Puttalam Online
health

Antibiotics தவறான பாவனை கொண்டுவரும் பேராபத்து

  • 30 December 2016
  • 499 views

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) தொடர்பாக விழிப்புணர்வூட்டும் உலக வாரம் நவம்பர் 14 – 20 வரை அனுஷ்டிக்கப்பட்டது.

அதன் நிமித்தம் 29.11.2016 அன்று சுகாதர கல்வி பணியகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொகடர் பாலித மஹீபால, இலங்கை மருத்துவர்கள் சங்கத் தலைவி டொக்டர் இயந்தி அபேவிக்கிரம, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி குணத்திலக்க, பேராசியர் கீதா பெர்னாண்டோ, பொது மருத்துவ நிபுணர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

antibiotic

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் மருத்துவ அறிவியலில் அபரிமித வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டன. அதனால் பல்வேறுபட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அவை பயன்பாட்டுக்கும் வந்தன.

இதன் பயனாக மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்த பல நோய்களை இம்மருந்துகளைக் கொண்டு ஒன்றில் குணப்படுத்தவோ அல்லது தவிர்த்துக் கொள்ளவோ அல்லாவிட்டால் கட்டுப்படுத்திக் கொள்ளவோ முடிந்துள்ளது. இதனுடாக மனிதன் நீண்ட காலம் முகம் கொடுத்த வந்த ஆரோக்கிய ரீதியிலான பாரிய சவால் பெரிதும் நீங்கியது. அதேநேரம் இம்மருந்துப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டமை மருத்துவ உலகின் பாரிய வெற்றியாகவும் அமைந்தது.

அறிமுகம்
1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) மருத்துவ அறிவியலின் ஒரு மைல்கல்லாகும். இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர், குறிப்பாக முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் அதிக மரணங்களுக்கு கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பக்றீரியா, வைரஸ், பங்கசு என்பனவே அதிகம் பங்களிப்பு செய்து வந்தன. அதற்கு இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் சிறந்த தீர்வாக அமைந்தன. அந்தவகையில் சல்பர் அடங்கிய மருந்தே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்தாக விளங்குகின்றது.

‘பென்சிலின்’ என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து 1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அது இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1940 களில் தான் பாவனைக்கு வந்தது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததன் பயனாகப் பல நோய்களை விரைவாகவம், துரிதமாகவும், குணப்படுத்தவும், தவிர்த்துக் கொள்ளவும் முடிந்தது. அதனால் 1960 கள் வரையும் பல நுண்ணுயிர்க் கொல்லி மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன. ஆனால் 1960 முதல் 2000 வரையான காலப் பகுதியில் எந்தவொரு நுண்ணுயிர்க் கொல்லி மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு நுண்ணயிர்க் கொல்லி மருந்துகள் தான் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு வந்தன. அவ்வளவு தான்.

அச்சுறுத்தல்
ஏனெனில் இவ்வகை மருந்துகள் தொடர்பில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலோ அவற்றை உற்பத்தி செய்வதிலோ பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டாதுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம் இம்மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் அதிக செலவவே காரணமாகும். இருப்பினும் அவ்வாறு முதலீடு செய்து மருந்தொன்றைக் கண்டு பிடித்தாலும் அதற்காக முதலிட்ட பணத்தை அதன் மூலம் திரும்ப ஈட்டிக் கொள்ள முடியுமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் ஒரு நோய்க்கு உள்ளானவருக்கு ஒரு தடவைக்கு சில தினங்களுக்குத் தான் இம்மருந்துகள் வழங்கப்படும். அத்தோடு நோய் குணமடைந்துவிடும். இதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்ட முடியாது.

