Puttalam Online
regional-news

சேமிக்க வேண்டும், அச்சேமிப்பை முதலீடு செய்ய நாம் முன்வரவேண்டும்

தொழிலாளியாக கத்தார் வந்து தன் விடாமுயற்சியால் முன்னேறிய சகோதரர் அக்ரம் ஹாலித் அவர்களை ஒரு இரவுநேரம் பின் ஒம்ரான் உணவகமொன்றில் வைத்து சந்தித்தோம்.

பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் எமக்காக நேரம் ஒதுக்கி  எம்மோடு பகிர்ந்து கொண்ட அவரது அனுபவங்களை வாசகர்கள் உங்களுக்காக தருகிறோம்.

நேர்காணல்: கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்
புகைப்பட உதவி: அஸ்லம்

Akram (3)முன்பு வெளிநாடு வந்தவர்களில் அதிகமானோர் Drivers ஆக இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா.?

ஏன் இல்லை, அந்த நேரம் சிறிய சம்பளத்திற்கே நிறைய பேர் வேலைக்கு வருவர். அதுவும் House Drivers ஆக வேலைக்கு வருபவர்களே அதிகமாக இருப்பர். இன்னும் சிலபேர் Company Drivers ஆக வேலைக்கு வருவர். வேறு துறைகள் பற்றிய அறிவு போதியதாக இல்லை.

நீண்டகாலமாக கத்தாரில் இருக்கின்றீர்கள்.. Free Visa வில் வருபவர்கள் பற்றி உங்களது அனுபவங்கள் எப்படி இருக்கிறது.?

Free Visa வினை பொறுத்தவரை இங்கு வருபவர்கள் மூன்று மாதங்கள் நின்று தாக்குப்பிடிக்க கூடிய அளவு பணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத போதே தகைமை இருந்தும் விசா நிறைவடைந்து விடும் எனும் பயத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சேருகின்றனர்.

தங்குமிடம், போக்குவரத்து, சாப்பாடு, தொலைபேசி என மாதம் குறைந்தபட்சம் 700 ரியால் கட்டாயம் தேவைப்படுகிறது. வீட்டு கஷ்டம், தேவை என்று இருக்கின்றபடியால் தான் வெளிநாடு வருகிறான். அப்படியான சூழலில் கடன்படும் தொகையை எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பது வழமைத்தானே.

வெளிநாட்டை பொறுத்தவரை பெரும்பாலும் அதிஷ்டம் தான் வேலை செய்யும். தகைமை இல்லாதவனுக்கு சிறந்த வேலை கிடைக்கும், தகைமை இருக்கின்றவனுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை அமையும். Free Visa வில் இங்கே வந்த அடுத்த நாளே வேலை கிடைத்தவர்களும் இருக்கின்றது. ஒன்பது பத்து மாதத்திற்கு பிறகு வேலை கிடைத்தவர்களும் இருக்கின்றது.

பொதுவாக வேலை தேடுவதற்கு என்று ஒரு காலம் இருக்கின்றது. ரமழான் காலப்பகுதிகளில் வேலை நேரமும் குறைவு, வேலைகளும் குறைவு. ரமழான் காலம் முடிந்து ஐந்தாறு நாள் விடுமுறை, அதற்கு பிறகு ஹஜ் பெருநாள் அப்படி இப்படி என்று குறிப்பிட்ட நாள் முடிந்துவிடும். இவ்வாறான காலப்பகுதியில் கத்தாரிற்கு வருவது தவிர்க்கப்பட வேண்டும். வருவதற்கு முன்னர் இங்கு இருக்கும் நபர்களிடம் விசாரித்து யோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

முன்னரை விட சாரதி அனுமதி பத்திரம் (Licence) எடுப்பதற்கு கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே..!

