Puttalam Online
kids

புலமைப் பரிசில் பரீட்சை புள்ளிகளும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும்.

  • 11 October 2016
  • 581 views

“ரீச்சர், உங்கட மகனுக்கு எத்தனை மார்க்ஸ்?” என்று காலங்காத்தாலே தெரிந்த ஒரு ஆசிரியையைப் ஃபோன் பண்ணிக் கேட்டேன்.

“பத்தாது தம்பி” என்றார் கரகரத்த குரலில். அப்பொழுதுதான் எழும்பியிருப்பார் என்று நினைத்து பேச்சைத் தொடர்ந்தேன். ஆனால் அந்தக் கரகரப்புக்குக் காரணம் நித்திரை அல்ல, என்பதை இடையில் விம்மி அழுதபோது முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

“ஆரது ஃபோன்ல? அழ வேண்டாம் எண்டு சொல்லுறது விளங்கேல்லையா” பின்னால் யாரோ அதட்டும் குரலில் எச்சரிப்பது கேட்டது, கணவர் போலும். “சரி ரீச்சர் நான் பிறகு கதைக்கிறேன்” என்று துண்டித்துவிட்டேன்.

விடியற்காலையிலேயே ஒரு குடும்பத்தின் அமைதியைக் குலைத்துவிட்டேனே என்ற உறுத்தல் இப்பொழுதும் மனதைக் குடைகிறது. ஒரு நல்ல பண்புள்ள ஆசிரியை அவர். கடந்த காலங்களில் என் கல்வி மேல் மிகுந்த அக்கறையுள்ளவர். ஒவ்வொன்றையும் என்னிடம் விசாரிக்கும்போது சந்தோசப்படுவார். அந்த அக்கறையிலேயே நானும் ஏதோவொரு நம்பிக்கையில் அவரின் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மகனின் புலமைப் பரிசில் பரீட்சை புள்ளிகளை விசாரித்தேன், இப்படியாகிவிட்டது!

ஏனோ தெரியவில்லை, ஒரு உயர்நிலை ஆசிரியராக உள்ள அவரால் இந்தப் பிரச்சினையை இலகுவாக எடுக்கமுடியவில்லையே. ஒரு ஆசிரியரால் முடியவில்லையெனில் சாதாரண பெற்றோரால் எப்படித் தமது பிள்ளைகளின் தோல்வியை எதிர்கொள்ள முடியும்? இன்றைக்கு எத்தனை வீடுகளில் இதேபோன்ற ஓலங்கள் நடைபெறுகின்றதோ என்பதை நினைக்கும்போதுதான் இன்னும் உறுத்துகின்றது.

தோல்வி எல்லாம் ஒரு பிரச்சினையா? அதுவும் ஐந்தாம் வகுப்பில்? இன்னும் எத்தனையோ படிகள் ஏற வேண்டியிருக்கின்றன.

முதல் கோணல் முற்றும் கோணல் என்ற கோணல் நினைப்பு ஒருபோதுமே வரக்கூடாது. முதல் படியில் சறுக்கிய பிள்ளையால்தான் அடுத்த படியில் அவதானமாக கால்வைக்க முடியும். பொதுவாக ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் பின்வரும் பரீட்சைகளில் சாதிக்கின்றனர். இதுதான் இலங்கையைப் பொருத்தவரை இந்தப் பரீட்சை அறிமுகமான காலத்திலிருந்து நிலவி வரும் நிதர்சனம்.

இப்படியெல்லாம் அந்த ஆசிரியைக்கு அறிவுரை கூறுமளவுக்கு அடியேன் முதிர்ச்சியானவனல்ல. எனது வயது, அவரது அனுபவம். இப்படியிருக்கயில் இதற்கும் மேலாக அவரால் சிந்திக்க முடியும் என்பதை அவர் எனக்கு வழிகாட்டியவைகளிலிருந்து நன்றாக உணர்ந்துள்ளேன்.

ஆனால் பிரச்சினை அதுவல்ல. ஆசிரியர்களாயுள்ள பெற்றோரிடையே இதுபற்றி ஒரு போட்டி இருந்திருக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக தத்தமது பிள்ளைகளின் தலையிலே சுமைகளை ஏற்றி ஏற்றத்தாழ்வைப் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள்.

பிள்ளை மற்றும் போட்டி போன்ற போதைகள் அவர்களின் இயல்பான சிந்தனையைத் தடுத்துவிட்டன. ஆசிரியர்களுக்குள் உண்டான ஒருவித பகட்டுச் சிந்தனை என்றும் சொல்லலாம். அந்த ரீச்சரின் மகளுக்கு 180 மார்க்ஸ், என்ர பிள்ளைக்கு 150 மட்டும்தானா? போன்ற தாழ்வு மனப்பான்மைச் சிந்தனைகள் அத்தனை ஆசிரியப் பெற்றோர்களிடமும் தற்பொழுது தொற்றியிருக்கிறது.

ஆசிரியர்களுக்கே இப்படி நிலமையெனில் தினமும் ரியூசன் வாசலில் நாயாய் பேயாய் காத்திருந்து படிக்கவைத்த சாதாரண பெற்றோரின் நிலையைச் சொல்லவேண்டுமா?

சில நாட்களின்முன் க.பொ.த சாதாரண தரத்தில் நல்ல புள்ளிகள் பெறாமலும் உயர்தரம் படிக்கலாம் என்ற ஒன்றுக்கும் உதவாத தீர்மானத்தை அறிவித்த இலங்கை அரசு இந்தப் புலமைப் பரிசில் பரீட்சையால் இதுவரை அடைந்த முன்னேற்றம்தான் என்ன? பலரை வேதைனைக்குள் ஆழ்த்தும் இதை ஏன் இன்னமும் நடைமுறையில் வைத்திருக்கிறது?

நன்றி இணையம்

IKN

images-139

Wisdom poolachenai

Wisdom poolachenai


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All