ஆனால் நீரிழிவு, கொலஸ்ரோல், இருதய நோய்கள் போன்றவாறான பல நோய்களுக்கு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மருந்தைப் பாவிக்க வேண்டும். அவ்வகை மருந்துகளுக்கு அதிக கேள்வியும் சந்தை வாய்ப்பும் உள்ளது. இது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்குக் கிடையாது. அதனால் தான் பெரும்பாலான மருந்துப்பொருள் உற்பத்திக் கம்பனிகள் இவ்வகை மருந்து பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஆர்வம் காட்டாதுள்ளன. ஆனால் இது பெரும் ஆபத்து மிக்க நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது

ஒழுங்குமுறையற்ற பாவனை
அதேநேரம் இம்மருந்துகள் நோய்களைத் துரிதமாகவும் வேகமாகவும் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடியதாக இருந்ததால் அதனை எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலர் டொக்டர்களின் சிபாரிசுகளின்றி இம்மருந்துகளைப் பாவிக்கின்றனர்.

சில டொக்டர்கள் எல்லா நோய்களுக்கும் இம்மருந்துகளைச் சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சிலர் ஒரு முறை டொக்டர் சிபாரிசு செய்த இவ்வகை மருந்தை ஒவ்வொரு முறையும் பாவிக்கின்றனர்.

images-2

ஆனால் இவ்வகை மருந்துகள் பக்றீரியா தொற்றுக்கு மாத்திரம் சிகிச்சையாக வழங்கப்படக் கூடியதாகும். அதாவது பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், அவற்றை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் மருந்துகளே இவை. ஆனால் இம்ருந்துகளை வைரஸ் தொற்றுக்கு வழங்குவதால் பயன் கிடைக்காது. தடிமன், இன்புலுவென்ஸா, டெங்கு போன்றன வைரஸ் மூலம் தோற்றுவிக்கப்படும் நோய்கள். இந்நுண்ணுயிர் நோய்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் இரண்டொரு தினங்களில் குணமடையும். அவற்றுக்கு இந்நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை பாவிப்பதால் பயன் கிடைக்காது.

ஆனால் சில மருத்துவர்கள் சிறிய உடல் உபாதைக்கும் கூட அதிகளவில் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சில மருத்துவர்கள் நுண்ணயிர்க் கொல்லி மருந்து வழங்கப்படத் தேவையற்றவர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். சிலர் ஏற்கனவே மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளை வேறு நோய்கள் ஏற்படும் போதும் பாவிக்கின்றனர். இவை அனைத்தும் பிழையானதும் தவறானதுமான செயற்பாடு’ என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இம்மருந்துகளைக் கண்டபடி பாவிக்கும் போது சிலருக்கு நோய் குணமடைந்தாலும் அதற்கு இம்மருந்துகள் காரணமாக அமைவதில்லை. மாறாக உடலில் காணப்படும் நோயெதிர்ப்புசக்தியே காரணம். இம்மருந்துகளை எல்லா நோய்களுக்கும் பாவிப்பதால் பின்விளைவுகளும் ஏற்படலாம். அதனால் சில நாட்களுக்கு நோய் நீடிக்கவும் முடியும். சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவித்தால் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும். ஆதன் விளைவாக உடல் சக்தியை ஈடுசெய்யவும் தாமதம் ஏற்படலாம்.

அதனால் டொக்டரின் சிபாரிசின்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது. ஆனால் சிபாரிசு செய்யும் நாட்களுக்கு இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும். இம்மருந்தைப் பாவித்து இரண்டொரு நாட்களில் நோய் குணமடைந்து விட்டால் மருந்தை இடைநடுவில் கைவிடக் கூடாது. அதனால் சில சமயம் நோய் மீண்டும் தீவிர நிலையை அடையவும் கூடும். அச்சந்தர்ப்பத்தில் இம்மருந்தை மீண்டும் பாவித்தால் அவை பயனளிக்காது போகலாம். ஏனெனில் பக்றீரியாக்களை அழிக்கவே இவ்வகை மருந்துகள் வழங்கப்படுகின்றது என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மருந்தின் முக்கியத்துவம்
ஆனால் சில சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் மிக அத்தியாவசியமானது. அவை இல்லாவிட்டால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. இம்மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் பக்றீரியாத் தொற்றைத் தவிர்க்கலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் இந்நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளைப் பாவிக்க வேண்டும். அப்போது தான் வயிற்றில் காணப்படும் பக்றீரியாக்கள் மூலம் ஏற்படும் தொற்றைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

சில புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும். அவ்வாறான நோயாளர்களை ஏனைய நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளை வழங்குவது மிகவும் அவசியமானது. சிறுநீரகம் உள்ளிட்ட அவயவ மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும்.

