Puttalam Online
interviews

மஹிந்தவை தோற்கடிக்க எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை – அதுரலிய ரத்ன தேரர்

  • 18 February 2016
  • 1,528 views

பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் லங்கா தீப பத்திரிகைக்கு சிங்களத்தில் வழங்கிய நேர்காணலை தமிழில் தொகுத்துத் தருகின்றோம்.

Athuraliya

சிங்களத்தில்: பிரியந்த கொடிப்பிலி (லங்காதீப)
தமிழில்: எம்.எச்.எம். நியாஸ்

கேள்வி: உங்களது ஹெல உறுமயவின் தற்போதைய நிலை என்ன?

பதில்: ஊடகங்கள் எங்களைப் பற்றி வித்தியாசமான கருத்துக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. ஆனால், அவர்கள் கூறுவது போன்று கட்சிக்கும் எனக்கும் எவ்வித விரிசல்களும் இல்லை. கட்சி என்ற வகையில் நான் ஹெல உறுமயவுக்கு பாரியளவில் சேவை செய்துள்ளேன். தற்போது கூட ஆலோசகர் என்ற அடிப்படையில் என்னால் இயன்றவகையில் அதற்கு சேவை செய்து வருகின்றேன். கட்சிக்கு வெளியிலும் நான் அதிகமாக பொது நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

கேள்வி: உங்களுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா?

பதில்: எந்த கட்சிக்குள்ளும் அதிலுள்ள நபர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட முடியும். எனினும், ஜாதிக ஹெல உறுமயவுடன் எனக்கு எவ்வித மோதலும் இல்லை. எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஹெல உறுமயவுடன் முழுநேர தொடர்புகள் இல்லை. நான் பொது நலப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றேன்.

கேள்வி: தற்போது நீங்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகவா இருக்கிறீர்கள்?

பதில்: நான் கடந்த மூன்று வருடங்களாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டாலும், ஹெல உறுமயவின் உறுப்பினராவேன். ஆனால், நான் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில்தான் போட்டியிட்டேன். இருந்தாலும், அவ்விரண்டு கட்சிகளையும் கைவிட்டு விட்டு நான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றேன். அவ்வேளையிலும் நான் ஹெல உறுமயவுடன் இணக்கத்துடன்தான் செயற்பட்டேன். எதிர்காலத்திலும் நான் அவ்வாறுதான் செயற்படுவேன்.

கேள்வி: ஷாருக்கான் இலங்கைக்கு வந்தபோது பாதையிலிரங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நீங்கள், இன்று அதை விடவும் மோசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது அவற்றை எதிர்க்கவில்லை. மாறாக ஜனாதிபதிதான் எதிர்த்துப் பேசினார்.?

பதில்: ஜனாதிபதி என்ற வகையில், எமது ஜனாதிபதி அதை எதிர்த்து தனது பொறுப்பை நிறைவேற்றினார். அந்த கலை நிகழ்ச்சி பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அறிந்திருந்தாலும் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அதை எதிர்த்துப் பேசியதால் நான் அது பற்றிப் பேசவில்லை.

கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர்களது வரவுக்கான கொடுப்பனவு பெரும் தொகையாக அதிகரிக்கப்படவுள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: அது பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டால் தானும் அதை பெற்றுக் கொள்வேன். அப்பணத்தைப் பெற்று பொதுமக்களுக்காக செலவு செய்ய முடியும். எனக்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் நான் பொதுமக்களுக்காகவே செலவு செய்கின்றேன். எனவே அது ஒரு பிரச்சினையாகாது. அது போன்ற விடயங்கள் அற்புதமான விடயங்களல்ல. அது ஒரு பாரதூரமான பிரச்சினையுமல்ல. இது பற்றி ஜனாதிபதியுடன் பேசி அதை தீர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி: நீங்கள் எமது முப்படையினருடன் மிக நெருக்கமாக செயற்பட்டீர்கள். யுத்தத்தை வெற்றி கொள்ளவும் எமது முப்படைகளுக்கு தைரியமூட்டும் முயற்சிகளிலும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டீர்கள். ஆனால், தற்போதைய அரசாங்கம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை வேட்டையாடி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். அது பிரகீத் எக்னலி கொட எனும் ஊடகவியலாளர் பற்றியது. அது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசப்பட்ட விடயம். அது விடயமாக சந்தேகத்தின் பேரில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அது பற்றிய விசாரணையை நடத்தாமல் அவர்களை சிறையில் வைத்திருப்பதற்கு எந்த ஓர் அரசாங்கத்துக்கும் உரிமையில்லை. தாமதிக்காது அவர்களது விடயத்தில் விசாரணை நடத்தி அதை முடிவுக்குக் கொண்டு வரல் வேண்டும். சந்தேகத்தின் பேரில் நீண்ட காலம் அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் இல்லையேல் நிரபராதிகளாக வெளியே வருவார்கள். அந்த விசாரணையை இயன்றவரையில் விரைவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கேள்வி: அன்று மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தே தீருவோம் என்று முத்தையா மைதானத்தில் நீங்கள் சபதம் செய்தீர்கள். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது பற்றி நீங்கள் தற்போது மகிழ்ச்சியடைகிறீர்களா?

