Puttalam Online
health

இலங்கையில் படிப்படியாக தீவிரமடையும் எச். ஐ. வி பேராபத்து

  • 27 November 2016
  • 587 views

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

2030 ஆம் ஆண்டில் எச். ஐ. வி/ எயிட்ஸ் நோயை பூச்சிய நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் விஷேட கருத்தரங்கும், அதன் நிமித்தமான மூன்று நூல்களின் வெளியீடும் தேசிய எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ரமடா ஹோட்டலில் 2016.11.11 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால, கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலன் சிபெனலெர், சுகாதார கல்விப் பணியகப் பணிப்பாளர் டொக்டர் ஆர். டி. சி. எப். காந்தி, திட்டத்தின் சிரேஷ்ட மேக நோயியல் நிபுணர்கள் டொக்டர் பிரகீத் பிரமதாச, டொக்டர் நிரோஷா திஸாநாயக்கா, சமூக நோயியல் நிபுணர் ஜானகி விதான பத்திரன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

உலகில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பொது சுகாதாரப் பிரச்சினை என்பதையும் கடந்து சில நாடுகளில் சமுதாயப் பிரச்சினையாகவும் மாறியுள்ள நோய் தான் எச். ஐ. வி/ எயிட்ஸ். இது மனித வாழ்வுக்கே பெரும் சவாலாக விளங்கி வருகின்றது. அதனால் உலக சுகாதார ஸ்தாபனம் மூன்று பூச்சியத் திட்டத்தை உலகிற்கு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி 2030 ஆம் ஆண்டாகும் போது புதிதாக எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளாதலைத் தவிர்த்தல், எயிட்ஸ் காரணமான மரணங்களைத் தவிர்த்தல், எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளானவர்களை ஒதுக்குவதைத் தவிர்த்தல் என்பனவே அவ்விலக்குகளாகும். இவ்விலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இந்த ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதற்கேற்ப விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

stophiv

அறிமுகம்
எச். ஐ. வி என்பது ஒரு வகை வைரஸ். இது காற்றின் மூலமோ, நீரின் மூலமோ, நுளம்பு போன்றவற்றின் மூலமோ பரப்பப்படக் கூடிய ஒன்றல்ல. மாறாக பாலுறவு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், பாதுகாப்பற்ற இரத்தமேற்றல் ஆகிய வழிகளின் ஊடாகவே பரவுகின்றது. குறிப்பாக இந்திரியம், யோனி வழி திரவம், இரத்தம் ஆகியவற்றின் ஊடாகவே பரவும். எனினும் பாதுகாப்பற்றதும் தவறானதுமான பாலுறவு மூலமே இவ்வைரஸ் அதிகளவில் பரவி வருகின்றது.

அதாவது பாதுகாப்பற்ற முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்களுடன் பாலுறவில் ஈடுபடும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பல பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் ஆண்கள், பாலுறவைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பெண்கள், ஆண் – ஆண் மற்றும் பெண் – பெண் ஒரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், ஆண் – ஆண் பாலுறவிலும், ஆண் – பெண் பாலுறவிலும் ஈடுபடுவர்கள் போன்றோருக்கு இவ்வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மிக மிக அதிகம்.

இவற்றுக்கு அடுத்தபடியாகத் தான் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளான தாயிக்கு பிறக்கும் பிள்ளைக்கு இவ்வைரஸ் தொற்றுதல். எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளானவரின் இரத்தத்தை சுகதேகிக்கு வழங்குவதால் தொற்றுதல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் போது தொற்றுதல் என்பன காணப்படுகின்றன.

பொதுவாக ஒருவருக்கு இவ்வைரஸ் தொற்றினால் அதற்கான அறிகுறிகள் உடனடியாக வெளிப்படுவதில்லை. அதற்காக 02 – 07 வருடங்கள் செல்லலாம். ஏனெனில் இவ்வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியை இலக்கு வைத்து தாக்கி பலவீனப்படுத்தும் பண்பைக் கொண்டது. நோயெதிர்ப்பு சக்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அதுவே மனிதனின் உடலை நோய் நொடிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கிய கேடயமாக உள்ளது. அதாவது வைரஸ், பக்றீரியா, பங்கசு என்பவற்றுக்கு எதிராக உடலினுள் தீவிராக செயற்பட்டு அவற்றை மிகைக்க விடாது முறியடிக்கக் கூடிய பண்பைக் கொண்டதே இச்சக்தி.

இருந்தும் எச். ஐ. வி தொற்றியதும் இச்சக்தியைத் தாக்கி பலவீனப்படுத்துவதை ஆரம்பித்துவிடும், அதனால் இச்சக்தி பலவீனமடையும் போது இவ்வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படும். அதன் காரணத்தினால் தான் எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுகின்றது. ஆனாலும் இவ்வைரஸ் மரணத்தை நேரடியாக ஏற்படுத்தக் கூடியதல்ல. எனினும் அது மரணத்திற்கு இட்டுச் செல்லச் கூடிய எல்லா வகையான நோய்களுக்கும் பக்க துணையாக அமையும்.