ஆனால் ‘இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்படுவதால் பல பக்றீரியாக்கள் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் வீரியமடைந்துள்ளன. குறிப்பாக பென்சிலின் என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் சில பக்றீரியாக்கள் 80 வீதம் வீரியமடைந்துள்ளன’ என்று நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்பட்டதன் விளைவாகப் பல நுண்ணுயிர்கள் அம்மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது எவ்வாறு ஏற்படுகின்றன என சிலர் வினவலாம். அதாவது இவ்வகை மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் சில பக்றீரியாக்கள் என்சைம் வகைகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் சில பக்றீரியாக்கள் கலக்கூறுகளை மாற்றிக் கொள்ளுகின்றன. மேலும் சில மரபணுவை மாற்றிக் கொள்கின்றன. அத்தோடு சில பக்றீரியாக்கள் மரபணுவை பரிமாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. இதன் விளைவாக இம்மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளன. அதனால் தான் இம்மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும் பக்றீரியா உடலில் காணப்படுவதோடு அவை வளர்ச்சி அடையவும் செய்கின்றன.

இதன் விளைவாக நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (antibiotic resistant) தாக்கம் தோற்றம் பெற்றுள்ளது. இது உலகில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

உயிரினங்களுக்கு வழங்கப்படுதல்
இதேநேரம் இவ்வகை மருந்துகள் மனிதர்களுக்கு மாத்திரமன்றி உணவாகக் கொள்ளப்படும் பிராணிகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றுக்கும் பக்றீரியா தொற்றுக்கள் ஏற்படுகின்றன. அதனால் இவை தவிர்க்க முடியாதவை.

அத்தோடு இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் போன்ற உயிரினங்களில் அதிக இறைச்சியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இம்மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு கோழி உணவின் ஊடாகவே இம்மருந்துகள் வழங்கப்படுகிறது. இது இலங்கை உட்பட உலகில் பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இம்மருந்துகளில் சில இந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. ஆனால் டென்மார்க் போன்ற நாடுகளில் இறைச்சிக் கோழிப் பண்ணைகளுக்கு இவ்வகை மருந்துகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றும் குறைவடைந்துள்ளது.

ஆனால் இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பெற்ற இறைச்சிக் கோழிகளின் மலத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவற்றில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்களை அவதானிக்க முடிந்துள்ளது. அந்தவகையில் நீர்கொழும்பு களப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வில் அங்கு குளோரைட் செறிவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மீன்களிலும் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளின் செறிவும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. அத்தோடு இக்களப்பில் வளர்க்கப்படும் இறால்களிலும் இம்மருந்துகளின் செறிவு அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனால் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பிராணிகளில் காணப்படும் இப்பக்றீரியாக்கள் அவற்றை உணவாகக் கொள்ளும் போதோ அல்லது அவற்றைச் சமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காகக் கையாளும் போதோ மனிதனுக்குத் தொற்ற முடியும். அதேநேரம் இம்மருந்துகளை இப்பிராணிகளுக்கு வழங்குவதால் அவற்றின் மலம் நீரில் கலக்குமாயின் அதிலுள்ள பக்றீரியா சுற்றுச் சூழலில் கலந்து தாவர உணவின் ஊடாகக் கூட மனிதனை அடையலாம். இவ்வகை பக்றீரியாக்கள் மனிதனுக்கும் நோய்களை தோற்றுவிக்கலாம். அவை மனிதனின் இறைப்பையிலும் கூட காணப்படுகின்றன

உலகை எதிர்நோக்கியுள்ள பேராபத்து
என்றாலும் தற்போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மில்லியன் கணக்கான டொலர்கள் தற்போது செலவிடப்படுகின்றன. இதனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வகைத் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர.

