Puttalam Online
health

கர்ப்பகால அவதானிப்பில் கூடுதல் கரிசனையின் அவசியம்

  • 30 December 2016
  • 350 views

மர்லின் மரிக்கார்

தென்னாசியப் பிராந்தியத்தில் தாய் சேய் ஆரோக்கிய சேவை மிகச் சிறப்பாக காணப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் பயனாக இந்நாட்டில் தாய் சேய் மரணம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது.

pregnancy

‘இந்நாட்டில் வருடமொன்றுக்கு 335,000 பிரசவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது 33.7 வீதமான தாய்மார் தான் பிரசவ காலத்தில் மரணிக்கின்றனர். அதேநேரம், ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது 13 குழந்தைகள் உயிரிழக்கின்றன’ என்று சமூக நோயியல் நிபுணர் கபில ஜயரட்ன சுகாதார கல்விப் பணியகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கருத்தரங்கின் போது தெரிவித்திருக்கின்றார்.

எனினும் வருடமொன்றுக்கு சுமார் 1300 சிசுக்கள் பிரசவத்திற்கு முன்பே கருப்பையில் இறந்த நிலையில் பிறப்பதையும் மறந்து விடலாகாது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இவ்வகை உயிரிழப்புக்களை சர்வதேச மட்டத்திலும் பிராந்தியத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது நான்கு சிசுக்கள் தான் இந்நாட்டில் இவ்வாறு பிறக்கின்றன. இது ஏனைய நாடுகளை விட மிகவும் நிலைமை’ என்றும் அவர் சுட்டிக்’காட்டி இருக்கின்றார்.

என்றாலும் தாய் சேய் மரணம் மற்றும் பிரசவத்திற்கு முன்பே கருப்பையில் இறந்து பிறத்தல் என்பவற்றை மேலும் குறைப்பது குறித்து பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் தொடர்பான இலங்கை மருத்துவ நிபுணர்களின் சங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. ‘இவ்விடயங்கள் தொடர்பில் நாம் ஏழு எட்டு வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்’ என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பெறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ பீடப் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்கா குறிப்பிட்டிருக்கின்றார்.

கருத்தரிப்பு என்பது ஒவ்வொரு தம்பதியினரதும் வாழ்வில் மிக அற்புதமான வாய்ப்பாகும். இந்த அற்புத வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் பெண்களில் சிலருக்கு அவர்கள் எதிர்பாராமலேயே கருப்ப காலம் முழுமையடைவதற்குள் சிசுக்கள் உயிரிழக்கின்றன. ஆனால் இதற்கான காரணங்கள் என்ன? இவ்வித உயிரிழப்புக்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன? இவற்றை எவ்வாறு குறைக்கவோ தவிர்த்துக் கொள்ளவோ முடியும்? என்பன குறித்து கவனம் செலுத்தப்படுகின்றன.

ஆனால் கர்ப்பிணி பெண்களதும், அவர்களது கருப்பையில் வளரும் சிசுக்களதும் ஆரோக்கியம் தொடர்பில் செலுத்தப்பட்டுவரும் கவனம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் பிரசவத்திற்கு முன்பே இடம்பெறும் சிசு மரணங்களை மேலும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ நிபுணர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஏனெனில் பிரசவத்திற்கு முன்னர் கருப்பையில் இடம்பெறும் சிசு மரணங்கள் இரு விதமாக ஏற்படுகின்றன. பொதுவாக ஒரு சிசு கருத்தரித்தது முதல் 40 வாரங்களில் கர்ப்ப கால வாழ்வை பூர்த்தி செய்து அதாவது ஒன்பது மாதங்களில் குழந்தையாகப் பிறக்கின்றது. என்றாலும் சில கருக்கள் கருத்தரித்தது முதல் 28 வாரங்களுக்கு முன்பே அதாவது ஏழு மாதங்களுக்கு முன்னரான முன்முதிர்வு காலத்திலேயே இயல்பாகக் கலைந்து விடுகிறது.

இன்னும் சில சிசுக்கள் 28 வாரங்கள் கடந்த பின்னர் பிரசவத்திற்கு முன்னர் கருப்பையில் உயிரிழந்த நிலையில் பிறக்கின்றன. இவ்வாறான மரணங்களுக்கு சுமார் 1300 சிசுக்கள் வருடாந்தம் முகம் கொடுக்கின்றன.

