Puttalam Online
regional-news

டாக்டர் ஐ.எம். இல்யாஸ் அவர்களுடனான நேர்காணல்

  • 11 November 2015
  • 1,022 views

ரூஸி சனூன்  புத்தளம் 


முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினருமான டாக்டர் ஐ.எம். இல்யாஸ் அவர்களுடனான நேர்காணல்.

dr. ilyasபுத்தளம் பெரிய பள்ளியில் அன்று சுட்டுக்கொல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரத்தம் தோய்ந்த ஜனாஸாக்களுக்கு முன்னிலையிலேயே இலங்கையின் முதலாவது முஸ்லிம் கட்சி ஒன்று உதயமாகியதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி : உங்களை பற்றி, உங்களது அரசியல் பிரவேசம் பற்றி முதலில் சற்று விபரியுங்களேன்.

பதில் : புத்தளத்தின் பிரபல இதுரீஸ் பரியாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். எமது குடும்பமானது ஏழு வைத்திய பரம்பரைகளை கொண்ட குடும்பம். ஜின் மற்றும் பாம்பு பரியாரி சேவையில் ஆரம்பித்து யூனானி மற்றும்  எனது ஆயுர்வேத வைத்தியத்தின் தொடராக எனது மகன் தற்போது மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றுகிறார்.

எனது அரசியல் பிரவேசமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகும். முன்னாள் கல்வி அமைச்சர் மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் புத்தளத்தில் திருமணம்  முடித்திருத்த போது அவரது வீட்டில் அவருக்கு துணையாக நான் இருந்தவன். அன்று அரசியல் செய்த பண்டாரநாயக போன்ற அரசியல் தலைவர்கள் அவரோடு அடிக்கடி வருவார்கள். முஸ்லிம்களுக்கான சேவைகளை நிறைய வழங்க வேண்டும் என்ற கருத்து அவரிடம் இருந்தது. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகராக இருந்தவர்.

அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் எல்லா துறைகளிலுமே தமிழ் மக்கள் அதாவது தமிழ் ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குறிப்பாக இலங்கை வானொலி, அரச பாடசாலைகள், பல்கலை கழகங்கள் போன்ற துறைகளில் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்று அவரிடம் ஒரு துணிச்சலான கருத்து இருந்தது. அதன்  நிமித்தமே அவர் அன்று டி.பீ. ஜாயா, அஸீஸ் ஆகியோரோடு புத்தளம் வருகை தந்து புத்தளத்தில் சின்ன முதலாளியில் மாமாவின் மூலம் புத்தளம் நோர்த் வீதியில் சாஹிரா கல்லூரி உதயமானது.???????????????????????????????

இவ்வாறு கல்வி துறையில் அவர் காட்டிய ஆர்வம் அவரது அரசியலோடு எம்மை இணைத்துக்கொள்ள ஆசை காட்டியது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று அவர் மும்முரமாக ஈடுபட்டார். அதில் நான் ஈர்க்கப்பட்டு எனது 11 வயதில் 1956 ம் ஆண்டு புத்தளத்தில் எச்.எஸ். இஸ்மாயில் சுயேட்சையாக களம் இறங்கிய போது நாங்கள் சமசமாஜ கட்சியில் அவருக்கு எதிராக அன்று என்.எம். பெரேரா, கொல்வின் ஆர் டீ சில்வா ஆகியோரினால் பேருவளையிலிருந்து அழைத்து வரப்பட்ட மன்சூர் என்பவரை  நிறுத்தி அரசியல் செய்ததன் மூலம் எனது அரசியல் பிரவேசம் ஆரம்பமானது.

கேள்வி : தங்களுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுக்குமிடையில்  உள்ள உறவுதனை விளக்குவீர்களா ?

Dr.Ilyasபதில் : நானும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் பல்கலை கழகத்திலிருந்து ஒன்றாக பழகியவர்கள். அவர் சட்டக்கல்லூரியிலும் நான் மருத்துவ கல்லூரியிலும் இருந்தவர்கள். பல்வேறுபட்ட போராட்டங்களில், ஊர்வலங்களில் நாம் பங்கேற்போம். பாகிஸ்தான் இந்தியா யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாம் ஊர்வலம் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.

