Puttalam Online
editorial

கருத்து–20: சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு அனுதாபத்தை தெரிவித்திடுவோம்

  • 12 November 2015
  • 1,292 views

12208536_864366886995804_215889431694261871_n

கடந்த சென்ற சில நாட்கள் தொட்டு இன்று வரைக்கும் சகல இனமக்களினதும் வாய்கள் உச்சரிக்கும் பெயரே மாதுலுவாவே சோபித தேரர் எனும் பெளத்த பிக்கு.

இந்த பெயர் பெளத்தர்கள் மத்தியில் மாத்திரம் ஒலித்தால் வெறும் பேச்சாக ஓரிரு நாட்களில் காற்றோடு காற்றாக பறந்து போயிருக்கும். ஆனால் அப்படியல்லாமல் அனைவரினதும் மனங்களையும் கவர்ந்து இருக்கும் இவருக்கு பின்னால் நிச்சயம் ஏதோ காந்த விசை ஒன்று இருக்கத்தான் செய்திருக்கிறது.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர், கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி என்று பலரால் அறிவிக்கப்பட்டாலும் மதத்திற்கு அப்பால் ஒரு மனிதநேய பணியாளராக, சமூக ஆர்வலராக எல்லோரையும் அனுசரித்து சென்ற இவருக்கு இன பேதமின்றி அனுதாபங்கள் தெரிவிப்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்த தினங்களாக சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் மற்றும் இறுதி கிரிகைக்கான செலவுகளையும் அரசு பொறுப்பேற்று கொண்டிருந்தமை இவர் இந்நாட்டின் கெளரவ பிரஜை என்பதற்கு சான்றாகும்.

கடந்த கால ஆட்சியில் மக்கள் சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில், ஆட்சி மாற்றமே ஒரே வழி என திக்கற்று இருந்தவேளை, சிறுப்பான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த சமயம், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உச்சநிலையை அடைந்த நேரம் ஆட்சியாளர்கள் மெளனம் காத்திருந்த வேளை உரத்து ஒலித்த மாதுலுவாவே சோபித தேரரின் குரலே அனைத்திற்கும் தீர்வாக அமைந்தது.

“நல்லாட்சி” ஒன்று ஏற்படவேண்டும் அதுவே இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் நிம்மதியான வாழ்வை பெற்றுத்தரும் என வெறும் வாயால் சொல்லாமல் முன்னின்று வழிநடத்தி வெற்றி கண்டார். காவியுடை அணிந்து, துறவறத்தை மறந்து மனிதநேயத்திற்கு அப்பால் பெளத்த தீவிரவாதத்தை நிலைநாட்டியவர்கள் மத்தியில் சேற்றில் முளைத்த செந்தாமரையாய் மிளிர்ந்த இவருக்கு அனைவருடனும் சேர்ந்து நாமும் அனுதாபம் தெரிவிக்கும் போது ஒன்றும் குறைந்துவிட முடியாது இல்லையா.?

சிறுபான்மை மக்களின் நலன்கள் நசுக்கப்படும் வேளை மனிதநேயத்தை பேணி வாழ வேண்டும் எனும் பெளத்த கொள்கையை மீறாது தான் சார்ந்த சமூகத்தை திறம்பட வழிநடத்தி மறைந்த இவருக்கு சிறு நன்றிக்கடனாக சிறு அனுதாபத்தை தெரிவிக்கலாம். இங்கு பெளத்தத்தை பற்றி பேச நாம் வரவில்லை.

இங்கு சுயநலமும் இலேசாக இருக்கத்தான் செய்கிறது. பெரும்பான்மை மக்களுடன் வாழும் நாம் சகவாழ்வை பேணி, சகிப்புத்தன்மையுடனும், விட்டுக்கொடுப்புடனும் வாழ வேண்டியது எமது கடமையாகிறது. பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ஒரு தேரர் மரணித்து இருக்கும் நிலையில், அரசு அவரது இறுதி கிரியை தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், முழு இலங்கையும் இவர் மரணித்த செய்தி தொடக்கம் தமது கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் எமது சமூகம் மட்டும் பின்னிற்பது, இதைவிட்டும் தூரமாவது ஆரோக்கியமான செயற்பாடாகமாட்டாது. அதுமட்டுமில்லாது பெரும்பான்மை மக்களிடையே இருந்து அவப்பெயர் ஒன்று எம்மை நோக்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒருநாள் தானே..! அனுதாபத்தை தெரிவிக்கும் பதாகைகளையோ, கொடிகளையோ, புகைப்படங்களையோ காட்சிப்படுத்தி நாமும் நன்றியுள்ளவர்கள் தான், நாமும் மனிதநேயம் படைத்தவர்கள் தாம் என்று எம் பண்பாடுகளால் உயரசெல்ல இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம். பெரும்பான்மை மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயத்தை விதைப்போம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All