Puttalam Online
health

நீரிழிவு நோய் – மக்களை சூழ்ந்துள்ள தவறான நம்பிக்கைகள்

  • 2 December 2016
  • 775 views

மர்லின் மரிக்கார்

உலக நீரிழிவு தினத்தின் நிமித்தம் சுகாதார கல்விப் பணியகம் 2016.11.11 அன்று ஒழுங்கு செய்த விஷேட செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த. சுகாதார அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு பிரிவின் சமூக நோயியல் நிபுணர் திருமதி வெர்ஜினி மல்லவராச்சி ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

fruits-for-diabetics

இலங்கையில் பெரும் ஆரோக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நோய்களில் நீரிழிவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தொற்றா நோய்களின் இனம் காணப்படாத வகையைச் சேர்ந்த ஒன்று என்றாலும் இன்றைய காலகட்டத்தில் இது மனித ஆரோக்கியத்திற்கு கடும் சவாலாகத் திகழுகின்றது.

என்றாலும், இந்நோயை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும். இந்நோய்க்கு உள்ளானால் சிகிச்சை மூலம் நோயைக் கட்டுப்படுத்தியபடி வாழவும் முடியும். ஆனால் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்துவது சிரம சாத்தியமான காரியம்.

இருந்தபோதிலும் இந்நோய் தொடர்பிலும் இந்நோய்க்கான சிகிச்சைகள் குறித்தும் மக்கள் மத்தியில் பலவித தவறான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவை இந்நோய் தீவிரமடையவும் உடல் அவயவங்கள் பாதிக்கப்படவும் மாத்திரமல்லாமல் உயிரிழப்பு வரை செல்லவும் துணைபுரிவதும் அவதானிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணத்தினால் நீரிழிவு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகளைக் களைவது காலத்தின் அவசியத் தேவை என்று வலியுறுத்தியுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த இந்நோயை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு உள்ளிட்ட நடத்தை பழக்கவழக்கம் பெரிதும் உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Diabetes treatment

அது தான் உண்மையும் கூட. இந்நாட்டில் நீரிழிவு நோய் ஆரம்பத்தில் நகரப் பிரதேசங்களில் தான் இனம் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக 1994இல் 2 வீதத்தினரே இந்நோய்க்கு உள்ளானவர்களாக இருந்தனர். ஆனால் இது கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதோடு கிராமப் பிரதேசங்களுக்கும் வியாபித்துள்ளது. இன்று நகரப் பிரதேசங்களில் வசிப்பவர்களில் 14 – 15 வீதத்தினர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் நகரப் பிரதேசங்களில் இனம் காணப்பட்ட போதிலும் கிராமப் பிரதேசங்களில் இந்நோயை அவதானிக்கக் கிடைக்கவில்லை. அதனால் கிராம மக்களின் வாழ்க்கை முறையே நீரிழிவுக்கு நல்ல தீர்வாகக் கருதப்பட்டது. அதனால் கிராம மக்களைப் போன்று உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டால் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர். ஆனால் அந்த நம்பிக்கை இப்போது பலமிழந்து விட்டது. ஏனெனில் தேவைக்கு ஏற்ப வேளா வேளைக்கு உணவு உட்கொள்ள வேண்டும். அதுவே மிகவும் முக்கியமானது என்பது இன்று தெளிவாகியுள்ளது.

குரக்கன், சிகப்பரிசி போன்றவை நீரிழவு நோயைக் கட்டுப்படுத்த உதவக் கூடியவை தான். அதற்காக உண்ண வேண்டிய அளவைக் கவனத்தில் கொள்ளாது அன்றாடம் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகப்பானதல்ல. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் நாளாந்தம் தேவைப்படும் கலோரி அளவு காணப்படுகின்றது. அந்த அளவுக்கு மேற்பட்ட கலோரி உடலில் சேரும். அது தான் இன்று நடந்திருக்கின்றது.

உதாரணத்திற்கு இலங்கையரின் உணவில் பிரதானமாகக் காணப்படும் பருப்பை எடுத்துப் பார்த்தால் அதில் 90 வீதம் காபோஹைதரேட்டு காணப்படுகின்றது. அந்தவகையில் இந்நாட்டினர் உண்ணும் உணவு வகைகளின் ஒட்டு மொத்த கலோரி பெறுமானத்தை நோக்கினால் ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு தேவையான கலோரி பெறுமானத்தை விடவும் மூன்று மடங்கு கலோரி பெருமானம் இப்போது உடலில் சேர்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

ஒரு பிஸ்கட்டை எடுத்துப் பார்த்தால் அதில் கூட சுமார் 10 கலோரி உள்ளது. சில பிஸ்கட்களில் சீனி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றில் காபோஹைதரேட் இருப்பதை மறந்து விட முடியாது. ஒரு ஆனை வாழைப்பழத்தில் 120 கலோரி உள்ளது. ஒரு கிளாஸ் இலைக்கஞ்சியில் அதற்கு சேர்க்கப்படும் தேங்காய்ப்பாலுக்கு ஏற்ப 100 கலோரி காணப்படுகின்றது. இவை இன்றைய நவீன வாழ்க்கை அமைப்புக்கு ஏற்றதல்ல.

