Puttalam Online
health

மில்லியன் கணக்கானோரை பீடித்த பாலுறவு தொற்று நோய்கள்

  • 30 October 2016
  • 816 views

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரங்கிகளோடும் இரண்டரக் கலந்த உணர்வுகளில் ஒன்று தான் பாலியல் உணர்வும் பாலியல் தேவையும் ஆகும். இப்பாலுறவுத் தொடர்புகளை சமூக விழுமிய கட்டமைப்புக்களை மீறாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒழுங்கமைப்பு தான் சமூகத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது.

ஆயினும் இந்த சமூக விழுமிய கட்டமைப்பு ஒழுங்குகளுக்கு முரணான வகையில் பாலியல் இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயற்பாடுகளும் சமூகத்தில் காணப்படவே செய்கின்றது. அவையே பாதுகாப்பற்றதும், தவறானதுமான பாலுறவு செயற்பாடுகளாக விளங்குகின்றன.

இதன் விளைவாக சமூகத்தில் பாலுறவு தொற்று நோய்களது (Sexual Transmitted Infection) அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த வகையில் 2008 ஆம் ஆண்டில் உலகலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், சிபிலிஸ், கொனேரியா, கிளமேடியா போன்ற பாலுறவுத் தொற்று நோய்களுக்கு 500 மில்லியன் பேர் உள்ளாகியமை தெரிய வந்தது. அத்தோடு ‘ஜெனிட்டல் ஹேர்பிஸ்’ என்ற பாலுறவு நோய்த் தொற்றுக்கு 530 மில்லியன் பேர் உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

gyt2

அச்சுறுத்தல் மிக்கவர்கள்

அதன் காரணத்தினால் பாலுறவு தொற்று நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டு இருக்கின்றது. அதற்கேற்ப விழிப்புணர்வூட்டும் அறிவூட்டல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது ஒருவர் தம் பாலியல் இச்சையைத் தவறான வழியிலும், பாதுகாப்பற்ற முறையிலும் நிறைவேற்றிக் கொள்ளும் போது தான் பாலுறவு தொற்று நோய்களது அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுகின்றது. குறிப்பாக தம் பாலியல் இச்சையை முன்பின் அறிமுகமற்றவர்களுடன் நிறைவேற்றிக் கொள்பவர்களும், தம் பாலுறவுத் தொடர்பாடலாளரை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களும், பாதுகாப்பற்ற முறையிலும், தவறான வழிகளிலும் பலருடன் பாலுறவு தொடர்புகளை வைத்துக் கொள்பவர்களும், பாலியல் தொழிலாளர்களுடன் பாலுறவில் ஈடுபடுபவர்களும், மது போதையில் இருக்கும் போது பாலுறவில் ஈடுபடுபவர்களும்இப்பாலுறவுத் தொற்று நோய்களின் அச்சுறுத்தலைப் பெரிதும் எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறானவர்களுடன் வாய் மூலமோ, யோனி மற்றும் குத வழியாகவோ தம் பாலியல் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது தான் இவ்வகைத் தொற்று நோய்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.

இத்தொற்று நோய்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு உலகலாவிய ஆய்வில், சமூகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பாலுறவு தொற்று நோய்கள் காணப்படுவதாக இனம் காணப்பட்டுள்ளது. இவற்றில் வைரஸ் மூலம் பரவும் நோய்களும், பக்றீரியா மூலம் பரவும் நோய்களும், பங்கசு என்ற நுண்ணுயிர் ஊடாகப் பரவும் நோய்களும் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கை குடும்பத் திட்ட சங்கம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வொன்றின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

1260109578fdulnpஅதாவது கிளமெடியா, கொனோரியா, சிலிபிஸ் போன்றன பக்றீரியா மூலமும், ஹேர்பிஸ், எச். ஐ. வி/ எயிட்ஸ் என்பன வைரஸ் மூலமும் தோற்றுவிக்கப்படும் பாலுறவு தொற்று நோய்களில் சிலவாகும்.

பொதுவாகப் பாலுறவு தொற்று நோய்கள், இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவர்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது தான் தொற்றிப் பரவுகின்றன. ஆனாலும் அசுத்தமான இரத்தம், இழையம், தாய்ப்பால், பிள்ளை பிரசவம் என்பவற்றின் ஊடாகவும் இத்தொற்று நோய்கள் பரவக் கூடியதவை என்பதையும் மறந்து விட முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிகுறிகள்
ஆகவே பாலுறவு தொற்று நோய்க்கு உள்ளானவர்கள் மத்தியில் பலவித அறிகுறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அவற்றில் பாலுறுப்புக்களில் காயங்கள் ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படுதல், ஆண்குறியின் சிறுநீர் வழி ஊடாக வெள்ளை நிறத் திரவம் வெளிப்படல், பெண்களுக்கு அதிகம் வெள்ளை படுதல், பாலுறுப்புக்களில் நீர்க் கொப்புளங்கள் ஏற்படுதல், பெண்களின் அடிவயிற்றில் வலி ஏற்படுதல் என்பன குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும். இவ்வறிகுறிகளில் சில வேறு நோய்கள் காரணமாகவும் வெளிப்படலாம்.

சிகிச்சை
அதன் காரணத்தினால் இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது பாலுறவு தொற்று நோய்கள் தொடர்பான கிளினிக்கிலோ மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் சில பாலுறவு தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் வெளியே தென்படாது. அதனால் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் அவசி-யமானது. அத்தோடு பாலுறவு- தொற்று நோய்க்குரிய அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் சிலர் வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் காரணமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது ஆபத்தான பின் விளைவுகளைக் கொண்டு வரக் கூடியதாகும். அதனால் இந்நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களை மருத்துவ நிபுணரின் ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான பாலுறவு தொற்று நோய்களை உரிய நேர காலத்தில் இனம் கண்டு- சிகிச்சை பெற்றுக் கொள்ளும் போது இந்நோய்களைக் குணப்படுத்தி கொள்ளலாம்.

சிகிச்சை பெறத் தவறும் போது….
ஆனால் இத்தொற்று நோய்களுக்கு உரிய நேர காலத்தில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறினால் பலவித ஆரோக்கிய நெருக்கடிகள் எற்பட இடமுள்ளது. குறிப்பாக மலட்டுத்தன்மை ஏற்படலாம். அத்தோடு இந்நோய்க் காரணிகள் இதயம், மூளை, நரம்பு தொகுதி என்பவற்றில் தாக்கங்களை தோற்றுவிக்கவும் முடியும்.

அதேநேரம் சில பாலுறவுத் தொற்று நோய்களுக்களுக்கான அறிகுறிகள் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் கூட வெளிப்படலாம். அதேவேளை சில நோய்கள் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் அந்நோய்க் காரணிகள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் கடத்தப்படலாம். அதன் மூலம் சில பாதிப்புக்கள் குழந்தைக்களுக்கும் ஏற்பட முடியும்.

ஆகவே பாலுறவு தொற்று நோய்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக நம்பிக்கைக்குரியவருடன் மாத்திரமே பாலுறவை வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்பின் அறிமுகமற்றவர்கள், பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் தவறானதும், பாதுகாப்பற்றதுமான பாலுறவு தொடர்பை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் கன நேர ஆசைக்காக வாழ்வைப் பாழாக்கலாமா?

நன்றி : தினகரன் 22.10.3016 (மகுடம்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All