Puttalam Online
health

உடல் தொப்பை (Obesity) – விழிப்படைய வேண்டிய ஆரோக்கியப் பிரச்சினை

  • 30 December 2016
  • 888 views

மர்லின் மரிக்கார்

உலக தொப்பை (Obesity) தினத்தை (26.11.2016)யொட்டி சுகாதர கல்வி பணியகம் 29.11.2016 அன்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால, பொது மருத்துவ நிபுணர் வருண குணத்திலக, பணியகப் பணிப்பாளர் டொக்டர் ஆர். டி. எப். சி.காந்தி ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

causes-of-obesity

உலகில் நீரிழிவு, கொலஸ்ரோல் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் தான் உயிராபத்து மிக்கவையாக அண்மைக்காலம் வரையும் கருதப்பட்டன. ஆனால் தொப்பை (உடல் பருமன்) குறித்து பெரிதாகக் கவனம் செலுத்தப்படவில்லை. எனினும் அது தொடர்பில் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன.

உலகலாவிய நிலைமை
இவ்வாறான சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், ‘உலகில் மரணங்களுக்கு துணைபுரியும் காரணிகளில் தொப்பை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதென அண்மையில் அறிவித்தது.

_80091069_002950296-2

அத்தோடு வருடமொன்றுக்கு 2.8 மில்லியன் பேரின் உயிரிழப்புக்கு தொப்பை துணைபுரிந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இந்த ஸ்தாபனம், தொப்பை காரணமாக நீரிழிவுக்கு உள்ளாகின்றவர்களில் 44 வீதத்தினரும், குருதியூட்டக் குறைபாட்டு பக்கவாதத்திற்கு உள்ளாகின்றவர்களில் 22 வீதத்தினரும் மரணமடைகின்றனர்’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இருந்தும் உலகில் 1.4 பில்லியன் மக்கள் தொப்பைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 300 மில்லியன் பேர் ஆண்கள் என்றும், 300 மில்லியன் பேர் பெண்கள் என்றும், 40 மில்லியன் பேர் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் என்றும் இவ்விஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது.

என்றாலும் ‘இலங்கையில் தொப்பைக்கு உள்ளாகியுள்ளவர்கள் தொடர்பில் தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் இந்நாட்டில் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் தொப்பை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நாட்டின் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகத் தொப்பை மாறியுள்ளது’ என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக போலந்து நாட்டிலும் தொப்பை ஒரு நோய் நிலை என்று இவ்வருடம் (2016) ஜுன் மாதம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் பிரேரணையொன்றைத் தயாரித்த வருகின்றன. இவ்விழிப்புணர்வு எல்லாப் பிராந்தியங்களிலும் ஏற்படுவதே நல்லது.

அறிமுகம்
ஏனெனில் தொப்பை என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது? அது முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக மாற எவை துணைபுரிகின்றன? அதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்? என்பன தொடர்பான அறிவு தெளிவைப் பெற்றிராதவர்களாகவே பெரும்பாலானவர்கள் உள்ளனர்.

இத்தொப்பை ஏற்பட பல காரணிகள் துணைபுரிகின்றன. அவற்றில் தவறான உணவுப் பழக்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான பதார்த்தங்களில் கொழுப்பும் ஒன்றாகும். இதன் பெரும்பகுதியை அன்றாட உணவின் மூலம் உடல் பெற்றுக் கொள்கின்றது.

இருந்த போதிலும் உணவின் மூலம் உடல் பெற்றுக்கொள்ளும் கொழுப்பில் மேலதிகமானவை உடலின் சில பகுதிகளில் படிகிறது. குறிப்பாக ஆண்களின் மார்பு மற்றும் வயிற்று பகுதியிலும், பெண்களின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியிலும் இக்கொழுப்பு பெரும்பாலும் படியும். அதுவே தொப்பையை ஏற்படுத்துகின்றது. இக்கொழுப்பு படியும் ஒழுங்கிற்கு ஏற்பவே தொப்பை ஏற்படுகின்றது. அதற்கேற்பவே உருவ அமைப்பும் வேறுபடுகின்றது. இதன் வெளிப்பாடாகவே சில ஆண்களுக்கு மார்பு பகுதி சதை அதிகரித்தும், வயிறு உப்பி பெருத்தும், சில பெண்களுக்கு இடுப்பு பகுதியும்,தொடைப் பகுதிகளும் உருப்பெருத்தும் காணப்படுகின்றது.

அதாவது ஆண்களின் குடல்களுக்கு இடையிலான கொழுப்பு படிவு அதிகரிக்கும் போது தான் வயிறு உப்பி பெருத்து முன்னோக்கி வளைந்து செல்கின்றது. இது ஆரோக்கியத்திற்கு உகப்பற்ற நிலை என மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொழுப்பில் Visceral fat என்றொரு வகை உள்ளது. இது வயிற்றுக்கும் தோலுக்கும் இடைப்பட்ட கொழுப்பைக் குறிக்குமேயொழிய தோலுக்கு மேற்பகுதியில் காணப்படும் கொழுப்பைக் குறிக்காது. அத்தோடு உடல் தோலின் கீழ்ப் பகுதியிலும் கொழுப்பு காணப்படுகின்றது. இது உடலின் வெப்பத்தைப் பேணி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றது.

