Puttalam Online
other-news

இன்று உலக பக்கவாத தினம் – அலட்சியமும் தாமதமும் ஆபத்தையே தரும்

  • 30 October 2016
  • 817 views

பக்கவாத அறிகுறிகள் எவை?  அலட்சியமும் தாமதமும்  ஆபத்தையே தரும்

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

உலக பக்கவாத தினம் (World Stroke Day – 29.10.2016) இன்றாகும். இத்தினத்தின் நிமித்தம் சுகாதார கல்வி பணியகம் 24.10.2016 அன்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் கருத்தரங்கில் இலங்கை பக்கவாத சங்கத்தின் தலைவரான நரம்பியல் சிகிச்சை நிபுணர் எம்.ரி.எம்.ரிப்ஸி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பக்கவாத சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளரான நரம்பியல் சிகிச்சை நிபுணர் பத்மா குணரட்ன, நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் உதய ரணவக்க, காமினி பத்திரன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் தொற்று நோய்களின் அச்சுறுத்தல்கள் குறைவடைந்து கட்டுப்பாட்டு நிலையை அடைந்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், தொற்றா நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அத்தோடு இந்நோய்களின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் கூடிச் செல்கின்றது. அவற்றில் பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு என்பன குறிப்பிடத்தக்கவை.

downloadஅந்த வகையில் உலகலாவிய பக்கவாத தினம் அனுஷ்டிக்கப்படும் இத்தினத்தில் இந்நோய் குறித்து கவனம் செலுத்துவது பெரிதும் நம்மை பயக் கூடியதாக இருக்கும்.

உலக சனத்தொகையில் 1.5 வீதமானோர் பக்கவாதம் (Stroke) காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும் போது இந்நாட்டில் மூன்று இலட்சம் பேர் இந்நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பக்கவாதம் என்பது மிகப் பயங்கரமான நோய். உலகில் இடம்பெறும் மரணங்களுக்கு இரண்டாவது காரணமாக விளங்கும் இந்நோய், அங்கவீனத்தைத் தோற்றுவிக்கும் முதலாவது காரணியாகவும் உள்ளது. இந்நோய்க்கு உள்ளாவோரில் மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழப்பர். மற்றொரு மூன்றிலொரு பங்கினர் உடல் உள ஊணத்திற்கு உள்ளாவர். எஞ்சிய மூன்றிலொரு பங்கினர் தான் இந்நோயின் ஆபத்திலிருந்து மீறள்வர். இது தான் இந்நோயின் தற்போதைய நிலைமை.

images

இவ்வாறு பயங்கர நோயாக விளங்கும் இப்பக்கவாதத்தின் அச்சுறுத்தல் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இலங்கையில் தான் பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் காரணத்தினால் தான் இந்நோய்க்கு உள்ளானவர்களாக தினமும் நான்கைந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பக்கவாத சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தருகின்றனர் என்று நரம்பியல் சிகிச்சை நிபுணர் பத்மா குணரட்ன தெரிவிக்கின்றார்.

பொதுவாக 60  – 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது. அதாவது வயது முதிர்ந்து செல்லச் செல்ல பக்கவாத அச்சுறுத்தலும் அதிகரித்து செல்லுமேயொழிய குறைவடையாது. அதேநேரம் பெண்களை விடவும் ஆண்களுக்கே இந்நோய் அச்சுறுத்தல் மிக அதிகம். அதிலும் குறிப்பாக வெள்ளையர்களை விடவும் கருப்பர்களுக்கே இவ்வச்சுறுத்தல் அதிகம். இவை மருத்துவ ரீதியாக அவதானிக்கப்பட்டுள்ள விடயங்கள். எனினும் பக்கவாத நோய்க்குத் துணைபுரியம் இம்மூன்று விடய்களையும் தவிர்த்துக் கொள்ள முடியாது.

ஆனால் இந்நோய்க்கு அதிக பங்களிப்பு நல்கக் கூடிய உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், நீரிழிவு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, புகைப்பிடித்தல், அதிக மதுப்பாவனை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, அதிக உடல் பருமன் என்பவற்றைத் தவிர்த்துக் கொண்டால் அல்லது கட்டுப்படுத்திக் கொண்டால் பக்கவாத அச்சுறுத்தலைப் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம்.

imagesஎன்றாலும் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், நீரிழிவு என்பவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று வினவுபவர்களும் இருக்கவே செய்வர். இதற்கு மிக இலகுவான பதி-ல் தான் கொழுப்பு, சீனி, உப்பு அதிகம் அடங்கிய உணவு வகைகளைத் தவிர்த்தும் குறைத்து-ம் கொள்ள வேண்டும் என்பதாகும்.

