Puttalam Online
uncategorized

செய்னுல் ஆப்தீன் – ஆரம்பகால ஸாஹிராவின் செயல் வீர செயலாளர்

  • 20 February 2016
  • 1,883 views

புத்தளத்தின் தவப் புதல்வர்களுள் ஒருவர் மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் செய்னுல் ஆப்தீன் ஆவார். சமூக சேவையாளராக, ஆரம்பகால புத்தளத்தின் அரச உத்தியோகத்தராக, புத்தளத்தின் கல்வி சமூக முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பெரியதாகும்.

Sellamma

Sellamma

புத்தளத்தின் சாதாரண குடும்பமொன்றில் 17.1.1923 ல் பிறந்த அவர்  முஹம்மது அபூபக்கர்,  செல்லம்மா தம்பதியினரின் ஒரே பிள்ளையாவார். அன்றைய புத்தளத்தின் பொதுவான பண்புக் கேற்ப வறுமையில் வளர்ந்தார். சாதாரண குடும்ப பிள்ளைகள் செல்லும் அரச ஆண்கள் பாடசாலையில் கற்றார். (கால ஸ்கூல்). அங்கு தமிழ் மொழியிலேயே கல்வி போதிக்கப்படும். எட்டாம் தரம்  ( JSC ) சித்தியடைந்தார். அன்றைய கல்வித்தரத்தில் அது ஒரு மைல் கல்லாகும்.

ஆங்கிலக் கல்வியை சுயமாகக் கற்று அதில் தேர்ச்சியும் பாண்டித்தியமும் அடைந்தார். அத்துடன் அவரின் அழகான கையெழுத்து அனைவரையும் கவர்ந்தது. இத்தகைமைகள் அவருக்கு அரச தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது. சாதாரண  இலிகிதராக 1952ல்  புத்தளம் கச்சேரியில் ஆரம்பத்தில் சேர்ந்தார்.

Mr. Sainul Abdeenகச்சேரியில் அவர் பணியாற்றும் போது அவரின் நடவடிக்கைகளும் நம்பிக்கைக்குரிய செயற்பாடுகளும் வேலைத்திறனும் மேலதிகாரிகளைக் கவர்ந்தது. பாராளுமன்ற அமைச்சராக இருந்த கொல்வின் ஆர் டி சில்வாவின் சகோதரர் W A D சில்வா அப்போது புத்தளத்தின் அரச அதிபராக இருந்தார். செய்னுல் ஆப்தீன் அவர்களுடைய செயற்றிறன், அரச அதிபருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றும் சந்தர்பத்தினை அவருக்கு வழங்கியது.

இலங்கையின் முதல் பாராளுமன்றப் பிரதிநிதியும், முதல் முஸ்லிம் சபாநாயகருமான HS இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து தனது ஊரின் சமூக கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யும் பணியில் தன்னை அர்பணித்து ஈடுபட்டார். சிலாபம் பாராளுமன்றப் பிரதிநிதி  G C S கொரயா அவர்கள் ஒரு பண்ணையாக ஆரம்பித்து நட்டம் ஏற்பட்டு 1947ல் அரசாங்கம் மூடிவிட உத்தேசித்த கொட்டுக்கச்சி குடியேற்ற திட்டத்திக்கு மர்ஹூம்  HS இஸ்மாயிலுடன் இணைந்து உழைத்தவர் மர்ஹூம் ஆப்தீன் அவர்களாவார்.

20160220_134007-1புத்தளத்தில்  ஆங்கிலக் கல்லூரியை தொடங்கும் முயற்சியாக கொழும்பு ஸாஹிராவின் கிளை ஒன்றை இங்கு ஆரம்பிப்பதற்காக HS இஸ்மாயிலின் தலைமையில் புத்தளம் மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம் (The Puttalam District Muslim Educational Society) உருவாக்கப்பட்டு இயங்கியது. அதன் செயலாளராக செயற்பட்டவர் செய்னுல் ஆப்தீன் அவர்களாவார். ஆரம்பம் முதலே ஸாஹிராவின் வளர்ச்சியில் பங்காற்றி வந்த இச் சங்கம் 1948ல் வரையறுக்கப்பட்ட சங்கமாகப் பதிவு செய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் இச் சங்கமே ஸாஹிராவை நிருவகித்து வந்தது. இஸ்மாயில் அவர்கள் முகாமையாளராக இருந்ததுடன் ஆப்தீன் அவர்கள் செயலாளராகப் பணியாற்றினார்.

