Puttalam Online
interviews

இரு தசாப்த ஊடகப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது முஸ்லிம் மீடியா போரம்

  • 14 June 2016
  • 783 views

நேர்காணல்: ஏ. முஹம்மத் பாயிஸ் / ஐ.எம். இர்சாத்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்களை எட்டியுள்ளது. ஊடகத்துறையில் செயற்படும் பல்தரப்பட்ட 750 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம் மீடியா போரம் பல்வேறு சேவைளை ஊடகத்துறைக்கு ஆற்றி வருகிறது. மீடியா போரத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் துவக்கம் தொடர்பில் போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் அவர்களை நேர்கண்டோம். அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டவற்றை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.

ameen6

எங்கள் தேசம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் துவக்கம் பற்றித் தெளிவு படுத்த முடியுமா?

என்.எம். அமீன்: இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு  உறுப்பினராக செயற்பட்டபோது பெற்ற அனுபவத்தின் பலனாக முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. இது தொடர்பாக சமகாலத்தில் ஊடகங்களில் பணிபுரிந்த முஸ்லிம் சகோதரர்களுடன் உரையாடியபோது கிடைத்த ஆதரவு காரணமாக 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் என்னால் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான அமைப்பு உருவானது. அன்று ரன்முத்து ஹோட்டல் உரிமையாளர் மர்ஹூம் ஆர்.ஏ.டபிளியு.எம். அமீர் அவர்களின் ஆசியுடன் pமுஸ்லிம் மீடியா அலயன்ஸ்P எனும் பெயரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

சுமார் 25 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த அங்குரார்ப்பண கூட்டத்தின்போது அமைப்பின் தலைவராக “எகொனமிக் டைம்” சஞ்சிகையின் ஆசிரியர் மர்ஹூம் ஏ.சி.ஏ. கபூர் தலைவராகவும் அப்போது தினகரனில் பணிபுரிந்த நான் செயலாளராகவும் வீரகேசரியில் பணிபுரிந்த மர்ஹூம் ஏ.எல்.எம். சனூன் பொருளாளராகவும் தெரிவானர்.

 பெரும் எதிர்பார்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட முஸ்லிம் மீடியா அலயன்ஸிற்கு குறுகிய காலமே இயங்க முடிந்தது. அக்கால கட்டத்தில் நாட்டில் பரவி வந்த பயங்கரவாதக் கிளர்ச்சி காரணமாக இந்த அமைப்பின் செயற்பாட்டினை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும், 10 வருடங்களின் பின் மீண்டும் முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பிரதிபலனாக 1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்” உருவாக்கப்பட்டது.

இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் 36 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் பின் நடைபெற்ற செயற்குழுவிற்கான தேர்வில் தலைவராக எஸ்.பி. ஹலால்தீன், செயலாளராக என்.எம். அமீன் பொருளாளராக எம்.பி.எம். அஸ்ஹர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 1995 ஜுலை 19 ஆம் திகதி தெரிவான முஸ்லிம் மீடியா போரத்தின் முதலாவது செயற்குழு 1995 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இயங்க ஆரம்பித்தது. இதன் பின்னர் 1999 ஜூன் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். இதுவரை தலைவராக கடமையாற்றிய எஸ்.பி. ஹலால்தீன் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காக ஒதுங்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  அன்று தொடக்கம் வருடாந்த அங்கத்தவர் மாநாடுகளை தொடராக நடத்தி இந்த மீடியா போரத்தை கட்டிக் காத்து வருகிறோம். அப்போது 31 அங்கத்தவர்கள் இருந்த இந்த அமைப்பிலே, இன்று 750 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலேயே பணியாற்றுபவர்கள். இவ்வாறாக எமது மீடியா போரம் கடந்த 20 வருடங்களாக செயற்பட்டு, வளர்ச்சி கண்டு வருகிறது.

எங்கள் தேசம்: மீடியா போரத்தின் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்?

என்.எம். அமீன்: அங்கத்தவர்களது அறிவாற்றலை விருத்தி செய்வதற்காக மீடியா போரம் பல நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பிரகாரம் சஊதி அரேபிய அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப 2004 இல் பத்து அங்கத்தவர்களுக்கு சஊதி அரேபிய ரியாத் ஜாமியதுல் இமாம் பல்கலைக்கழகத்தில் விசேட ஊடக பாடநெறியைக் கற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஜின்னா புலமைப்பரிசில் நிதியத்தின் மூலம் போரத்தின் வேண்டுகோளின் பேரில் 2014 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடக டிப்ளோமா பாடநெறியைத் தொடர்ந்த பதினைந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு கட்டண முழுத் தொகையையும் புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டது.

ஊடகத்துறையின் விபரங்களை உள்ளடக்கிய மீடியா டயறி ஒன்றையும் மீடியா போரம் வெளியிட்டது. இலங்கையில் முதன் முறையாக மீடியா டயறியை வெளியிட்ட பெருமை எமது முஸ்லிம் மீடியா போரத்துக்கே உரியது. இது ஐந்து பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் நடத்திய ஊடக டிப்ளோமா பாடநெறி சிங்கள மொழிமூலமே நடத்தப்பட்டது. அப்போதைய ஊடகப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜே.பி. திஸாநாயக்கவுக்கு எமது போரம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இப்பாடநெறி தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், 500 க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இப்பாடநெறியைப் பயின்று டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மீடியா போரம் ஆரம்பமானது முதல் இன்று வரை ஊடகத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்து முகமாக 48 ஊடகக் கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடத்தியுள்ளோம். பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அரபுக் கல்லூரி மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் ஊடகம் பற்றிய ஆர்வத்தை இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் ஊடக மேம்பாட்டிற்கான பல திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றோம்.

