Puttalam Online
health

இன்று உலக நீரிழிவு தினம் : நீரிழிவு – அமைதிக் கொலைகாரன்

  • 14 November 2016
  • 1,280 views

diabets3

நீரிழிவு –  உடல் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அழித்தொழிக்கும் அமைதிக் கொலைகாரன்

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

உலக நீரிழிவு தினம் (World Diabetes day) இன்று 14ம் திகதி ஆகும். இதனை முன்னிட்டு சுகாதார கல்விப் பணியகம் 2016.11.11 அன்று ஒழுங்கு செய்திருந்த விஷேட செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த. சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் சமூக நோயியல் நிபுணர் திருமதி வெர்ஜினி மல்லவராச்சி ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

இன்றைய நவீன யுகத்தில் மனித சமூகத்திற்கு பெரும் சாவலாக மாறியுள்ள நோய் நீரிழிவு (Diabetes). மனிதன் தன் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் நடத்தைக் கோலம் மூலம் தேடிக் கொள்ளும் நோயே இது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் உரிய உணவு மற்றும் நடத்தை கோலத்தைக் கையாண்டு இந்நோயைப் பல வருடங்களுக்கு தாமதப்படுத்திக் கொள்ளலாம் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து. உலகலாவிய ரீதியில் மெற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலமும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

download

இருந்தும் பெரும்பாலானவர்கள் இந்நோய் வளர்ச்சியடைந்த பின்னர்தான் மருத்துவ ஆலோசனையை நாடுகின்றனர். இந்நோய்க்கு உரிய முறைப்படி சிகிச்சை அளித்தால் ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு நோயைக் கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் இந்நோய்க்கான நெருக்கடிகள் எற்படத் தொடங்கினால் அவை பெரும் பாதிப்பாகவே அமையும்.

அதன் காரணத்தினால்தான் இந்நோயை இனம் காண்பதை ஊக்குவிப்பதை இம்முறை உலக நீரிழிவு தினம் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டிருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இருவரில் ஒருவர் நீரிழிவு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது. அதிலும் இந்நாட்டு சனத்தொகையில் 20 வீதத்தினருக்கு அதாவது ஐவரில் ஒருவருக்கு குளுக்கோஸ் அளவு சாதாரண மட்டத்தில் இல்லை. இருந்தும் இதனைப் பெரும்பாலானவர்கள் அறியாதுள்ளனர். இந்நோயை அறிந்து கொள்ளாதிருப்பது என்பது நோய்க்கு சிகிச்சை பெறாதிருப்பதையே குறிக்கும். இதன் விளைவாக இந்நோய்க்குள்ளாகி இருப்பவர் அறியாத நிலையிலேயே அவரது அவயவங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் பணியை இன்சுலின் ஹோர்மோன் மேற்கொண்டு வருகின்றது. இந்த ஹோர்மோனை சதையி சுரக்கின்றது. இந்த இன்சுலின் குருதியில் அதிகரித்து காணப்படும் குளுக்கோஸை ஈரலிலும், தசையிலும் படிய வைக்கும். அதனால் ஒருவர் உண்ணும் உணவில் காணப்படும் காபோஹைதரேட்டுகளிலுள்ள மேலதிக குளுக்கோஸ் உடலுக்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தவதற்காக இன்சுலின் மூலம் சேமிக்கப்படுகின்றது. அதாவது ஒருவர் சாப்பிடாத நேரத்தில் அவரது உடலுக்குத் தேவையான அளவு குளுக்கோஸ் இதனூடாக வழங்கப்பட்டு உடலின் சக்தி பேணப்படுகின்றது.

diabetiestype2-06-1459940031அதனால் சாதாரண உடலாரோக்கியம் கொண்ட ஒருவர் உணவு உண்பதோடு சேர்த்து உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்குமாயின் மறுகணமே நிழல் போன்று இன்சுலின் சுரக்கும். அதன் ஊடாக குருதியில் குளுக்கோஸின் மட்டம் சீரமைக்கப்படுகின்றது. ஆனால் நீரிழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் பணி இவ்வாறு சீராக இடம்பெறாது. அதனால் இந்நோயாளர்கள் உரிய சிகிச்சையைப் பெற வேண்டும்.

நீரிழிவு நோயில் இருவகை உள்ளது. அவற்றில் ஒன்று சிறுவர்களுக்கு ஏற்படும் முதல் வகை நீரிழிவு. மற்றையது வளர்ந்தவர்களுக்கு எற்படக் கூடிய இரண்டாம் வகை நீரிழிவு. இரண்டாம் வகைக்கு உள்ளாகின்றவர்களிடம் போதியளவில் இன்சுலின் காணப்பட்டாலும் அவை உரிய முறையில் செயற்படாததன் விளைவாக இந்நோய் தோற்றம் பெறுகின்றது.

 பாதிப்புக்கள்:

அதேநேரம் ஒருவரின் குருதியில் நீண்ட காலம் குளுக்கோஸ் அதிகரித்துக் காணப்படுமாயின் உடலில் எல்லாவித நெருக்கடிகளும் தோற்றம் பெறும். குறிப்பாக கண்கள், சிறுநீரகம், நரம்புத் தொகுதி உள்ளிட்ட அவயவங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். அதனால் மனிதனின் அவயவக் கட்டமைப்பைப் பாதிக்கும் நோய் என்றும் இந்நோய் அழைக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்நோய் ஒருவரின் கண்ணைப் பாதிக்குமாயின், அவரது கண்ணின் இரத்த நாடி பாதிக்கப்படும். அதனால் கண்ணினுள் இரத்தக் கசிவு, கொலஸ்ரோல் படிவு என்பன இடம்பெறுவதோடு கண்பார்வைக்கான சீரான இரத்தோட்டமும் குறைவடையும். சில சமயங்களில் அதிக இரத்தக் கசிவு கூட ஏற்படலாம். அப்படியாயின் கண் பார்வையே பாதிக்கப்படும்.