மருத்துவ நிபுணர்களது சிபாரிசுகளின் படி, ஒருவர் ஒரு நாளைக்கு 1.5 கிறாம் உப்பையே உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்று உப்பு சேர்க்கப்படாத உணவே அரிதாகவே உள்ளது. இதன் மூலம் தினமும் எமது உடலில் எவ்வளவு கிறாம் உப்பு சேரும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இதே நிலை தான் சீனி தொடர்பிலும் காணப்படுகின்றது. அதனால் சீனி, உப்பு மற்றும் கொழுப்பு நுகர்வை மருத்துவ நிபுணர்களின் சிபாரிசுகளுக்கு ஏற்ப பேணிக் கொள்வது தான் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

ஆகவே ஆரோக்கியத்திற்கு உகப்பான உணவு வகைகளை வேளை வேளைக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டு-ம். அத்தோடு- தினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடவும் வேண்டும். அதிலும் ஒரே தடவையில் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதனை 15 நிமிடங்கள் படியோ அல்லது பத்து நிமிடங்கள் படியோ மேற்கொள்ள முடியும். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிபாரிசு தான்’ என்று நரம்பியல் நிபணர் எம்.ரி.எம்.ரிப்ஸி குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பக்கவாத அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்ளலாம். என்றாலும் இலங்கையி-ல் இப்பக்கவாத அச்சுறுத்தல் அதிகரித்து செல்வதற்கு சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பிரதான காரணமாக விளங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பக்கவாதம் தொடர்பில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் அரசாங்க வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்ற மரணங்களில் 10 வீதத்திற்கு பக்கவாதமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

பக்கவாதமானது திடீரென ஏற்படக் கூடிய ஒரு நோயாகும். அதாவது மூளைக்கான இரத்தவோட்ட குருதிக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு மூளைக்கான இரத்தவோட்டம் தடைபடும் போது இந்நோய் வெளிப்படும். இல்லாவிட்டால் மூளைக்கான குருதிக்குழாயில் திடீரென ஏற்படும் வெடிப்பு காரணமாக இந்நோய் வெளிப்படும். இவற்றின் விளைவாக மூளைக்கு கிடைக்க வேண்டிய ஒட்சிசன் கிடைக்காது போகும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்நோய் வெளிப்படுகின்றது. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் தான் பக்கவாதம் ஏற்படுகின்றது.

என்றாலும் இந்நோய் ஏற்பட முன்னரான 48 மணித்தியாலங்களுக்குள் வழமைக்கு மாறான சில அறிகுறிகள் திடீரென உடலில் தோற்றம் பெற்று சில நிமிடங்களில் தானாகவே வழமைக்கு திரும்பிவிடும். அவற்றில் தீவிர தலைவலி, பார்வை குறைபாடு அல்லது பார்வை மங்குதல், விழுங்க முடியாத நிலைமை, நா குலறுதல், கை, கால் செயலிழந்த உணர்வு, முகம், கை மற்றும் காலின் ஒரு பகுதி விறைப்பு என்பன குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும்.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது உடனடியாக செயற்பட வேண்டும். நேர காலத்தை வீணாக்கக் கூடாது. இந்த அறிகுறிகள் பேராபத்திற்கான முன்னறிகுறிகளாக அமைய முடியும். அதனால் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள பிரதான வைத்தியசாலைக்கு சென்று தமக்கு ஏற்பட்ட அறிகுறிகளை விபரமாக எடுத்துக் கூறி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பக்கவாதத்தின் பேராபத்தைப் பெரிதும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இருப்பினும், எவராவது இந்நோய்க்கு உள்ளானால் எவ்வளவு அவசரமாக பிரதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியுமோ அவ்வளவு வேகமாக உடல் நலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுவும் இந்நோய்க்கு உள்ளாகி மூன்று மணித்தியாலயங்களுக்குள் பிரதான வைத்தியசாலைக்கு வருகை தருவது சிகிச்சை அளிப்பதற்கான சிரமத்தை குறைக்கும் என்பது தான் நரம்பியல் சிகிச்சை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதனால் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். அதாவது பக்கவாதத்திற்கான முன்னறிகுறிகளை மக்களே கண்டறிந்து துரிதமாக செயற்படக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்படும் போது பக்கவாதத்தின் பாதிப்புக்களையும் பின் விளைவுகளையும் பெரிதும் குறைத்தும் தவிர்த்தும் கொள்ளலாம்.

நன்றி : தினகரன் – (மகுடம்)
29.10.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All