பாதிப்புக்கள்
எனினும் சிறுவர்களதும் கர்ப்பிணிகளதும், பெரியவர்களதும் இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது அச்சுறுத்தல் மிக்கதாகும். இதன் வெளிப்பாடாக ஏற்படும் தொப்பை காரணமாக உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் என்பன அதிகரிக்கும், பித்தப்பையில் கல் ஏற்படும். அதனால் Visceral fat ஐக் குறைக்க வேண்டும். குறிப்பாக குடல்களுக்கிடையில் காணப்படும் இக்கொழுப்பை குறைத்தால் கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் இரத்தம் என்பன பெரும்பாலும் குறைவடையும். அத்தோடு வயிறு முன்னோக்கி வருவதும் குறைவடையும். சிலர் இரவில் தூக்கத்தின் போது குரட்டை விடுகின்றனர். இதற்கு கொலஸ்ரோல் அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதாவது சுவாச வழியில் அடைப்பு ஏற்படுவதன் விளைவாக நுரையீரலுக்கு ஒட்சிசன் சீராகக் கிடைக்காததால் குரட்டை விடுகின்றனர்.

nhs-cover_se

அதேநேரம் தொப்பைக்கு உள்ளானவர்கள் இரவில் அடிக்கடி தூக்கம் விழிப்பவர். இதற்கு இரத்தத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காமையே காரணமாக விளங்குகின்றது. அதனால் தான் இப்படியானவர்கள் பகல் வேளையில் சாப்பிட்டதும் தூங்குகின்றனர். சிலர் வைபவங்களிலும் கூட தூங்குகின்றனர்.

இவை இவ்வாறிருக்க, தவறான உணவுப் பழக்கவழக்கத்திற்கு மேலதிகமாக சில நோய்களும் தொப்பை ஏற்பட காரணமாக அமைகின்றன. குறிப்பாக பிறப்பிலேயே தைரொய்ட் பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும், ஹோர்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கும் தொப்பை ஏற்படும்.

அத்தோடு வேகமாக சாப்பிடுவர்களுக்கும், போதிய தூக்கமின்மையைக் கொண்டுள்ளவர்களுக்கும் தொப்பை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமென ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கையிலும் தென்னாசியாவிலும் பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மது அருந்துபவர்களுக்கு குறிப்பாக பியர் குடிப்பவர்களுக்கு வயிறு உப்பி பெருக்கும். இதற்கு பியரில் சீனி அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும்.

இறைப்பையில் காணப்படும் சில பக்றீரியாக்களும் தொப்பையை ஏற்படுத்தக் கூடியன. நாம் உண்பதில் பல இரசாயன ரீதியில் மாற்றப்பட்டவை. அவற்றில் கோழி இறைச்சி முக்கியமானது. அது இன்று பிரதான உணவாக உள்ளது. ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரசாயன ரீதியிலான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட உணவுகளே வழங்கப்படுகின்றன. அதனால் அவற்றில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், வளர்ச்சியைத் தூண்டும் ஹோமோன் என்பன காணப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்ணும் போத வயிற்றிலுள்ள பக்றீரியாக்கள் அதற்கு இசைவாக்கமடைவதோடு தொப்பை ஏற்படவும் துணை புரியும்.

எவ்வாறு தவிர்க்கலாம்?
என்றாலும் சில விளம்பரங்களில் குறிப்பிடுவது போன்று ஒரு வாரத்திலோ, இரு வாரத்திலோ தொப்பையைக் குறைக்க முடியாது. அது வெறும் மாயை என்று பொது சுகாதார மருத்துவ நிபுணர் வருண குணத்திலக்க குறிப்பிட்டார்.

bmi-obesity-slim4fun

தொப்பையைக் தவிர்ப்பதற்கு பிறந்தது முதல் 12 வயது வரையும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் இவ்வயது மட்டத்தினரை இலக்கு வைத்தே உணவு உற்பத்தி கம்பனிகள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அதனால் இவை குறித்த விஷேட கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது. இப்படியான நிலைமை வளர்ச்சி அடைந்த நாடுகளில் இலலை எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதனால் தொப்பையைத் தவிர்த்துக் கொள்வதற்காக கலோரியையும், கொழுப்பையும் குறைவாக கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவற்றை நேரம் எடுத்து நிதானமாக மென்று சாப்பிடுவதிலும், போதிய நேரம் தூங்குவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொப்பைக்கு உள்ளான சிலரின் அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் கடும் கறுப்பு காணப்படும். இவர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் மிக அதிகமாகும். இப்படியானவர்கள் முன்கூட்டியே இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைப் பரீட்சித்து மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் வேக நடைப்பயிற்சியிலும், படிக்கட்டுக்களில் ஏறி இறங்குவதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை தவிர்த்து வீட்டு தொலைபேசியைப் பாவிக்க வேண்டும். அதன் மூலம் சிறிது தூரமாவது நடக்க முடியும். தொலைக்காட்சிகளுக்கு ரிமோரட் பாவிப்பதைக் முடிந்தளவு குறைக்க வேண்டும் தொலைக்காட்சி பார்த்தப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தொலைக்காட்சியில் கவனம் செல்வதால் சாப்பிடும் உணவின் அளவை கவனிக்க முடியாது போய்விடும்.

ஆகவே உணவு உள்ளிட்ட நடத்தைக் கொலங்களை உரிய ஒழுங்கில் பேணி, உயரத்திற்கு எற்ப உடல் திணிவுச் சுட்டிப்படி உடல் நிறையைப் பேணிக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாகப் தொப்பை உள்ளிட்ட பலவித நோய்களைத் தவிர்த்து ஆரோக்கிய வாழ்வைப் பேணிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நன்றி : தினகரன் (மகுடம்)
24.12.2016


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All