மேலும் இந்நோய்க்கு உள்ளானவர்களின் சிறுநீரகத்தில் சிறுநீரை வெளியேற்றும் பகுதி பாதிக்கப்படுமாயின் புரதம் சிறுநீரில் அதிகளவில் வெளியேறத் தொடங்கும். இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைக் குறைக்கவும், நீரிழிவு கட்டுப்பாட்டை நீடிக்கவும் முடியும். இதற்கான விஷேட சிகிச்சைகளும் புழக்கத்திலுள்ளன. இருந்தும் சிகிச்சை பெறத் தவறினால் குருதி மாற்றீடு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கே செல்ல நேரிடும்.

இந்நோய் காரணமாக நரம்புத் தொகுதி பாதிக்கப்படுமாயின் தம்மை அறியாமலேயே கால்களில் காயங்கள் ஏற்படலாம். இக்காயங்கள் குணமடைவதும் தாமதமடையும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைவதும், கால்களுக்கான இரத்தவோட்டம் குறைவடைவதும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. அதனால் காலைக் கூட இழக்க நேரிடும்.

அதேநேரம் பெரிய இரத்த நாடிகள் பாதிப்படையும் போது இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டு இதயத்தின் ஒரு பகுதியே செயலிழக்கலாம். இந்த இரத்தக்கட்டி மூளைக்கான இரத்த நாடியில் ஏற்படுமாயின் அது பக்கவாதத்தைக் கூட தோற்றுவிக்கலாம்.

இந்நாட்டு தரவுகளின்படி இளம் பராயத்தினரிலும் நீரிழிவு அவதானிக்கப்படுகின்றது. இவர்களில் 23 வீதமான ஆண், பெண் இருபாலாரிலும் பாலியல் வீரியத்தில் ஏற்றத்தாழ்வுகளை அவதானிக்க் கூடியதாக உள்ளதாக மருத்துவ நிபுணர் பிரசாத் கட்டுலந்த சுட்டிக்காட்டினார்.

 நீரிழிவை முன்கூட்டியே இனம் காணல்;

இவ்வாறு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இந்நோய் தோற்றம் பெற முன்னர் சில அறிகுறிகள் வெளிப்படலாம். அவற்றில் அதிக தாகம், அதிகம் சிறுநீர் வெளியேறல், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் வெளியேறல். பொது இடங்களில் கழிக்கப்படும் சிறுநீரில் எறும்பு உள்ளிட்ட சிறு பூச்சிகள் மொய்த்தல், உடல் திடீரென மெலிவடைதல், தொடரான களைப்பு, ஆண் பெண்களின் பாலுறுப்புகளில் பங்கசு தொற்று, பாலியல் பலவீனம் போன்றவாறான அறிகுறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்நோயானது கடந்த 20, 30 வருடங்களில்தான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மனிதனின் மரபணுவில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் இந்நோய் இவ்வாறு தீவிரமாகப் பரவுவதற்கு வாழ்க்கையமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே பிரதான காரணமாகும். 2006 ஆம் ஆண்டின் இந்நாட்டு பதிவுகளை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு பத்து பேரிலும் ஒருவருக்கு நீரிழிவு காணப்பட்டது. இது கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் மேலும் அதிகரித்திருப்பதையே பிந்திய பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. அதிலும் நகரப் பிரதேசங்களில் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்ற போதிலும் கிராமப் பிரதேசங்களிலும் இந்நோய் பெரிதும் வியாபித்துள்ளது.

அச்சுறுத்தல் மிக்கவர்கள்:

அதேநேரம் தென்னாசிய பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்றவகையில் இலங்கையர் உடல் பருமன் தொடர்பான நீரிழிவு குறித்து மிக அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அதனால் ஒவ்வொருவரும் தமது உடல் பருமனை உரிய முறையில் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் நீரிழிவு அச்சுறுத்தலைக் குறைத்துக் கொள்ளலாம். அத்தோடு உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களை விடவும் ஈடுபடாதவர்களுக்கு நீரிழிவு அச்சுறுத்தல் இரு மடங்கு அதிகமாகும். அதனால் உடல் உழைப்பை அதிகரிக்கும் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும். அதற்கு உடல் பயிற்சி மிகவும் சிறந்தது.

ஆகவே நவீன சமூக அமைப்பில் உணவு மற்றும் நடத்தைப் பழக்கத்தை அமைத்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது எமது உடலுக்குத் தேவையானயளவு உணவை மாத்திரம் உண்பதற்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதாவது உடலுக்கு சக்தி அளிக்கக் கூடிய உணவே முக்கியமானது. அடிக்கடி உண்பதைத் தவிர்த்துக் கொள்வதோடு அவ்வாறு உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் நீரைப் பருகுவதுதான் சிறந்தது.

அத்தோடு பச்சை நிறப் பழங்களையும் மரக்கறிகளையும் அதிகம் பிரதான உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிடைக்கப் பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடல் பயிற்சியில் ஈடுபட்டு உடல் நிறையைப் பேணவும் வேண்டும். அத்தோடு விரைவான உணவுகளில் சீனியும் கொழுப்பும் அதிகம் காணப்படுவதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான பழக்கங்களின் ஊடாக நீரிழிவைத் தவிர்த்தோ கட்டுப்படுத்தியோ ஆரோக்கிய வாழ்வைப் பேணிக் கொள்ள முடியும்.

 நன்றி : தினகரன் (மகுடம்)

14.11.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All