Puttalam Online
historical-notes

கால தேச வர்தமானங்களுக்கு விட்டுக் கொடுக்காத “அள்ளிவுட்டான் அப்பாவின் கடைத் தொகுதி”

Newton Isaac 

மாட்ர்டின் விக்ரம சிங்ஹ அவர்களின் “கம்பெரளிய” நாவலை படித்து தசாப்தங்கள் சில கழிந்துவிட்டன. ஆயினும் நமது நகரத்துப் பாதைகளில் மாலை நேரங்களில் Cycling செய்யும் போதெல்லாம் “கம் பெரளிய” என்ற மாற்றத்துக்கு நமது நகரமும் உட்பட்டு வருகிறதா எனக் கண்கள் தேடும்.

15590399_1867004553545287_4983575298702310582_n

மாற்றங்கள் இல்லை என்ற அளவுக்கு சில காலம் மாற்றங்கள் மெதுவாக நடந்தன. ஆனால் இப்போதெல்லாம் எங்காவது ஒரு கட்டிடம் எழுகிறது என்றால் அது ஒரு அல்லது இரண்டு, மூன்று மாடியாகவும் இருக்கும். அதன் மேல் ”தெவி பிஹிடய்” எனவும் ”மாஷா அல்லாஹ்” எனவும் போர்டுகளும் கட்டாயம் தொங்கும்.

ஆனால் கால தேச வர்தமானங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டாது மாறிக் கொள்ளாமல் இருக்கும் கட்டிடங்களைக் காணும்போது அவை பழைய என்ணங்களைச் சுண்டி இழுத்து உடல் முழுக்க மயிரக்கூர்செறிய வைக்கின்றன? நேற்று மாலை கண்ணில் தைத்த “அள்ளிவுட்டான் அப்பாவின் கடைத் தொகுதி” அதைத்தான் எனக்கு மீண்டும் நினைவூட்டியது.

பட்டப் பெயர் பொருட் கோடல்
==========================
ஆளையாள், குடும்பத்துக்குக் குடும்பம் இனங்காண அந்த நாட்களில் உதவிய பட்டப் பெயர்களில்  “அள்ளிவுட்டான்” என்பதும் ஒரு தனித்துவமான ஒன்று. ”அள்ளி உட்டான்” என்ற பட்டப் பெயர் கொண்ட சேகு அப்துல் காதர் முகம்மது சாலிஹு அவர்களின் கடை வரிசை செட்டித் தெரு என முன்னர் அழைக்கப்பட்டு பின்னர் டாக்டர் இல்யாசால் ”பைத்துல் முகத்தஸ் வீதி” என பெயர் மாற்ற முயச்சிக்கப்பட்டு பின்னர் அது முன்னாள் அமைச்சர் மர்ஹும் நயினா மரிக்காரால் கிண்டல் செய்யப்பட்டு அவரால் தன்னிச்சையாக ”மஸ்ஜித் வீதி” என்று பெயர் சூட்டப்பட்ட வீதியில் சிம்கோ கட்டிடத்துக்கு முன்பாக அமைந்துள்ள 04 கடைகளைக் கொண்ட தொகுதி கால மாற்றத்துக்கு இரையாகாமல் இன்னும் அப்படியே நிலைத்திருக்கிறது. ஆர்வம் இருந்தால் ஒரு நடை நடந்து அந்தப் பக்கமாகப் போய் பாருங்கள். அதுதான் “அள்ளி உட்டான் அப்பாவின் கடைத் தொகுதி”.

அள்ளி உட்டான் என்பது பட்டப் பெயர் என்பதை விட காரணப் பெயர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்திலே ஒரு வகை இனிப்புப் பதார்த்தங்களுக்கு “முட்டாசி” என்று நாங்கள் சொல்வோம். உரித்துப் பிரித்தெடுத்த தோடம் பழ இதழ் போல இருக்கும். இலேசான புளிப்புக் கலந்த இனிப்பாக இருக்கும். ”தோடங்கா முட்டாசி”, ”பல்லி முட்டாசி” இப்படியான வகையறாக்கள் இருக்கும். ”லொசிஞ்ஜர்” என்றும் சொல்வாரகள். இவைகளெல்லாம் வாழ்வில் அரைச்சதம் அடித்தவர்களுக்குத்தான் நன்கு புரியும். இளம் தலை முறையினருக்கு utter boring ஆகவும் இருக்கலாம்.