இலங்கையில் ஆரம்பகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களுக்கு புத்தளம் ஒரு முன்னோடி முதன்மை நகரங்களுள் ஒன்றாக இருந்ததை நம்மில் பலர் அறிந்ததில்லை. கூட்டுறவு இயக்கம், நகர குடிநீர் திட்டம் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கையின் கூட்டுறவு இயக்கம் பற்றி ஆழமாக சிந்தித்த முஸ்லிம் தலைவர் H S இஸ்மாயில் ஆவார். 1953ல் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பையும் விட உயர்ந்த தரத்திலான கூட்டுறவு நிறுவனங்களை H S இஸ்மாயில் அவர்கள் தொடங்கியபோது அதன் செயலாளராக செய்னுல் ஆப்தீன் அவர்கள் பணியாற்றியுள்ளார். ஆப்தீன் அவர்களின் அங்கத்துவ இலக்கம் 3 ஆகும்.

அக் காலப் பகுதியில் புத்தளத்தில் பின்வரும் கூட்டுறவு அமைப்புக்கள் இயங்கின.

1. வரையறுக்கப்பட்ட புத்தளம் மாவட்ட ஐக்கிய கூட்டுறவு பண்டகசாலை
2. வரையறுக்கப்பட்ட நகர கூட்டுறவுப் பண்டகசாலை சங்கம்
3. வரையறுக்கப்பட்ட புத்தளம் உப்பு உற்பத்தியாளர் சங்கம்
4. புத்தளம் பொது சேவைகள் சங்கம்
5. புத்தளம் (CSP & S Union Limited )
6. புத்தளம் மீன்பிடிச் சங்கம்

Mr. Sainul Abdeen - Youngபுத்தளத்துக்கே உரிய மண் வாசனை சமூகப் பழக்கவழக்கங்கள் அவரை சிந்திக்கத் தூண்டியதன் காரணமாகவும் வேறு காரனங்களுக்காகவும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கச்சேரிகளில் பணியாற்றியுள்ளார். மாத்தளை (1955 – 57), குருநாகல் (1957-60), கண்டி (1960-68) பேராதனை (1968) போன்றன அவர் சேவையாற்றிய ஏனைய பிரதேசங்களாகும். கச்சேரி தவிர விவசாய ஆராய்ச்சி நிலையம் , விசைத்தறி நிலையம் போன்றனவற்றிலும் சிலகாலம் சேவையாற்றியுள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றிய அவர் 1968 முதல் 17. 02. 1977ல் ஓய்வு பெரும் வரை புத்தளத்தில் மீண்டும் பணிபுரிந்தார், புத்தளம் கச்சேரியில் அலுவலக உதவியாளராக இருந்துள்ளார். அக் காலத்தில் இப் பதவி உதவி அரசாங்க அதிபருக்கு அடுத்ததாக கணிக்கப்பட்டது. அப்போது அரச அதிபர் குருனாகளிலும் உதவி அரச அதிபர் புத்தளத்திலும் இருந்தனர். தற்போது புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு (கச்சேரி) அண்மையில் நகரசபை கட்டிடத்துக்கு அருகில் சிறுவர் பூங்காக்கு எதிரே அமைந்துள்ள பெரிய இரு அரச விடுதிகள் இத்தகைய பதவி வகிப்போருக்காகக் கட்டப்பட்டதாகும்.

1. O A (Office Asst )         2. Extra O A

Mr.&Mrs. Abdeenபுத்தளத்துப் புதல்வர், மண்ணின் மைந்தர் செய்னுல் ஆப்தீன் அவர்களின் சேவையை கெளரவித்தது பிரித்தானிய மகாராணியின் 1954 இலங்கை விஜயத்தின் போது அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்னுல் ஆப்தீன் அவர்கள் புத்தளத்தின் பிரபல லெப்பை குடும்பத்தில் சேகு நெய்னா லெப்பை உம்மு ஸனீரா (பசீரா உம்மா) என்பாரை திருமணம் செய்தார். இத் தம்பதியினருக்கு ஒரு புதல்வியும் ஆறு புதல்வர்களும் உள்ளனர். அன்னார் 8.11.1993ல் இறையடி சேர்ந்தார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் சுவனபதியை வழங்கப் பிரார்த்திப்போம்.

Sincere thanks to Mr. Mursheed (Son)

(- Z.A. Zanhir)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All