இந்நிலைமை தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும் போது இம்மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் காரணமாக 10 மில்லியன் பேர் உயிரிழக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் புற்று நோய்களால் உயிரிழப்பவர்களை விடவும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த அச்சுறுத்தல் தென்னாசியப் பிராந்திய மக்களுக்கு மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றுக்கள் பிரித்தானியாவை விடவும் இலங்கையில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை இந்நாட்டுத் தரவுகளும் வெளிப்படுத்துகின்றன. இது மிகப் பயங்கர நிலைமையாகும்.

அதேநேரம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் புதிதாகக் கண்டுபிடிக்கபடுவதும் பெரிதும் குறைவடைந்துள்ளது. மறுபுறம் புழக்கத்திலுள்ள நுண்ணுயிரக் கொல்லி மருந்துகள் கண்டபடி பாவிக்கபடுவதால் அவற்றுக்கு பக்றீரியாக்கள் இசைவாக்கம் அடைந்துள்ளன, அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் அப்பக்றீரியாக்கள் வீரியமடைந்துள்ளன. இவற்றின் விளைவாக எதிர்காலத்தில் உலகம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை இழந்து விடக்கூடிய பேராபத்து தோற்றம் பெற்றுள்ளது.

அதனால் 1920களுக்கு முற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அற்ற யுகத்தைப் போன்ற ஒரு யுகத்தில் மீண்டும் உலகம் பிரவேசிக்க நேரிடுமா? என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் பெருந்தொகையானோரின் மரணங்களுக்கு நோய்த் தொற்றுக்களே முக்கிய காரணமாக அமைந்தன. அக்காலப் பகுதியில் இவ்வகை மருந்துகள் இருக்கவில்லை.ஆனால் இன்று இவ்வகை மருந்துகள் இருந்தும் அவை கண்டபடி பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் பக்றீரியாக்கள் வீரியம் அடைந்திருப்பதே இந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உள்ளன. அதனால் தான் இவ்வச்சுறுத்தல் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் மருத்தவ அறிவியல் உலகமும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

தவிர்ப்பு நடவடிக்கைகள்
இதேவேளை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்கள் வைத்தியசாலை சுற்றுச் சூழலில் இருக்க கூடும். அதன் காரணத்தினால் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். உடுதுணிகளையும் உடனடியாகக் கழுவுவது நல்லது. அத்தோடு மலசலகூடம் சென்று வந்த பின்னரும், பயணிகள் பஸ் வண்டிகளில் பயணித்து வந்த பின்னரும் சாப்பாட்டுக்கு முன்னரும், பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகள் ஊடாகவே தொற்றுகின்றன.

அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் அவை ஏனையவர்களுக்குத் தொற்றுவதைத் தவிர்க்கவும் இவை பெரிதும் உதவும். நுண்ணுயிர்த் தொற்று குறைந்தால் இம்மருந்துகளின் தேவையும் குறைவடைந்துவிடும். அதனால் நோய்க் கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தவிர்த்துக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது பக்றீரியா நோயா அல்லது வைரஸ் நோயா என்பதை இனம் கண்டு சிகிச்சை அளிப்பதே சிறந்தது. இது சில சமயம் சிரமான காரியமானாலும் அதுவே சிறந்தது. பக்றீரியா நோய்களுக்கு மாத்திரமே இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் வழங்கப்பட வேண்டும். காய்ச்சல் என்பது பக்றீரியா தொற்று அல்ல. அதனால் காய்ச்சல் காணப்படும் எல்லோருக்கும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து வழங்கப்பட வேண்டியதல்ல. நோயை உரிய முறையில் பகுப்பாய்வு செய்து தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் இம்மருந்துகளை உரிய அளவில் வழங்க வேண்டும். டொக்டர்களின் சிபாரிசு இன்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது.

நன்றி : தினகரன் (மகுடம்)
10, 17.12.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All