இப்போது கஷ்டம் என்று சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முன்னர் வாகன நெரிசல் என்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் இலகுவாக எல்லோருக்கும் லைசன்ஸ் பெறக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக இருப்பதால் அரசுக்கு இதை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அரசு இந்நாட்டு குடியுரிமையை பெற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கொடுத்தாக வேண்டும். அதனால் மாற்று வழியாக வெளிநாட்டு நபர்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

லைசன்ஸ் ஒன்று எடுக்க வேண்டும் என்றால் இப்போது குறைந்தது 4 மாதம் எடுக்கின்றது. அதனால் மூன்று மாத விசாவில் வருபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும், தேவையான பணத்தொகையை வைத்திருக்க வேண்டும். இன்னுமொன்றுத்தான் குறைந்த அளவு சரி ஆங்கில அறிவு இருக்க வேண்டும், கம்ப்யூட்டர் பற்றி ஓரளவு தெரிந்து இருக்க வேண்டும்.

இப்போது எல்லாமே கம்ப்யூட்டர் பண்ணப்பட்டுள்ளது. சிக்னல் டெஸ்ட் என்பதை விட English டெஸ்ட் என்றே சொல்ல வேண்டும். அதுவும் 20 வினாக்களில் 18 சரியாக இருக்க வேண்டும். எனவே தான் கடுமையான முயற்சி மூலமே இதனை சாத்தியப்படுத்தலாம்.

Akram (2)ஒப்பிட்ட அளவில் படிப்பு தகைமை இல்லாது வருபவர்கள் என்று.!

கத்தாரில் எது நடந்தாலும் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடும் அப்படி ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு சூழல் பற்றி அந்தந்த நண்பர்கள் மூலமாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக என எல்லோருக்கும் தெரியும். ஆதலால் படிப்பு தகைமை இல்லாது வருபவர்கள் முன்னரை காட்டிலும் வெகு குறைவு என்றே சொல்ல முடியும். 2010ம் ஆண்டுக்கு பிறகு எனக்கு தெரிந்து யாரும் தொழிலாளி என்று இங்கு வரவில்லை.

இங்கே வருபவர்களுக்கு சாதகமான வழிமுறைகள் எப்படி இருக்கின்றன.?

இப்போது 90% ஆனவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை கேட்க தயாராக உள்ளார்கள். முன்னர் அப்படி இருக்கவில்லை. குறைந்த நபர்கள், இங்கே ஒன்றும் அங்கே ஒன்றுமாக தூரத்தில் இருந்தார்கள். இப்போது ஒருவர் இங்கே வந்து வேலை ஒன்றை செய்வதற்கு முயற்சிக்கிறென்றால் அதற்கு நிறைய வழிகாட்டல் இருக்கின்றது.

ஆரம்பத்தில் நீங்களும் ஒரு தொழிலாளியாகத்தான் இங்கு வந்துள்ளீர்கள்.. அதுப்பற்றி.!

நான் இங்கே ஒரு மேசன் தொழிலாளியாக வந்தேன். மேசன் வேலை தொடக்கம் சின்ன சின்ன வேலைகள் அனைத்தையும் செய்து உழைக்க வந்த நோக்கத்தை நிறைவேற்றினேன். ஒரு வருடத்தில் சாரதி அனுமதி பத்திரத்தையும் பெற்றுக்கொண்டேன்.

வெளிநாட்டுக்கு வந்து 18 வருடமாகிறது. இப்போது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். உயர்வான இடமொன்றுக்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கத்தான் செய்யும். நான் முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இப்போது முன்னேற்றம் கண்டிருக்கிறேன். எப்போதும் தொழிலாளியாக இருக்க முடியாது இல்லையா.

ஒரு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தது பற்றி அறிந்து கொள்ளலாமா.?

எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நாங்கள் கொஞ்சம் வசதி குறைந்தவர்களாக தான் இருந்தோம். வசதிவாய்ப்புகளுடன் வாழும் உறவினர்களை, நண்பர்களை பார்த்து எனக்கு ஒரு ஆர்வம் இருந்தது. நாமும் நன்றாக உழைக்க வேண்டும். அவர்களை போல நாமும் நன்றாக வாழ வேண்டும் என்று. அதற்காக சகல ஹலாலான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினேன், அல்லும் பகல் என பாராது உழைத்தேன்.

