Puttalam Online
health

அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதி – பிரசவ ​வேளையில் கர்ப்பிணிக்கருகில் உதவிக்கான பெண்…

  • 2 December 2016
  • 1,642 views

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

ஒரு நாட்டில் தாய் சேய் மருத்துவ சேவையும் பராமரிப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கும் போது அந்நாட்டில் தாய் சேய் மரண வீதமும் குறைவடைந்தே காணப்படும். அந்தவகையில் இலங்கையில் கர்ப்ப கால மற்றும் பிள்ளை பிறப்புடன் தொடர்பான பிரசவ மரணங்கள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. இதற்கு இந்நாட்டு அரசாங்க மருத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சியே முக்கிய காரணமாகும். ஆனாலும் கடந்த 08 வருடங்களாக பிரசவ கால மரணங்கள் தொடர்ந்தும் குறைவடையாமல் ஒரே இடத்தில் தான் உள்ளது. இது தொடர்பில் இந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் விஷேட கவனம் செலுத்தியுள்ளனர்.

சுகாதாரக் கல்விப் பணியகத்தில் பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் குறித்த இலங்கை மருத்தவ நிபணர்களின் சங்கம் (Perinatal Society of Sri Lanka) அண்மையில் (03.11.2016) நடாத்திய விஷேட கருத்தரங்கில் இது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.   

ad_157388046-e1421856121747அந்தவகையில் கர்ப்ப கால மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான மருத்துவ மற்றும் பராமரிப்பு சேவையையும் அதன் தரத்தையும்  மேலும் மேம்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டிருப்பது தெளிவாகின்றது.  ஏனெனில் ஒரு பெண் கருத்தரித்தது முதல் குழந்தையைப் பிரசவிக்கும் வரையிலான ஒன்பது மாதங்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் தம் கருப்பையில்  பிள்ளையைச் சுமக்கின்றனர். இவ்வாறான நிலையில் எந்தவொரு கர்ப்பிணிப் பெண்ணும் பிரசவ காலத்தில் துரதிஷ்டகர நிலைமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு சிறுதளவேனும் விரும்புவதில்லை.

main_shutterstock_139945285_resizedஇருந்தும் இந்நாட்டில் தற்போது ஒரு இலட்சம் குழந்தைகள் பிற்க்கும் போது 1300 தாய்மார் அதாவது 33.7 வீதமானோர் பிரசவ காலத்தில் மரணமடைகின்றனர் என்று பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் குறித்த இலங்கை மருத்தவ நிபணர்களின் சங்கத்தின் தலைவர் சமூக மருத்துவ நிபுணர் கபில ஜயரட்ன தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் வருடா வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கருப்பையிலேயே இறந்து பிறப்பதையும் அவர் சுட்டிகாட்டத் தவறவில்லை.

அதேநேரம்  இந்நாட்டில் சிசு மரண வீதம் சுமார் 8 வீதம் வரை வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. என்றாலும் இந்நாட்டில் உயிரிழக்கின்ற குழந்தைகளில் 40 வீதமானவை பிறந்த முதல் நாளிலேயே மரணமடைவதாகவும் மருத்துவ நிபுணர் கபில ஜயரட்ன குறிப்பிட்டிருக்கின்றார்.

labour-roomஇவ்வகை மரணங்களை மேலும் குறைப்பது தொடர்பில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபணர்கள், சிறுவர் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட துறைசார் மருத்துவ நிபுணர்கள் பரந்தவடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இவ்வாறான பின்புலத்தில் தான் இந்நாட்டு அரசாங்க வைத்தியசாலைகளில் பிரசவத்திற்காக பிரசவ அறையில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அருகில் உதவிக்காக பெண்மணியொருவர்  இருப்பதற்கு  அனுமதி வழங்கப்பட விருக்கின்றது. இவ்வாறான ஏற்பாடு வளர்ச்சியடைந்த பல நாடுகளில் காணப்படுகின்றது. அதிலும் சில நாடுகளில் பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்ணுடன் அவரது கணவரும் உதவிக்காக அருகில்  இருப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இலங்கையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின்  பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்மணியுடன் அவரது கணவரும் உதவிக்கு இருப்பதற்கு அனுமதி வழங்க இப்போதைக்கு வசதி கிடையாது. ஏனெனில் அரசாங்க வைத்தியசாலைகளின் பிரசவ அறைகள் தனித்தனி அறைகளாக இல்லை. அதன் காரணத்தினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு அருகில் உதவிக்காக பெண்மணியொருவர் இருப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ பீட பேராசியர் ஹேமந்த சேனநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.

மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டு வந்த நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கர்ப்பிணி பெண்மணிக்கு அருகில் பிரசவ அறையில் பெண்ணொருவர் உதவிக்கு இருக்கும் போது பலவித நன்மைகள் கிடைக்கப் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் பிரதான நன்மை தான் கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது உணரும் பிரசவ வேதனை குறைவடைந்து காணப்படுவதாகும்.

அத்தோடு பிரசவ அறையில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட வேண்டிய வலி நிவாரண மாத்திரைகளின் அளவும் குறைவடையும். அதேநேரம் பிரசவம் வேகமாக இடம்பெறும். மேலும் சிசேரியன் இல்லாத சாதாரண பிரசவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் மிக அதிகம். குறிப்பாக இப்பெண்களிடம் தம் பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டும் தடவைகளும் அதிகரிக்கும். பிரசவம் தொடர்பான தாயின் மனப்பான்மையிலும் சாதக நிலைமை ஏற்படும் என்பனவும் மருத்துவ நிபுணர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் இந்நாட்டின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணர்களும் விரிவான அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். அத்தோடு உலகின் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படியும் இது மிகச் சிறந்த ஏற்பாடு எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தான் 2008 ஆம் ஆண்டு முதல் கொழும்பு  டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில் பிரசவ அறையில் கர்ப்பிணிக்கு அருகில் பெண் உதவியாளர் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்  இந்நாட்டு சுகாதார மூலோபாயக் கொள்கையில் 2011 ஆம் ஆண்டு முதல் பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்மணிக்கு அருகில் பெண் உதவியாளரை அனுமதிக்க வேண்டிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தடிப்படையில் ஒரிரு  வைத்தியசாலைகளில் இதற்கு இடமளிக்கப்படுகின்றது.

labor_delivery_roomஎன்றாலும் பிரசவ அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அருகில் உதவியாளராகப் பெண்மணியொருவர் இருப்பதற்கு சட்டத்தில் கட்டுப்பாடோ தடையோ கிடையாது. எந்தவொரு பெண்ணும் உதவியாளராக இருக்கலாம். ஆனாலும்  தாய்மார் தான் பெரும்பாலும் உதவியாளராக வருகின்றனர். இது பெரிதும் வரவேற்கத் தக்க ஏற்பாடு.

ஏனெனில் சில வைத்தியசாலைகளின் பிரசவ அறைகளில் கடமையாற்றும் தாதியர் உள்ளிட்ட குடும்ப சுகாதாரத்துறை ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணோடும், பிறக்கும் குழந்தைகளோடும் பிழையான முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்து ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவ்வாறான ஏற்பாடுகளின் மூலம் கர்ப்பிணி தாயும் பிறக்கும் குழந்தைகளும் பலவித அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிரக்க கூடியதாக இருக்கும்.

அதன் காரணத்தினால் தான்  மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறையில் பணியாற்றும் டொக்டர்கள் தாதியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கர்ப்ப கால மற்றும் பிள்ளைப் பிறப்புடன் தொடர்பான பிரசவ மரணங்களை மேலும் குறைப்பதற்கு ஏற்ற வகையிலான பயிற்சிகளை அளிக்கப்பதற்கும் பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் குறித்த மருத்துவ நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.

மருத்துவ ரீதியிலான ஆய்வுகளின்படி தாய், சேய் மரணங்களை இந்நாட்டில் மேலும் குறைப்பதற்கு இவ்வேற்பாடு பெரிதும் உதவும் என்பது உறுதி.

நன்றி தினகரன்

22.11.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All