இந்நிலையில் 1976.02.02 அன்று புத்தளத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது புத்தளம் பெரிய பள்ளியில் வைத்து 09 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 279 வீடுகள் புத்தளம் பொத்துவில்லுவில் எரிக்கப்பட்டன. 02 தொழிற்சாலைகள் எரிக்கப்பட்டன. இந்நிலையை அன்று பாராளுமன்றத்தில் யாரும் குரல் எழுப்பாத நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் தந்தை எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் இது தொடர்பாக பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் எழுப்பியது மட்டுமன்றி முஸ்லிகளுக்கு தனியான கட்சி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

புத்தளம் பெரிய பள்ளியில் ஜனாஸாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அன்றைய தினம் சட்ட கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவனாக இருந்த அஷ்ரப் அவர்கள் புத்தளம் வருகை தந்தார். அந்த ரத்தம் தோய்ந்த ஜனாசாக்களுக்கு முன்னிலையிலேயே நாம் முஸ்லிம் கட்சி ஒன்றை அமைக்க  அடித்தளம் இட்டோம். அங்கிருந்த உலமாக்கள், தாயிரதுள் சுப்பானல் முஸ்லிமீன் என்ற பெயரை புதிய கட்சிக்கு சூட்டினார்கள். எனினும் அஷ்ரப் அவர்கள் அதனை மறுத்து முஸ்லிம் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கட்சியை தோற்றுவித்தோம்.

காலப்போக்கில் அந்த கட்சியை மர்ஹூம் பதியுதீன் மஹ்மூது போன்றோர்களிடம் மசூரா செய்து அந்த கட்சியின் பெயரை அஷ்ரப் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்தார்கள். ஆக புத்தளம்  மண்ணில் ரத்தம் தோய்ந்த நிலத்திலிருந்து உருவானதே இலங்கையின்  முதலாவது முஸ்லிம் கட்சி என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

கேள்வி : புத்தளம் நகரில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றினை பெற்றுக்கொள்வது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் புத்தளம் மைந்தன் என்ற வகையில் தாங்கள் அன்றைய பயங்கரவாத சூழ்நிலையிலும் கூட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானீர்கள். அந்த சம்பவத்தை கொஞ்சம் மீட்டி பார்ப்போமா ?

பதில் :  1994 ம் ஆண்டு மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் புத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை  தனித்து போட்டியிட விடாமல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மாணித்தார். என்னையும் அதிலேயே போட்டியிட சொன்னார். நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கார்கள் அதில்தான் போட்டியிட வேண்டும் என நான் கூறியதற்கு அஷ்ரப் அவர்கள் நீங்கள் புத்தளத்தில் கேட்டு சரி வராது யாழ்ப்பாணம் சென்று கேளுங்கள் என கூறினார். ஆனால் அன்று யாழ்ப்பாணம் முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். இருந்தாலும் துணிச்சலோடு ஹெலியில் அங்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினோம். கட்டுப்பணம் கட்டிவிட்டு திரும்பி வந்த ஒரே நபராக நானாகவே இருக்க முடியும். அங்கு போனவர்கள் புலிகளால் பிடிக்கப்பட்டார்கள்.

அன்று மக்கள் வாக்குகளை பகிஷ்கரித்த போதிலும் புத்தளத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் எனக்கு வாகளித்தார்கள். வெறுமனே 1200 வாக்குகளால் நான் வெற்றி பெற்று பாராளுமனறம் தெரிவானேன்.  அது ஒரு வரலாற்று சாதனையாகவும் கிண்ணஸ் சாதனையாகவும் பதியப்பட்டுள்ளது.

கேள்வி : நமது நாட்டினை பொறுத்தளவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்று தெரிந்திருந்தும் கடந்த  ஜனாதிபதி தேர்தலில் தாங்கள்  வேட்பாளராக களம் இறங்கியதற்கான காரணத்தை குறிப்பிட முடியுமா ?