எப்போதும் வறுமையில் இருப்பது கூடாது. கல்யாணம் முடிக்கும் போது மனைவிக்கான அனைத்து செலவுகளும் என்னுடையதாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். உழைக்கும் தைரியம் என்னிடம் இருந்தது. இலக்கை நோக்கி அதிகமாக ஓடினேன். இப்போது வளர்ந்து நிற்கின்றேன்.

அப்போது தொடர்பாடல் வசதி எப்படியிருந்தது.!

குடும்பங்களுடன் கதைப்பது என்பது வித்தியாசமாக இருக்கும். “டெலிபோன் பூத்” திலிருந்துதான் கதைப்போம். அதுவும் நான் இந்த திகதியில் கதைப்பதற்கு வருவேன் என தூது அனுப்பி வீட்டிலிருந்து யாரேனும் வந்து காத்திருப்பார்கள். அதற்கு பிறகுத்தான் கதைப்போம் அதுவும் சொற்ப நேரமே.

இல்லாவிட்டால் மாதத்திற்கு ஒருதடவை கடிதம் போடுவோம். ஒழுங்கான தொடர்பாடல் வசதி இல்லாத அந்த காலத்தில் குடும்பத்தை பிரிந்து வருவது என்பது ஒரு தியாகம் தான். இப்போது அப்படி சொல்ல முடியாது.

நாட்டில் இருந்து இங்கே வருகிறவர்களுக்கு ஒரு தைரியம் இருக்கிறது. இங்கே எமது சகோதரர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். சந்தித்து கொள்ள முடியும். அப்போது இதனையெல்லாம் நினைத்து பார்க்க முடியாது.

இங்குள்ள முதலீட்டு துறையை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமானால் நன்றாக இருக்குமே.!

உழைத்த பணத்தை செலவு போக சரியாக சேமித்தேன். எப்போதும் ஒருவருக்கு கீழ் வேலை செய்யாது நாங்கள் இன்னொருவருக்கு வேலை கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான முன்னேற்றம். இதனால் நாட்டில் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தேன். அதே நேரம் கத்தாரில் வாடகை கார் துறையில் கொஞ்சம் முதலீடு செய்தேன்.

வளைகுடா நாடுகளை பொருத்தமட்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மலையாளி தான் நிறைய இருக்கிறார்கள், எங்கே சென்றாலும் அவர்களை தான் பார்க்க வேண்டியிருக்கிறது என மற்ற விடயங்களை  கதைப்பது தான் எமது வழக்கம்.

அப்படியல்ல, அவர்கள் இங்கு வருவதே வியாபாரம் செய்வதற்குத்தான். அதுவும் அவர்கள் தனியாக செய்வது கிடையாது. எல்லோரையும் ஒன்று சேர்த்து அவர்களுடைய பங்குகளையும் உள்ளெடுத்து வியாபாரத்தை ஒப்பிடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இலங்கை நாணய மாற்றுடன் ஒப்பிடும் போது இந்திய நாணய மாற்று வீதம் குறைவான சூழலிலும் கூட.

அவர்களுக்கு செய்ய இயலும் போது எமக்கு என்ன செய்ய முடியாதா. உழைத்த பணத்தை வீணாக்காது அதனை சரியாக முதலீடு செய்ய வேண்டும். வாழ்க்கை தரத்தை கூட்ட வேண்டும்.

இங்கே நிறைய வியாபார வழிகள் பரந்து கிடக்கிறது. நாங்கள் தான் முன்வர வேண்டும். இதற்கு நம்பிக்கை முக்கியம். நஷ்டமடைந்து விடும் என்ற பயம் இருக்க கூடாது. இலாபம் நஷ்டம் மாறி மாறி தான் வரும். நஷ்டம் வந்து விட்டால் உழைத்த பணம் வீணாகிவிடும் எனவும் அதனால் இதனை சரி காப்பாற்றி கொள்வோம் என முன்வராது ஒதுங்கி விடுகிறோம். ஆனால் அந்த வெற்றிடத்திற்கு மலையாளி உட்புகுந்து விடுகிறான். அதைவிட்டு அவர்களை குறைக்கண்டு வேலையில்லை.