அள்ளி உட்டான் அப்பாவின் கடைப் படியில் ஏறி இரண்டு சதத்தைக் கொடுத்து ”முட்டாசி தாங்க அப்பா” என்று கேட்டால் அகல வாய் முட்டாசி போத்த‌லைத் திறந்து தனது விரிந்த கையை உள்ளே விட்டு அப்படியே குடைந்து கை நிறைய முட்டாசிகளை அள்ளி உட்டான் அப்பா அள்ளி எடுக்கும் பாங்கைப் பார்த்து நமக்கு கை நிறைய கிடைக்கப் போகிறது என்று அன்றைய சிறுசுகள் ஏமாற மாட்டார்கள். ஏனெனில் அள்ளிய அத்தனையையும் போத்தலுக்குள் சொரிய விட்டு இரண்டு அல்லது மூன்று முட்டாசிகளை எடுத்துத் தருவதால்தான் இந்த ”அள்ளிவுட்டான்” என்ற காரணப் பெயர் பிறந்தது. சேகு அப்துல் காதர் முகம்மது சாலிஹு என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் அள்ளிஉட்டான் அப்பா என்ற மேதா விலாசம்தான் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானது.

வாழ்வுச் சுருக்கம்
+++++++++++++++++++++
ஆனாகவும், பெண்ணாகவும் ”அள்ளிவுட்டான் அப்பாவுக்கு” 15 பிள்ளைகள். மதிப்புக்குரிய அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களும், ஆங்கில ஆசிரியர் பீ.எம். ரிஸ்வானும், ஆசிரியை ரிசானாவும் அள்ளிவுட்டான் அப்பாவின் இரண்டாம் தலை முறை வருகைகள்.

அந்த நாட்களிலே தலை முறை வருகையை ”பிச்சடங்கள்” என்பார்கள். அந்த பிச்சடங்கள் இப்போது வேர்விட்டு, கிளைபரப்பி, படர்ந்து வளர்ந்து கணிப்புக்கு அப்பாற் பட்டு நிற்பதால் எத்தனை என எண்ணிக் கணக்கெடுக்கும் ”மெனக்கெட்ட” வேலையைத் தவிர்த்துக் கொள்கிறோம்.

பார்தாவுக் கேற்ற பரிவிரதையாய் துணைவி அமையவில்லைபோலும். திருமண ஒப்பந்தத்தை அள்ளிவுட்டான் அப்பா தம்பதிகள் வெட்டிப் பிரிந்தபோது 04 ஆண்கள் வாப்போவோடு நிற்க 11 பேர் தாயோடு சென்று விட்டார்கள்.

தாயுடன் போகாது தன்னுடன் நின்ற பிள்ளைகள் விடயத்திலும் அப்பா நியாயமாக நடந்து கொள்ள விலை பேலத்தான் தெரிகிறது. பேத்தி ரிசானா டீச்சரால் பாதுகாத்து வரப்படும் அப்பாவின் உயில் இதை உறுதி படுத்துகிறது.

தனக்குள்ள 04 கடைகளுக்கும், நகரில் ஆங்காங்கு இருந்த ஓரிரு காணிகளுக்கும் அப்பா உயில் எழுதி வைத்திருக்கிறார். அந்த உயில் அப்பாவின் சொத்துக்களில் சிங்கத்தின் பங்கு (Lion’s Share) கடைக்குட்டிக்குத்தான் சொந்தம் எனப் பேசுகிறது.


One thought on “கால தேச வர்தமானங்களுக்கு விட்டுக் கொடுக்காத “அள்ளிவுட்டான் அப்பாவின் கடைத் தொகுதி”

  1. rifan says:

    நல்லதாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியிலே கழுவி ஊத்திட்டிங்களே பாஸ்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All