ஆனால் எந்தவொரு சிசுவும் உயிரிழப்பதை எந்தத் தாயுமே விரும்புவதில்லை. இருந்தும் சிசுக்கள் உயிரிழக்கவே செய்கின்றன. இதற்கு பல காரணிகள் துணைபுரிகின்றன.

குறிப்பாக கருப்பபையில் இருக்கும் சிசுவுக்கு தேவையாக அத்தியாவசிய பதார்த்தங்கள் தொப்புள் கொடி ஊடாகவே கிடைக்கப் பெறுகின்றது. இத்தொப்புள் கொடி சூழ்வித்தின் மூலமே தாயிலிருந்து இரத்தத்தைப் பெறுகின்றது. ஆனால் இச்சூழ்வித்து கருப்பையில் ஒட்டியபடி இருந்தே சிசுவுக்குத் தேவையான பதார்த்தங்களைப் பெற்றுக் கொடுக்கின்றது. பொதுவாக இந்த சூழ்வித்து குழந்தை பிறந்த பின்பே கருப்பையிருந்து பிரிவடையும். சில சந்தர்ப்பங்களில் இது குழந்தை பிறப்பதற்கு முன்பே பிரிந்துவிடலாம். அதனால் குழந்தை பிரசவத்திற்கு முன்பே கருப்பையில் உயிரிழக்கலாம்.

அதேநேரம் இத்தொப்புள் கொடி சில சந்தர்ப்பங்களில் சிசுவின் கழுத்தில் சுற்றிக் கொள்ளலாம். அது குழந்தையின் கழுத்தில் இறுகும் நிலையை ஏற்படுத்துமாயின் அப்பகுதி ஊடான இரத்தவோட்டம் பாதிக்கப்படும். இதன் விளைவாகவும் உயிரிழப்பு ஏற்படலாம்.

மேலும் கருப்பையில் வளரும் சிசு போதிய வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளாத போதிலும் பிறப்பதற்கு முன்பே உயிரிழக்கலாம் அல்லது சிசுவின் உடலில் பிறவியிலேயே குறைபாடுகள் காணப்படுமாயின் அதனாலும் கருப்பையினுள்ளேயே உயிரிழப்பு நேரிடலாம்.

இவ்வாறான காரணங்களினால் பிரசவத்திற்கு முன்பே சிசுக்கள் கருப்பையினுள் இறந்து பிறந்தாலும் சில குழந்தைகள் எவ்வித காரணங்களும் இன்றி பிரசவத்திற்கு முன்னர் கருப்பையினுள் உயிரிழப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனால் இப்படியான பிரச்சினைகளுக்கு எவ்வகையான தாய்மாரின் சிசுக்கள் முகம் கொடுக்கின்றன? அவற்றை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்றவாறான வினாக்களும் எழவே செய்கின்றன. அவை நியாயமான வினாக்களே.

அதாவது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், நீரிழிவு நோய்க்கு உள்ளான பெண்கள், உயர் இரத்த அழுத்தம் கொண்ட பெண்கள், போஷாக்கின்மைக்கு உள்ளான பெண்கள், மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் போன்றோருக்கு கருப்பையிலேயே சிசு இறந்து பிறப்பதற்கான அச்சுறுத்தல் அதிகமாகும்.

என்றாலும் இப்பிரச்சினைகளை முழுமையாகத் தவிர்க்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாவிட்டாலும் இவ்வாறான பிர்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் கர்ப்பிணித் தாய்மார் தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கருப்பையில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கிய நிலைமை என்பன குறித்தும் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

அதேநேரம் நீரிழிவு மற்றும் உயர் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்ட தினத்திற்கு இரண்டொரு வாரங்களுக்கு முன்பே குழந்தையைப் பிரசவிப்பது தொடர்பிலும் மருத்தவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். ஏனெனில் இவ்வாறான தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னரே திடீரென சிசு கருப்பையில் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஆகவே குழந்தைகள் பிரசவத்திற்கு முன்பே உயிரிழந்து பிறப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும், அதனைக் குறைத்துக் கொள்ளவுமென ஒவ்வொரு தாய்மாரும் தம் போஷாக்கு நிலைமை, தொற்றா நோய்கள் மற்றும் கருப்பையில் சிசுவின் வளர்ச்சி என்பன குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது கருப்பையில் குழந்தை இறந்து பிறப்பதைத் தவிர்த்தோ குறைத்தோ கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு குழந்தைகளும் ஆரோக்கியம் நிறைந்த வளமானவர்களாகக் காணப்படுவர்.

நன்றி : தினகரன் (மகுடம்)
03.12.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All