பதில்: நாம் அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தத்தைக் கொடுத்து யாப்புத் திருத்தம் குறித்து பலத்த பிரயத்தனத்தை மேற்கொண்டோம். காரணம், அவர் சென்ற பாதை பற்றி எமக்கு எந்தவகையிலும் திருப்தியடைய முடியவில்லை. சஜின்வாஸ் குணவர்தன போன்றரும் மஹிந்த ராஜபக்ஷவை சூழ இருந்தவர்கள் பலரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவற்றுக்கு இடமளித்து அவற்றை அனுமதித்தார். தாம் மஹிந்தவை எதிர்த்தது அதற்காகத்தான். மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எனக்கு அலாதியான ஆசைகள் இல்லை. எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அதை விட மாற்று வழிகள் எமக்கு தென்படவில்லை. அவர் தோற்கடிக்கப்படுவேன் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மஹிந்தவைத் தோற்கடிக்கும் எமது நம்பிக்கையை மக்கள் முன்பாக உறுதிப்படுத்த வேண்டியேற்பட்டது. எப்படியும் மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கிருந்த படியால்தான் நான் தொடர்ந்தும் அவர்களுக்கு கூறி வந்தேன். மஹிந்தவை தோற்கடித்தல் என்பது தற்போது பழங்கதையாக மாறிவிட்டது. தற்போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொள்வதற்கு அயராது முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடின் மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதியாக இருந்தால் இதை விட நன்றாக இருக்குமே என்று பொதுமக்கள் நினைக்க இடமுண்டு. அவ்வாறான கருத்துகளுக்கு இடமளிக்காத அளவில் எமது செயல்களில் நாம் துரிதமாக ஈடுபட வேண்டும்.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமன்றி, அவரைச் சூழ இருந்தவர்களுக்கு எதிராகவும் நீங்கள் குரல் எழுப்பினீர்கள். ஆனால், அவர்களில் அதிகமானோர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வீற்றிருக்கிறார்கள். இந்த நிலையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பதில்: கடந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டது என்பதற்காக அதிலிருந்த அனைவரும் தேர்தலில் தோல்வியடைய மாட்டார்களே. அவ்வாறு மிக மோசமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட பெரும் தொகையான விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார்கள். இன்றைக்கு ஒரு சிலர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தது வேறு விடயம். மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கியதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து ஒதுக்கப்பட வேண்டும். எந்த அமைச்சுப் பதவியில் இருந்தாலும் அவர்களை அரசியலிருந்து ஒதுக்க பின்வாங்கக் கூடாது.

கேள்வி: அவ்வாறான எவரது விசாரணையும் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லையே?

பதில்: நான் இதுபோன்ற விடயங்களில் பேசி எனது காலத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. கள்வனைப் பிடியுங்கள் என்று கூறிக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் எமக்கு தொடர்ந்து செல்ல முடியாது. அதை செய்வதற்காகத்தான் நாம் அரசாங்கத்தை மாற்றினோம். தற்போது இந்த பணிக்காக சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலையில் எமது நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளது. விசாரணைகளை துரிதப்படுத்துவது அந்த நிறுவனங்களின் பொறுப்பாகும்.