ஆனால் அன்று கிராம மக்கள் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டனர். அதனால் அவர்களது உணவில் காணப்பட்ட கலோரி தகனமடைவது இலகுவான காரியமாக இருந்தது. இப்போது அவ்வாறான நிலைமை. இல்லை. அதன் காரணத்தினால் நவீன வாழ்வமைப்புக்கு ஏற்ப உணவு பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

அதேநேரம் நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் கலோரி அதிகமுள்ள பழங்களை உண்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மாம்பழம், வாழைப்பழம், பப்பாசி போன்ற பழங்களில் குளுக்கோஸ் மிக அதிகம் அவற்றை உண்ணும் போதும் குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிக்கலாம். ஆனால் குளுக்கோஸ் மட்டம் குறைந்த பழங்கள் கிராமப் புறங்களில் போதியளவில் காணப்படுகின்றன. அவற்றில் நெல்லிக்காய், வெரலிக்காய், அம்பரல்லா போன்றன குறிப்பிடத்தக்கவை. வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஒலிவ் மிகவும் பிரபல்யமானது. குறிப்பாக பச்சை நிறப் பழங்கள் இந்நோயாளர்களுக்கு உகப்பானது. அதனால் அவற்றை நுகருவதற்கு அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் உடல் மெலியவென செவ்விளநீர், வாற்கோதுமை (பார்லி) பருகினால் நல்லது என்ற தவறான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அவற்றிலும் குளுக்கோஸ் அதிகமுள்ளது என்பதை மறந்து விடலாகாது.

இவற்றைவிடவும் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகளில் நீரிழிவு நோய்க்கான மருந்து பொருட்கள் தொடர்பானவை பிரதான இடத்தைப் பெற்றுள்ளன.

இந்நம்பிக்கைகளால் பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் மருந்துப் பொருட்களை உரிய அளவில் வேளாவேளைக்கு பயன்படுத்துவதைக் கூட தவிர்த்துக் கொள்கின்றனர். இது தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதன் வெளிப்பாடாகும். ஆனால் இந்நம்பிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை.

அதாவது நீண்ட காலம் நீரிழிவு நோய்க்கு மருந்து பாவிக்கும் போது சிறுநீரகம் பாதிக்கப்படும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனை சிலர் மருத்துவர்களிடமே வினவுகின்றனர். சிறுநீரகமானது நீரிழிவு காரணமாகப் பாதிக்கப்படுமேயொழிய அந்நோய்க்காகப் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களால் அல்ல.

நீரிழிவினால் சிறுநீரகம், நரம்பு தொகுதி, ஈரல், கண் உள்ளிட்ட அவயவங்கள் பாதிக்கப்படுவதைக் குறைப்பதைக் கருத்தில் கொண்டு தான் இந்நோய்க்கான மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில சமயம் புற்றுநோய்க்கான ஒரிரு வலி நிவாரண மாத்திரைகள் சிறுநீரகத்தைப் பாதித்தாலும், நீரிழிவு நோய்க்கான மருந்துப்பொருட்கள் எதுவும் சிறிதளவேனும் சிறுநீரகத்தைப் பாதிக்காது. இம்மாத்திரைகளின் பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு தான் டொக்டர்களும் சிபாரிசு செய்கின்றனர்.

இதேவேளை செயற்கை இன்சுலின் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றது என்றும் ஒரு தவறான நம்பிக்கை காணப்படுகின்றது. அதுவும் முற்றிலும் தவறானது. இன்சுலின் சீராக செயற்பட்டால் நீரிழிவும் ஏற்படாது சிறுநீரகமும் பாதிப்படையாது. உணவில் சமநிலையைப் பேணாவிட்டால் இன்சுலின் உரிய முறையில் செயற்படாத நிலை ஏற்பட்டு உடலில் குளுக்கோஸ் குறைவடைவதோடு உடல் நிறையும் அதிகரிக்க முடியும்.

மேலும் நீரிழிவுக்கு பாவிக்கப்படும் மெட்போமின் மருந்து நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகம் தொடர்பில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்குமேயொழிய உயிரிழப்பையோ அவயவங்களில் பாதிப்பையோ ஏற்படுத்தாது. அதேநேரம் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் உடல் அவயவங்களைப் பாதிக்கக் கூடியவை என்றிருந்தால் அவற்றை வழங்கவென வருடா வருடம் கோடிக்கணக்கில் அரசாங்கம் செலவிடுமா என்பதையும் ஒரு தரம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான தவறான நம்பிக்கைகளால் தான் இந்நாட்டில் நீரிழிவுக்கு உள்ளாகியுள்ளவர்கள் அதிகளவில் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். அதனால் இயந்திரமயமான சமூக அமைப்பில் வாழும் நீரிழவு நோயாளர்கள் அவ்வப்போது மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது.

ஆகவே தவறான நம்பிக்கைகளை மக்கள் மத்தியிலிருந்து முற்றாகக் களைந்து வாழ்க்கை முறையை ஆரோக்கியத்திற்கு உகப்பாக அமைத்து தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டால் நீரிழிவை கட்டுப்படுத்தி கொள்ளலாம்.

நன்றி : தினகரன் (மகுடம்)
26.11.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All