Akram (6)ஏஜென்ட் மூலம் வருபவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே இதைப்பற்றி ஏதாவது.?

அப்போது நாங்கள் மொத்தமாக 25 பேர் இங்கு வந்தோம். ஏஜென்ட் மூலம் அல்ல. தெரிந்தவர் மூலமே வந்தோம். யாரும் ஏமாற்றப்படவில்லை. மேசன், ஓடாவி, சாரதி எனக்கு தெரிந்து இந்த வேலைகளுக்கு தான் பொதுவாக எல்லோரும் வருவார்கள்.

ஏஜென்ட் ஏமாற்றுவது என்பது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் ஏமாறுவதற்கு மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். வெளிநாட்டு மோகத்தை வைத்து தான் மக்கள் ஏமாறுவது, ஏமாற்றப்படுவது.

இங்குள்ள சட்டதிட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து.!

போக்குவரத்து சட்டங்களோ அல்லது சிவில், குற்ற சட்டங்களோ இங்கு கடுமையாகத்தான் இருக்கும். காரணம் அவர்களது நாட்டை பாதுகாக்கின்ற உரிமை அவர்களுக்கு இருக்கிறது. சிறைவாசத்துடன் சேர்த்து தண்டப்பணமாக கூடிய தொகை விதிக்கப்படுகிறது.

குற்றம் செய்பவன் அதனை பார்த்து செய்யாமல் இருபான். அவனுக்கு அந்த தண்டப்பணத்தை திருப்பி செலுத்தாமல் தாய்நாட்டுக்கு திரும்பி செல்ல இயலாது.

இங்கு வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது, உங்கள் நண்பர்களுக்கு இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா.?

வெளிநாட்டுக்கு வரும்போது எமது வயதை ஒத்தவர்கள் எல்லாம் ஊரில் குடும்பங்களுடன், நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் போது நாம் இங்கு வருவது கொஞ்சம் கவலையாக இருந்தாலும் எமது இலக்கை நோக்கி செல்லப்போகிறோம் எனும் போது மனது இலகுவாகி விடுகிறது.

ஊரினை விட்டு தூர இடத்திற்கு வந்திருக்கின்ற நாம் ஊரினையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். நாம் சமூகத்திற்கு செலவழிக்கின்ற தொகை குறைவு, இன்னும் மக்கள் அதிகமாக கொடுக்க வேண்டும். கத்தாரில் 20 ரியால் செலவழிக்க இயலாத, கஷ்டப்பட்ட சமூகமாக எம்மை அல்லாஹ் வைக்கவில்லை. அல்லாஹ்காக கொடுக்கிறோம் என்று ஒரு நிய்யத்துடன் கொடுத்தாலே போதும் அவ்வளவுதான்.

 WAK


2 thoughts on “சேமிக்க வேண்டும், அச்சேமிப்பை முதலீடு செய்ய நாம் முன்வரவேண்டும்

  1. Mohamed Sarfan says:

    உண்மையிலையே கட்டாரில் வாழ்பவர்களுக்கும் கட்டார் வர இருப்பவர்களுக்கும் மிகவும் பிரயோசனமான தகவல் …….. நல்ல முயற்சி உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்…

  2. Abdul Rahman Hanifa says:

    சகோதரர் அக்ரம் அவர்கள் சிறந்த மனித நேயமும் சமூக அக்கறையும் உடையவர். சமூக விடயங்கள் என வரும்போது தானாக முன்வந்து உதவி செய்வதை நான் கத்தாரில் இருக்கும் போது பார்த்திருக்கிறேன். எப்போது எங்கே சந்தித்தாலும் இன்முகத்தோடு கதைப்பார். மற்றையவர்கள் தொழில் செய்ய பல உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவர்.
    அள்ளாஹ் இவருக்கு மென்மேலும் உதவி செய்வானாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All