ஒரு தனிமனிதனது ஆட்சியை அகற்றிவிட்டு நாங்கள் நாட்டை சுதந்திரமான ஓரிடத்துக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு சிறிய விடயத்திலும் சமூகம் இப்போது உணர்ச்சி வசப்படுவதை நாம் தினமும் ஊடகங்களில் பார்த்து வருவதால் அது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் அவ்வாறான நிலை காணப்படவில்லை. மக்கள் தற்போது சுதந்திரமாக எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அந்த வெளிநாட்டுப் பாடகருக்கு எதிராக ஜனாதிபதி பேசியதற்காக சமூகத்திலிருந்து எவ்வளவு எதிரான கருத்துக்கள் வெளியானது என்று பாருங்கள். முன்பெல்லாம் அவ்வாறு பேசக் கூடியவாறு இருந்ததா? ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சம்பவமும் அவ்வாறுதான். கடந்த அரசாங்கத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண விடயமாக இருந்திருக்கும். இப்போது அவ்வாறு முடியாது. சிறிய ஒரு விடயத்துக்கும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும்தான். நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கேள்வி: நல்லாட்சி ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதல்லவா? அது பற்றி உங்களுக்கு சந்தோஷப்பட முடியுமா?

பதில்: நான் அதை அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. எந்த ஒரு விடயத்தையும் பற்றி நூறு வீதம் திருப்தியடைய முடியாது. அதுதான் யதார்த்தம். கடந்த ஒரு வருட காலம் பற்றி திருப்தியோ, அதிகமான அதிருப்தியோ அடைய எம்மால் முடியாது. உண்மையிலே இந்த நல்லாட்சி 2015 ஆகஸ்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவ்வாறு பார்க்கும்போது புதிய அரசாங்கத்தின் வயது சில மாதங்கள் மட்டுமே. புதிய அரசாங்கம் தமது பணிகளை அண்மையில்தான் ஆரம்பித்துள்ளது. இதன் பிறகுதான் புதிய அரசாங்கத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படப் போகின்றன. எனவே, அடுத்து வரும் நான்கு வருட கால பணிகளைத்தான் நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தை சரியான முறையில் இயக்கும் மாபெரும் பொறுப்பு எமக்கிருக்கிறது. எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அதற்காக நாம் செய்யத் தயார். தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் ஏனையோர் கருத்துக்களுக்கு செவிமடுத்து அவற்றுக்கு இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம். என்றாலும், எதிர்காலம் பற்றி எமக்கு எதிர்வுகூற முடியாது. தற்போது புதிய அரசாங்கத்தில் குறைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: புதிய அரசாங்கத்தின் பதவியில் அமர்த்த முயற்சித்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் இந்த அரசாங்கத்துக்குள் உங்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா?

பதில்: ஆம், நான் கூறிய பல விடயங்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் மதிப்பளித்திருக்கிறார்கள். அவற்றை செயற்படுத்தியும் வருகிறார்கள்.

கேள்வி: பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த தேரர்களில் நீங்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறீர்கள் இல்லையா?

பதில்: வாழ்க்கையில் நான் எப்போதும் அரசியல்வாதியாகவே செயற்பட்டு வந்துள்ளேன். நாட்டில் புரட்சியொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் ஞானத்தில்தான் நான் தொடர்ந்து செயற்பட்டேன். நாட்டிலுள்ள மற்றைய தேரர்கள் எடுத்த முடிவுகளுக்கு மாற்றமாகவே நான் செயற்பட்டு வந்துள்ளேன். இவ்வாறான எனது பணிகளை செய்வதற்கு நான் பாராளுமன்றத்துக்குள் இருக்க வேண்டுமா அல்லது வெளியில் இருந்து கொண்டு அவற்றை செய்ய முடியுமா என்பதை பொதுமக்கள் அறிவார்கள். அரசியலில் நான் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவர்.

கேள்வி: கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தவறான வழியில் செல்லுமானால் இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவதில் முன்னின்று உழைப்பீர்களா?

பதில்: ஆம், அது பற்றி இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. நான் இந்த அரசாங்கத்துடன் இணைந்ததில்லை. நான் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுப்பவன். மாறாக, அரசாங்கத்தின் கைம்பொம்மையாக இயங்க நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கை வரலாற்றில் அதை நிரூபித்துள்ளேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All