Puttalam Online
health

மார்பகப் புற்று நோய் – ஆரம்பத்தில் இனம் கண்டால் குணப்படுத்துவது சுலபம்

  • 14 November 2016
  • 616 views

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

ஒக்டோபர் மார்பகப் புற்று நோய் குறித்து விழிப்புணர்வூட்டும் மாதமாகும். இம்மாதத்தின் நிமித்தம் சுகாதாரக் கல்விப் பணியகம் 28.09.2016 அன்று ஒழுங்கு செய்த செய்தியாளர் கருத்தரங்கில் புற்றுநோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசியக் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் டொக்டர் சுதத் பீரிஸ், புற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர்களுக்கான இலங்கைச் சங்கத்தின் தலைவி மருத்துவ நிபுணர் தமயந்தி பீரிஸ், புற்று நோய்கள் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணர் கனிஷ்க்க டி சில்வா, மகரகம புற்று நோய்கள் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி டொக்டர் நயணக்க அல்விஸ் ஆகியோர் தெரிவித்த விடயங்கள் மற்றும் திரட்டபட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முகம் கொடுத்துள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சினைகளில் மார்பகப் புற்று நோய் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் இப்புற்று நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து பொது சுகாதாரப் பிரச்சினையாகக் காணப்பட்டாலும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். ஆனால் வளர்முக நாடுகளில் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்ட போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகம்.images

அந்தவகையில் வளர்முக நாடான இலங்கையில் புற்றுநோய்களுக்கு உள்ளாகும் பெண்களில் 28 வீதத்தினர் மார்பகப் புற்றுநோய்களுக்கு உள்ளானவர்களாக உள்ளனர். அத்தோடு இந்நோய் இலங்கையில் கட்டம் கட்டமாக அதிகரித்து வருகின்றது என்று புற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர்களுக்கான இலங்கைச் சங்கத்தின் தலைவி மருத்துவ நிபுணர் தமயந்தி பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

என்றாலும் 2012 ஆம் ஆண்டில் இந்நோய்க்கு உலகில் 1.65 மில்லியன் பெண்கள் உள்ளாகியுள்ளனர். அவர்களில் 522,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்நோயை ஆரம்பத்திலேயே இனம் கண்டு உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொண்டால் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சிகிச்சைகள் புழக்கத்தில் உள்ளன.

images-1

ஆனால் இந்நோயை இனம் காண்பதற்கு சுய பரிசோதனை பெரிதும் உதவும் என்று சுட்டிக்காட்டியுள்ள புற்று நோய்கள் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணர் கனிஷ்க்க டி சில்வா,இலங்கையில் மார்பகப் புற்று நோய்க்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்களில் 80 வீதத்தினர் இந்நோய்க்கான அடையாளங்களைத் தற்செயலாகவே கண்டு கொண்டவர்கள் என்றும், 8% முதல் 10 வீதத்தினர் மாத்திரம் தான் சுய பரிசோதனை மூலம் இந்நோயை அடையாளம் கண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதன் காரணத்தினால் மார்பகப் புற்று நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக மார்பங்களைச் சுயப் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட வேண்டும். இவை மிக மிக அவசியமானது.

இது மார்பகத்தில் ஏற்படக் கூடிய ஒரு நோய். அதனால் வெட்கம், கூச்ச சுபாவம் காரணமாகத் தம் மார்பகங்களைச் சுய பரிசோதனைக்கு உற்படுத்துவதை பெண்கள் தவிர்த்துக் கொள்ளக் கூடாது. இது ஆரோக்கியம் சார்ந்த விடயம். அதனால் இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 நோய் அச்சுறுத்தல்

பொதுவாக ஒரு குடும்பத்தில் தாய்க்கோ அல்லது சகோதரிக்கோ மார்பகப் புற்றுநோய் அல்லது சூழகப்புற்று நோய் ஏற்பட்டிருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய பெண்கள் மார்பகப் புற்று நோய் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு மாதவிடாயில் நீடித்த ஒழுங்கீனங்கள், பதினொரு வயதுக்கு முன்னர் பூப்பெய்திய பெண்கள், 55 வயது-க்கு பின்னர் மாதவிடாய் வட்டம் முற்று பெற்றவர்கள், தாய்மை பேறு அடையாதவர்கள், 35 வயதுக்கு பின்னர் முதலாவது பிள்ளையைப் பெற்றவர்கள், தாய்ப் பாலூட்டாதவர்கள், மருத்துவ ஆலோசனைகளின்றி ஈஸ்ட்ரஜன் அடங்கிய மாத்திரைகளை நீண்ட காலம் பாவித்தவர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் போன்றோருக்கு மார்பகப் புற்றுநோய்க்கான அச்சுறுத்தல் உள்ளது.

அதேநேரம் அதிக கொழுப்பு அடங்கிய உணவு வகைகளைத் தொடராக உட்கொள்பவர்கள், உடற்பயிற்சிகளில் ஈடுபடாவர்கள், மாதவிடாய் வட்டம் முற்று பெற்றதும் திடீரென உடல் பருமன் அதிகரித்தவர்கள், மது அருந்துபவர்கள், புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டவர்கள் போன்றோருக்கு இந்நோயின் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாகும்.

 அறிகுறிகள்

brest-cancer

என்றாலும் இந்நோய் எவருக்காவது ஏற்பட்டால் அதற்காகப் பலவித அறிகுறிகள் வெளிப்படும். அவ்வறிகுறிகளை சுய பரிசோதனைகளின் மூலம் இனம் காணக் கூடிய இருக்கும். அதாவது திடீரென மார்பகத்தின் அளவிலோ அல்லது முலைக் காம்பிலோ மாற்றங்கள் ஏற்படல், அவற்றில் சமச்சீரின்மை தோற்றம் பெறல், மார்பகத்தில் அல்லது அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படல், கட்டிகள், படர்தன்மை என்பன மார்பகத்தில் தோற்றம் பெறல், மார்பகத்தில் வழமைக்கு மாறாக உட்குழிவு காணப்படல், மார்பகத்தின் தோல் தோடம் பழத்தின் தோல் நிறத்திற்கு மாற்றமடைதல், மார்பகத் தோல் தடிப்படைதல், முலைக்காம்பு உள்நோக்கி திரும்பி இருத்தல், சிதைவடைந்து காணப்படல், முலைக்காம்பில் பாலைத் தவிர வேறு திரவம் வெளிப்படல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம்.

 சுயபரிசோதனை

அதனால் இந்நோயை உரிய முறையில் இனம் காண்பதற்காக மாதா மாதம் வெளிச்சம் மிக்க அறையில் கண்ணாடிக்கு முன்பாக அமர்ந்து மார்பங்களை பார்த்து அவதானித்தும், மல்லாந்து படுத்த நிலையில் கைவிரல்களைக் கொண்டு மார்பகங்களைப் பரீட்சித்தும் இந்நோய்க்குரிய சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். அவ்வாறான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டால் தாமதியாது மருத்துவ நிபுணரை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அது மார்பக சத்திர சிகிச்சை போன்ற பெரும் பாதிப்புக்களையோ அல்லது உயிராபத்தையோ தோற்றுவித்து விடலாம்.

ஆகவே இந்நோயின் பாதிப்புக்களை உரிய முறையில் புரிந்து கொண்டு, அப்பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் அதற்குரிய சிகிச்சையை உரிய நேர காலத்தில் பெற்று இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது மிக மிக அவசியமானது.

 நன்றி : தினகரன் (மகுடம்)

 01.10.2016

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All