Puttalam Online
health

எச். ஐ. வி தாக்கம் சமீபகாலமாக இலங்கையில் மோசமாக அதிகரிப்பு

  • 30 December 2016
  • 734 views

மர்லின் மரிக்கார்.

உலக எயிட்ஸ் தினம் (World Aids day) 01.12.2016 அன்றாகும் அத்தினத்தின் நிமித்தம் பிரசுரமான இக்கட்டுரை.

hiv-aids-dating

உலகம் முன்னொரு போதுமில்லாத அளவுக்கு மருத்துவ அறிவியல் துறையில் அபரிமித வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எச்.ஐ.வி எயிட்ஸ் மனித சமூகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதுவும் பாலியலில் செலுௗக்கம் மிக்க வளமான வயதினர் தான் இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 15 – 49 வயதுக்கு இடைப்பட்ட வயது மட்டத்தினர்் தான் இப்்பேராபத்துக்கு பெரிதும் முகம் கொடுத்துள்ளனர்.

எச். ஐ. வி என்பது உலகில் காணப்படும் வைரஸ்களில் ஒன்றாகும். இது தவறானதும், பிழையானதுமான பாதுகாப்பற்ற பாலுறவு மூலம் பெரிதும் தொற்றிப் பரவும் பண்பைக் கொண்டிருக்கின்றது. அதாவது, ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும், ஆண் – ஆண், பெண் – பெண் ஒரின சேர்க்கை என்றபடி தவறானதும் பிழையானதுமான பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடும் போதே இவ்வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மிக அதிகமாகும்.

அதேவேளை ஊசி மூலம் இடம்பெறும் போதைப்பொருள் துஷ்பியோகம், பாதுகாப்பற்ற இரத்தம் ஏற்றல் போன்ற வழிகள் ஊடாகவும் இவ்வைரஸ் தொற்றக் கூடியது என்பதையும் மறந்து விடலாகாது.

என்றாலும் இவ்வைரஸ் ஏனைய வைரஸுகளைப் போன்றல்லாது மனிதனின் நோயெதிர்ப்புச் சக்தியைத் தாக்கி பலவீனப்படுத்தக் கூடிய பண்பைக் கொண்டிருக்கின்றது. அதன் காரணத்தினால் இவ்வைரஸ் தொற்றியதும் மெது மெதுவாக நோயெதிர்ப்பு சக்தியைத் தாக்கி பலவீனப்படுத்துவதற்கு ஆரம்பித்துவிடும். எனினும் இதற்கான அறிகுறிகள் நோயெதிர்ப்பு சக்தி பெரிதும் பலவீனமடைந்த பின்பே வெளிப்படும்.

ஆனால் இரத்த பரிசோதனை மூலம் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்பட முன்பே இவ்வைரஸ் தொற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உலகில் 35 வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு சிகிச்சை பெற்ற படி உயிர் வாழும் காலத்தை நீடித்துக் கொள்ள முடியும். ஆனால் தவறானதும் பிழையானதுமான பாதுகாப்பற்ற பாலுறவு செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொண்டால் இவ்வைரஸ் தொற்றை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளலாம்.

அந்தவகையில் 2010 ஆம் ஆண்டின் பின்னர் உலகில் எச். ஐ. வி. தொற்றுக்கு புதிதாக உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியுள்ளது. என்றாலும் இவ்வைரஸ் தொற்று மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கி வருகின்ற போதிலும் அண்மைக் காலமாக இந்நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது என்று பாலுறவு மற்றும் எச். ஐ. விஃ எயிட்ஸ் தொடர்பான தேசியக் கட்டுப்பாட்டுத் தினத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்திருக்கின்றார். அதிலும் இந்நாட்டில் எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்களில் 40 வீதத்தினர் வெளிநாட்டு தொழில் வாய்ப்பின் நிமித்தம் சென்று திரும்பியவர்கள் World Aids day) 01.12.2016 அன்றாகும்.

இந்நாட்டில் முதலாவது எச். ஐ. வி தொற்றாளர் 1986 இல் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஆய்வுகளின் படி இந்நாட்டில் பாலுறவு தொழிலில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் துஷ்பியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஒரினச் சேர்ககையாளர்கள், கடற்கரை பையன்கள், திருநங்கைகள், சிறைக்கைதிகள் போன்றோர் எச்.ஐ.வி. அச்சுறுத்தலுக்கு குறிப்பாக முகம் கொடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வைரஸ் தொற்று அச்சுறுத்தல் குறித்து 2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இலங்கையில் 14,312 பாலுறவு தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர். என்றாலும் இந்நாட்டிலுள்ள பாலுறவுத் தொழிலாளர்களில் 51 வீதத்தினர் மேல் மாகாணத்திலும், அவர்களில் 44 வீதத்தினர் கொழும்பு மாவட்டத்திலும் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே ஆய்வில் இந்நாட்டில் ஆண் – ஆண் ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் 7,551 பேர் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் 17,459 பேர் உள்ளனர். இவர்களில் 423 பேர் ஊசி மூலமான போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களாவர்.

இவை இவ்வாறிருக்க, இந்நாட்டில் 1,314 கடற்கரை பையன்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 44 வீதத்தினர் காலி மற்றும் அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும் காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்நாட்டிலும் திருநங்கைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்பாகத் தெளிவான மதிப்பீடோ, கணக்கெடுப்போ இல்லாதுள்ளது. ஆனபோதிலும் உலகலாவிய மதிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் இன விருத்தி வயதைச் சேர்ந்த 0.1 முதல் 1.1 வீதம் வரையானோர் திருநங்கைகளாக உள்ளனர் என்பதும் இந்த அவ்வாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நாட்டில் வருடா வருடம் 114,000 பேர் சிறைக்கைதிகளாக இருக்கின்றனர். இவர்களில் போதைப்பொருள் குற்றவாளிகளும் உள்ளனர். இவர்கள் மத்தியில் தன்னினச் சேர்க்கை இடம்பெறுவதற்கான அச்சுறுத்தலும் நிலவுகின்றது.

இவ்வாறு எச்.ஐ.வி. வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை எதிர்கொண்டவர்கள் இந்நாட்டில் காணப்படுகின்றனர். அதன் காரணத்தினால் தவறானதும், பிழையானதும் பாதுகாப்பற்ற பாலுறவு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது மிகவும் அவசியமானது.

அதேநேரம் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டால் அதனடிப்படையில் பெற்றுக் கொள்ளும் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையின் அடிப்படையில் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். அதனால் எச்.ஐ.வி தொற்று அச்சுறுத்தல் மிக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே அதிகம் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.

நன்றி : தினகரன்
01.12.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All