இவ்வாறு உயிராபத்துக்கு துணைபுரியக் கூடிய இவ்வைரஸ் தொற்றைத் தவிர்த்துக் கொள்ளவென உடல் உள ஆரோக்கியத்திற்கு ஏற்ப நடத்தைக் கோலங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் இத்தொற்றுக்கு உள்ளானால் அதற்குரிய சிகிச்சை பெற்றபடி குறிக்கப்பட்ட காலம் உயிர் வாழலாம். ஆனால் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

aaa-logo-275x175

உலக நிலைமை
இருந்தும் கூட இன்று உலகில் 34 வருட கால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வைரஸ் மில்லியன் கணக்கானோருக்கு தொற்றி அவர்களில் இலட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொண்டிருக்கின்றது. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 36.7 மில்லின் பேர் அவ்வைரஸுடன் உயிர் வாழ்வதாக மதிப்பிடப்பட்டது. அப்படியிருந்தும் 2015 இல் 2.1 மில்லியன் பேர் இவ்வைரஸ் தொற்றுக்குப் புதிதாக உள்ளாகினர்.

இவ்வைரஸ் தொற்றை வருடாந்த அடிப்படையில் எடுத்து நோக்கும் போது 2010 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் பேருக்கு தொற்றிய இவ்வைரஸ், 2015 ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் பேருக்கே தொற்றியது. இதன்படி இவ்வைரஸ் தொற்று குறைவடைந்து வருகின்றது. அதாவது இவ்வைரஸ் தொற்றுக்கு புதிதாக உள்ளாகின்றவர்களில் 6 வீத வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. என்றாலும் இது உலகின் எல்லாப் பிராந்தியங்களிலும் 5 வீத வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில்
இச்சூழலில் இலங்கை நிலைமையை எடுத்துப் பார்த்தால், உலகில் எச். ஐ. வி தொற்று குறைந்த நாடு தான் இது. இத்தொற்றுக்கு உள்ளான நபர் இந்நாட்டில் இனம் காணப்பட்டது முதல் 2015 ஆம் ஆண்டு வரையும் 4100 பேர் இத்தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையும் 2502 பேர் தான் பாலுறவு தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் பதிவாகியுள்ளனர்.

அத்தோடு இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடா வருடம் குறைவடைந்து வருகின்ற அதேநேரம், இலங்கையில் இத்தொற்றுக்கு புதிதாக உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உலகில் 6 வீத வீழ்ச்சியை அவதானிக்கின்ற போதிலும், இலங்கையில் 94 வீத அதிகரிப்பை 2015 ஆம் ஆண்டுடன் 2010 ஆம் ஆண்டு பதிவை ஒப்பிடும் போது காணக் கூடியதாகவுள்ளது.

இந்நாட்டில் முதலாவது எச். ஐ. வி தொற்றாளர் 1986 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டார். அன்று தொடக்கம் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை மெதுமெதுவாகவே அதிகரித்து வருகின்றது. இதற்கு இத்தொற்றை தவிர்த்து கொள்வது தொடர்பானவிழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் பெரிதும் உதவியுள்ளன. இதன் பயனாக இத்தொற்று தொடர்பான இரத்த பரிசோதனைகளும் அதிகரித்துள்ளன. அந்தவகையில் 2015 அம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 0.03 வீதமான எச். ஐ. வி தொற்றாளர்களை அடையாளம் காண முடிந்துள்ளது.

அதேநேரம் இவ்வைரஸ் தொற்றுக்கு நாட்டின் எல்லாப் பிரசேதசங்களிலும் காணப்படுகின்றது. என்றாலும் இவர்களில் 56 வீதத்தினர் மேல் மாகாணத்தில் தான் உள்ளது.. என்றாலும் இந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு ஆண் பெண் பாலுறவு மூலமே இத்தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் 8 வீதமானோருக்கு ஆண் ஆண் பாலுறவு மூலமும், 11 வீதமானோருக்கு ஆண் பெண் மற்றும் ஆண் – ஆண் பாலுறவின் மூலமும் தொற்றியுள்ளது.

இதேவேளை 2003 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் இந்நோய் தொற்றிய விதம் தொடர்பான பதிவை நோக்கும் போது ஆண் – ஆண் பாலுறவு மூலமான தொற்று ஒவ்வொரு வருடமும் மெது மெதுவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களில் 75% பாலியலில் செலூக்கம் மிக்க வயது மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 24 – 49 இடைப்பட்ட வயது மட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அத்தோடு 15 – 24 வயது மட்டத்தைச் சேர்ந்தவர்கள் 07 வீதமானோர் இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வயது மட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2003 முதல் 2015 வரையும் இத்தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்களவில் ஒரே மட்டத்தில் அதிகரித்து வந்துள்ளது.

அதேநேரம் இந்நாட்டில் 2502 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ள போதிலும் இவர்களில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர் தேசிய பாலுறவு தொற்று நோய்கள் மற்றும் எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். அப்படியென்றால் எஞ்சிய சுமார் ஆயிரம் எச். ஐ. வி தொற்றாளர்களின் நிலைமை என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து இவ்வைரஸைப் பரப்பலாம் என்ற அச்சமும் எழுந்தள்ளது.

ஆகவே தம் ஆரோக்கிய வாழ்வைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்பின் அறிமுகமற்றவர்களுடனும், ஏனையவர்களுடனும் தவறானதும் பாதுகாப்பற்றதுமான பாலுறவு செயற்பாடுகளையும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும், பாதுகாப்பற்ற இரத்தமேற்றலையும் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.

நன்றி : தினகரன் (மகுடம்)
19.11.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All