Puttalam Online
editorial

கருத்து–21: ரமழானுடைய காலத்தினை பிரயோசனமாக கழித்திடுவோம்.!

  • 6 June 2016
  • 1,254 views

Karuthu 21புனித ரமழானுடைய மாதம் எம்மை வந்து அடைய இன்னும் ஒருநாளே இருக்கின்ற நிலையில் நாம் அனைவரும் அதற்கு ஆயத்தமாக, அதனை மகிழ்ச்சியாக வரவேற்க தயாராக வேண்டும்.

ஒரு மாதம் எம்மோடு தங்கியிருக்க போகும் இவ் ரமழானை நாம் கண்ணியமாக கவனித்து, அதனை நிறைவாக வழியனுப்ப வேண்டும். மாறாக ஏனைய மாதங்களை போன்று ஏனோ தானோ என்றும், இதன் மகத்துவத்தை மறந்தும் இருந்தோமேயானால் கைசேதமே மிச்சமாக இருக்கும்.

ரமழானை எம்மிலிருந்து ஆரம்பித்து வீட்டினூடாக வீதிக்கு கொண்டுவர நாமனைவரும் முயற்சிக்க வேண்டும். சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரும் இந்த முப்பது நாளையும் பயனுள்ளதாக்க வேண்டும்.

அந்தவகையில் சிறுவர்கள், வாலிபர்கள் ரமழான் மாதம் வந்துவிட்டால் இறைவனுக்காக நோன்பு பிடித்து நன்மைகளை சம்பாதித்து கொள்கின்றார்களோ இல்லையோ அடுத்தவர் வாயால் திட்டுக்களையும், பதுவாக்களையும் சம்பாதித்து கொள்கின்றார்கள்.

பகலில் இறைவனுக்காக நோன்பு இருந்து, இரவில் இறைவனுக்காக நின்று வணங்கி அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாது, எமது நாவுகளை பேணி ஓர் கட்டுகோப்பாக இருக்கவேண்டிய நாம் இவற்றுக்கு மாற்றமாக செயல்பட்டு வெறுமனே உடம்பால் நோன்பு நோற்று உடலை வருத்துகின்றோம்.

ரமழான் வந்துவிட்டால் வாலிபர்கள் இரவில் கிளித்தட்டும், கரப்பந்தாட்டமும் என தொடங்கி செஸ், கரம் என இரவை ரணகளப்படுத்துகின்றனர். இவர்களின் இச்செயற்பாடுகளினால் எம்மவர்கள் மட்டுமல்ல மாற்றுமத சகோதரர்களும் பாதிப்படைகின்றனர். “உங்களது நோன்பு வந்தால் எங்களின் நிம்மதி பறிபோகும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம்.” என அவர்கள் சொல்லும் அளவு எமது செயற்பாடுகள் அமைகின்றது.

இரவில் வெடிகளை வீதி வீதியாக போட்டவண்ணம் ஊர் சுற்றும் கூட்டம் ஒருபுறமும், வீதிகளை மறைத்தப்படியும், வீதியில் போவோர் வருவோருக்கு இடைஞ்சலாக வீதியில் கரம்,செஸ், கிளித்தட்டு விளையாடும் கூட்டம் மறுபுறமும், இரவு தொடங்கி சஹர் நேரம் வரை மின்னொளியில் சத்தமிட்டவண்ணம் கரப்பந்தாட்டம் விளையாடும் கூட்டம் இன்னொருபுறமும், பகைமை உணர்வோடு குழு சண்டையிடும் கூட்டம் மறுபுறமும் நோன்பின் கண்ணியத்தை புதைத்து கொண்டிருக்கிறது.

volyஇரவில் நீண்ட நேரம் நின்று வணங்க வேண்டிய இளமை, குர்ஆன் இறக்கப்பட்ட இம்மாதத்தில் அதிகமாக குர்ஆனோடு நெருக்கமாக இருக்கவேண்டிய வாலிபம், பர்ளு, சுன்னத் என தொழுகைகளை நேரத்திற்கு நிறைவேற்ற வேண்டிய விடலைப்பருவம் மேற்கண்டவாறு நோன்பின் கண்ணியத்தை சீர்குலைக்காது, மாற்று மதத்தவர்களுக்கு பண்பாடுகளை சொல்லி தராவிட்டாலும் அமைதியாக இருந்து ரமழானை வழியனுப்புவது எமது கடமையல்லவா.

அதேநேரம் ரமழான் வந்துவிட்டால் கடைதெருக்களிலும், வீடுகளில் ஆடைகள் தெரிவு செய்வதில், விரும்பிய விதத்தில் உடைகள் தைப்பதில் காலத்தை விரயம் செய்கின்றனர். பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்தையும், பண்பாடுகளையும் கற்றுத்தர வேண்டிய பெண்கள், தாய்மார்கள் மேற்கண்டவாறு ரமழானுடைய காலத்தை வீணாக்காது அவர்களை வழிக்காட்டலாமே..!

பள்ளிவாயலுக்கு போங்கள், குர்ஆனை ஓதுங்கள் என்று அவர்களை ஏவுவதை தவிர்த்து பள்ளிவாயலுக்கு போவோம் வாருங்கள், குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் என்று அவர்களை அழைத்து இந்நாட்களை பிரயோசனமாக கழித்திடலாமே.!

ஆண்கள் வியாபார விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய அதேநேரம், மாற்றுமதத்தவர்கள் அதிகமாக வந்துபோகும் வியாபார இடங்களில் ரமழானுடைய கண்ணியத்தை, மாற்றத்தை விதைக்க முற்பட வேண்டும். எமது மாற்றங்கள் நாளை அவர்களுக்கு அழைப்பாக மாறினாலும் ஐயமில்லை.

எனவே புனித ரமழானுடைய இக்காலப்பகுதியில் அதிகமான நன்மைகளை செய்ய நாமனைவரும் முயலுவோம். நன்மையான விடயங்கள் பக்கம் எம் கால்கள் செல்லமுற்படாவிட்டாலும் தீமையான, ஆரோக்கியமற்ற செயற்பாடுகள் பக்கம் செல்லாதிருப்போம். கடந்த வருடம் எம்மோடு ரமழானை அடைந்த எத்தனையோ பேர் இப்போது எம்மோடு இல்லை. எமக்கு வல்ல இறைவன் தந்த இந்த வாய்ப்பை பிரயோசனமுள்ளதாக கழித்திடுவோம். ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றிடுவோம்.

 WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All