எங்கள் தேசம்: மீடியா போரத்தின் அடைவுகள் தொடர்பாக கூற முடியுமா?

என்.எம். அமீன்: மீடியா போரம் கடந்த இரு தசாப்தங்களில் பல சாதனைகளை அடைந்துள்ளது. குறிப்பாக, முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரு மேசையில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சியை பிரதான சாதனையாகக் குறிப்பிடலாம்.

இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே மேசையில் சந்திக்கும் ஒன்றுகூடலை முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்தது. 1999.08.12 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அதில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சகல முஸ்லிம் எம்பிக்களும் கலந்து கொண்டமை ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

பிரபல பௌத்த மதகுருவான சோம தேரருடன் காலஞ் சென்ற அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரஃப் நடத்திய தொலைக்காட்சி விவாதம் முஸ்லிம் தொடர்பாக சமூகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தத்தின் பின் முஸ்லிம் சிவில் இயக்கங்களை ஒன்றுபடுத்துவதற்கு எடுத்த முயற்சியை மற்றnhரு பிரதான சாதனையாகக் குறிப்பிடலாம். சுனாமி அனர்த்தத்தின்போது எமது சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மீடியா போரத்தின் தலைமையில் உருவாக்கிய சி.சி.ஆர்.ஆர். அமைப்பினூடாக முன்னெடுக்க முடிந்தது. பின் இந்த அமைப்பு சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கி முஸ்லிம் கவுன்ஷில் ஒஃப் ஸ்ரீ லங்கா (இகுஃ) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. கடந்த 20 வருட காலமாக சமூகத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பலமான அமைப்பாக இது செயற்பட்டு வருகின்றது.

முஸ்லிம் சமூகத்தினால் தேசிய ஊடகங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மீடியா போரம் கடந்த 20 வருடங்களாக உரத்துக் குரல் கொடுத்து வந்தது. 1882 அறிஞர் சித்தி லெப்பை முஸ்லிம் நேசனை ஆரம்பித்து சமூகத்தின் கண்களைத் திறந்து வைத்தபோதும், அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் வெளியிடப்பட்டபோதும் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் நாளிதழ்களோ, வானொலிகளோ, தொலைக்காட்சியோ இல்லாமை பற்றி முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம் சமூகத்தை அறிவூட்டியது அதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இந்தக் குரலுக்கு 2015 ஆம் ஆண்டு பதில் கிடைத்தது. வாரப் பத்திரிகைகளாக வெளிவந்த நவமணி மற்றும் விடிவெள்ளி என்பன இப்போது தினசரியாக வெளிவருகின்றன.  மீடியா போரத்தின் பிரதான சாதனைகளில் ஒன்றாக இதனை நாம் பெருமையோடு குறிப்பிடுகின்றோம்.

இவை தவிர, முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் செய்தி எப்.எம். என்ற வானொலியும் இப்போது செயற்படுகிறது. மிக விரைவில் உதயம் தொலைக்காட்சியும் வானலைகளுடன் சங்கமிக்கவுள்ளது.

எங்கள் தேசம்: முஸ்லிம் மீடியா போரம் இன நல்லுறவுக்கு ஆற்றிய பங்களிப்பு?

என்.எம். அமீன்: முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம்களுக்கு மட்டுமா என்ற கேள்வி எழுவதற்கு இடமளிக்காது எப்போதுமே ஏனைய ஊடக அமைப்புகளுடனும் ஒன்றுபட்டே பயணித்துள்ளது. ஊடக சமூகத்தின் துன்ப-துயரங்களிலும் போராட்டங்களிலும் முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பத்திரிகை ஊழியர்களது தொழிற்சங்க அமைப்பு, தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு, பத்திரிகை சுதந்திரத்திற்கான கட்டமைப்பு ஆகியவற்றுடன் தோளோடு தோள் இணைந்து செயற்பட்டுள்ளதோடு, செயற்பட்டும் வருகின்றது. அத்தோடு, இன நல்லிணக்கத்திற்கு பங்களிப்பவர்களை ஊக்குவித்து அவர்களை கௌரவிக்கிறNhம். இனவாதத்தை ஏற்படுத்தாத நடுநிலையான அறிக்கையிடலை ஊக்குவித்ததுடன் அதற்கான பயிற்சிகளையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினோம்.

எங்கள் தேசம்: உங்களது பார்வையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறுள்ளது?

என்.எம். அமீன்: 2013 ஆம் ஆண்டு காத்தான்குடியிலேயே சமூக ஊடகம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறை ஒன்றினை நடத்தினோம். அப்போது அரபு வசந்தத்தைக் கொண்டு வரப்போகிறார்கள் என்று கதையைப் பரப்பி பாதுகாப்புத் தரப்பால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமையினால் அப்பயிற்சிப் பட்டறையை இடையில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக நாங்கள் எதுவும் செய்யவில்லை. சிலாபத்தில் இதே போன்ற ஊடக கருத்தரங்கை மேற்கொண்ட போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எம்மை விசாரித்தனர். ஆனால், இப்படியான ஒரு சூழ்நிலை இன்றில்லை. ஊடகத்துறை சம்பந்தமான பல பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறோம் சுதந்திரமாக எழுதுகிறோம். இதற்கான சுதந்திரம் இன்று இலங்கையில் இருந்தாலும் ஒரு முழுமையான ஊடக சுதந்திரம் நாட்டில் இருப்பதாக கூற முடியாது. சில நேரங்களில் அரசாங்கம் மட்டுமல்ல, சில பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. என்றாலும் கூட, ஒப்பீட்டளவில் ஊடக சுதந்திரம் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. thankstoengalthesam.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All