடுத்திருந்தால் ஐ.தே.கட்சி புத்தளம் மாவட்டத்தில் வென்று இருக்கும். புத்தளத்தில் சுயேட்சை குழு நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றிருக்கும். விருப்பு வாக்கு எண்ணிக்கையில் எமக்கு அநீதி, அநியாயம் இழைக்கப்படுகிறது என்பதற்காவே சுயேட்சை குழு களம் இறங்கியதற்கு மற்றுமொரு காரணம்.

மாறாக சுயேட்சை குழு களம் இறங்கியதால்தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டுகள் போலியானவை. சுயேட்சை குழு என்ற ஒன்று வந்திராவிட்டால் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு இருப்பேன். இதை விட கூடுதலான முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கும். ஏனெனில் நாம் வாக்கு வங்கிகள் இல்லாத புதியவர்கள் இல்லையே. வாக்கு வங்கிகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு புத்தளம் மாவட்டத்தில் வாக்கு கேட்கும் அரசியல் தலைமகள் நாங்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை இங்கு ஆதிக்கம் செலுத்த விட்டிருக்காவிட்டால் நிச்சயம் அந்த 10 ஆயிரம் வாக்குகள் எமக்கு கிடைத்திருக்கும். நாம் ஒரு எம்.பீ. யை பெற்றிருப்போம். எனவே புத்தளம் மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு வரலாற்று தவறை செய்துள்ளார்கள் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

கேள்வி :  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தற்போது தாங்கள் அங்கத்துவம் வகிக்கின்றீர்கள். இந்நிலையில்  புத்தளம் மாவட்ட அமைப்பாளராக செயல்படுவதற்கு பல கட்சிகள் ஊடாக பல்வேறு அழுத்தங்கள்  தங்களுக்கு விடுக்கப்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையின் யதார்த்தத்தை சற்று விளக்குவீர்களா?

பதில் : உண்மைதான். நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவன்தான். அதில் அமைப்பாளராக செயல்பட்டதில் நான் நிறைய அனுபவங்களை கண்டுள்ளேன். கடந்த காலத்தில் நான் ஏற்கனவே சொன்னது போல கல்பிட்டி பிரதேசம் எனக்கு தரப்படாததால் அப்பிரதேசத்தை எனக்கு முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது.  இத்தகைய ஒரு நிலை இனியும் ஏற்படாமல் இருக்க எந்த கட்சியானாலும் பரவாயில்லை கல்பிட்டி பிரதேசத்தையும் சேர்த்து எனக்கு ஒப்படைத்தால் நான் அக்கட்சியின் அமைப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்வேன். என்னோடு பேச்சு வார்த்தை நடாத்தும் அத்தனை கட்சி தலைவர்களுடனும் நான் இந்த அதிகாரத்துடன் கேட்கும் தன்மையை  முன் வைத்துள்ளேன்.

கேள்வி : உள்ளூராட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. மீண்டும் நகர சபையை கைப்பற்றும் எண்ணம் ஏதும் வகுத்துள்ளீர்களா? பல புதிய முகங்கள் புத்தளம் நகர சபை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக அறிய முடிகிறது. அவர்களை வெற்றி கொள்ள எவ்வாறான காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில் :  ம்…. இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக குடும்பத்தாரோடு பிள்ளைகளோடு ஒன்றாக உணவருந்தி, நீங்கள் இவ்வளவு தூரம் பயணித்து இங்கு வருகை  தந்திருக்கின்ற தோட்டத்தில் சொந்த  அலுவல்களை கவனித்துக்கொண்டு சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறேன். இந்நிலையில் இப்படி ஒரு குண்டை தூக்கி போடுகிறீர்களே. பொறுத்திருந்து பார்போம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. புதிய திறமையான முகங்களை தட்டிக்கொடுத்து வரவேற்க தயாராக உள்ளோம். நகர சபை தலைமை பதவி என்பது இலேசான விடயமல்ல. வீட்டின் குசினி நிர்வாகத்தில் இருந்து சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும். இந்த அத்தனை பிரச்சினைகளையும் ஒட்டு மொத்தமாக தீர்த்து வைக்கக்கூடிய தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்பார்கள். அத்தகைய அமானிதங்களை, பொறுப்புகளை சுமக்கக்கூடிய தியாகமிக்க புதிய முகங்களை நாம் வரவேற்போம்.அப்படியானவர்கள் அரசியலுக்கு அப்பால் காலம், நேரம்,  நலன்களை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இதற்கு மாறாக சமூகத்தில் கொள்ளை அடித்தவர்கள், மக்களை ஏமாற்றி பணம் சேர்த்தவர்கள் , சொத்து சேர்த்தவர்கள் வருகிற தேர்தலில் ஊரை , நகரை கொள்ளை அடிக்க வந்தால் அத்தகையவர்களை நாம் சமூகத்துக்கு இனங்காட்டுவோம்.

கேள்வி :  தாங்கள் புத்தளம் நகர சபை தலைவராக சேவையாற்றிய காலத்தில் புத்தளம் நகரை ஒரு அழகிய நகரமாக மாற்றியமைக்க பாரிய பங்களிப்பை நல்கினீர்கள். ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவை திறடி போல நடைபாதை கடைகள்  உருவாகி அந்த அழகு கெடும் நிலை ஏற்பட்டுள்ளதே. இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : உள்ளூராட்சி மன்றத்தின் கடமை என்பது வெறுமனே பாதைகள் போடுவதும் குடிநீர் மற்றும்  மின்சாரத்தை வழங்குவதோடு நின்று விடுவதில்லை. இதற்கு மாற்றமாக நகரின் சுற்று சூழல், சுகாதாரம், விளயாட்டு மற்றும் கலாசார அபிவிருத்திகள் என அது  நீண்டு கொண்டே செல்கிறது. அபிவிருத்திகளை தங்கு தடை இன்றி சரியாக செய்யும்போது பல எதிர்ப்புகள் வரும். பலரை பகைக்க நேரிடும். நமக்கு வாக்களித்தவர்களை கூட பகைக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். உதாரணமாக நடைபாதை கடைகளை அகற்றும்போது, அல்லது சட்ட விரோத கடைகளை அகற்றும்போது சிலர் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதனால் பலர் நன்மையடைவார்கள். பலரின் நன்மைக்காக சிலர் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் மாற்று வழிகளை செய்து கொடுத்தும் உள்ளோம்.

வடமேல் மாகாணத்தில் உள்ள 50 நகரங்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட போட்டியில் நாம் 33 வது இடத்திலிருந்து அழகிய நகரம் என்ற அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றோம். மூன்று வருடங்களில் இதனை எம்மால் சாதிக்க முடிந்தது. தியாகத்தோடு உழைக்கக்கூடிய குடிமகனாக நமது ஊரின் ஒவ்வொரு  பிரஜையும் மாறுவோமானால் நமது நகரை என்றுமே நாம் ஒரு புதிய புத்தளமாக, அழகிய நகரமாக என்றுமே பாதுகாத்து கொள்ள முடியும்.

sanoonநேர்காணல் :              எம்.யூ.எம். சனூன்
                                             புத்தளம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All