பதில்  :  நமது நாட்டை பொறுத்தளவில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது சட்டத்தில் இல்லை. சட்டத்தில் அப்படி என்ற ஒன்று இருந்திருந்தால் ஜனாதிபதி வேட்பாளராக கூட களம் இறங்க முடியாது. எனினும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாபதியாக வர முடியாது என்பது அவருக்கு வாக்குகள் விழாது என்பதால்தான். மற்ற ஒன்று இந்நாட்டில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பௌத்த மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. எனவே நாம் தெரிவானாலும் பௌத்தராக மாற மாட்டோமே.

நான் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்த முக்கிய காரணம் அதன் வாக்களிப்பு விபரங்களை மக்களுக்கு விளங்க வைப்பதற்காவே. ஜனாதிபதி தேர்தலானது மற்ற தேர்தல்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தேர்தலாக அமைந்துள்ளது. புள்ளடிகள் இல்லாமல் அது 1, 2, 3, எனும் விருப்பு வாக்குகளை அளிக்கக்கூடிய தேர்தல். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் 50 வீத வாக்குகள் பெறா விட்டால் அவர் 2 வது விருப்பு வாக்குகளிலிருந்து தெரிவாகலாம். மாலைதீவு, ஈரான் நாட்டு தேர்தல்களை இதற்கு உதாரணமாக காட்டலாம். அஹ்மத் நஜாத்  எண்ணிக்கையில் மூன்றாவதாக இருப்பார். இரண்டாவது எண்ணிக்கையில் 2 வது வருவார். மூன்றாவது எண்ணிக்கையில் முதலாவது வருவார். இந்த முறையே இலங்கையிலும் இருந்து வருகிறது. இத்தகைய விளக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவே நான் தேர்தலில் குதித்தேன்.

கேள்வி : டாக்டர் அவர்களே, உங்களிடம் இறுதியான ஒரு கேள்வி. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன. இவர்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக நீங்கள் என்ன கூற  வருகின்றீர்கள் ?

பதில் : வடக்கிலிருந்து 1989 ம் ஆண்டு முஸ்லிம்கள்  கடல் வழியாகவும், தரை வழியாகவும், காட்டு வழியாகவும் எமது நகரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களை வந்தடைந்தார்கள். அன்று நாம் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது எம்மாலான சகல உதவிகளையும் வழங்கினோம். அகதி முகாம்களை அமைத்து அரச காணிகளில் அவர்களை குடி அமர்த்தினோம்.

அனால் அவர்கள் இன்றும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் இருப்பது துரதிஷ்டமே. கடந்த ஆட்சியின் போது மறிச்சிக்கட்டி முள்ளிவாய்க்காலிலே 1000 ஏக்கர் காணி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த காணியானது தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் சொந்த காணியாகும். கரடிக்குளி, சிலாபத்துறை, மறிச்சிக்கட்டி ஆகிய மூன்று கிராமங்களை இந்த பிரதேசம் உள்வாங்கியுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கு 600 ஏக்கரும் முஸ்லிம் மக்களுக்கு 400 ஏக்கரும் உரித்துடையது. இது அவர்களின் பரம்பரை காணி. அதிலே பள்ளிவாசல்கள், கோவில்கள், குளங்கள் போன்றன அமைந்துள்ளன. அந்த அழகான பூமியை அரசு மீள அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். இதனை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னின்று செயல்படுத்த முன்வரவேண்டும். அப்போதுதான் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

அவர்கள் வெளியேற்றப்பட்டு 20 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதில்அரைவாசி பேர் புத்தளத்தில் பதிவுகளை மேற்கொண்டு  வாக்களிப்பு உரிமைகளையும் பெற்றுள்ளார்கள். நாங்கள் சொல்கிறோம், இங்கு பிறந்த பிள்ளைகள் இங்கு வாழட்டும். அங்கிருந்து வந்தவர்கள் அங்கு சென்று தமது பசுமை நிறைந்த பூமியில் கால் பதிக்கட்டும். என்றாலும் அவர்களின் காணிகள் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மாற்றீடாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் மாடி வீட்டு தொகுதிகளை அங்கு அமைத்து அவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

sanoon

நேர் காணல் :        எம்.யூ.எம். சனூன்
புத்தளம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All