Puttalam Online
education

உங்கள் பிள்ளை கல்வியில் பின்தங்கியுள்ளதா?

  • 10 January 2017
  • 959 views

மர்லின் மரிக்கார்.

விஷேட தேவையுடைய பிள்ளைகள் குறித்து சுகாதார கல்வி பணியகத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட செய்தியாளர் கருத்தரங்கில் டொக்டர் பாலித மஹீபால, யுனிசெப் பிரதிநிதியான சமூக மருத்துவ நிபுணர் தீபிக்கா ஆட்டிக்கல, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பான சிறுவர் நோயியல் நிபுணர்களான டொக்டர் சுதர்ஷணி செனவிரட்ன, டொக்டர் சுவர்ணா விஜேதுங்க, டொக்டர் பியரா ரத்நாயக்கா ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

images

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தோற்றத்தில் ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றன. என்றாலும், சில குழந்தைகள் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறக்கின்றன. அவற்றில் கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகக் கூடிய குறைபாடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருந்தும் இலங்கையில் பெரும்பாலான பெற்றோரும்,மருத்துவர்களும், ஏனையவர்களும் இவ்வகைக் குறைபாடுகளை குழந்தை ஐந்து வயதை அடையும் போது தான் முதன் முதலில் கண்டு கொள்கின்றனர்.

download-1ஏனெனில் அவ்வயதை அடையும் போது தான் இந்நாட்டில் பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர். அச்சமயம் தான் அவர்களது கல்வித் திறன்கள் அவதானிக்கப்படுகின்றன. ஆனால் பிள்ளைகள் அவ்வயதை அடையும் போது அவர்களது மூளை நரம்பு வளர்ச்சி முழுமை அடைந்திருக்கும். அத்தோடு அந்நரம்புகள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தொடர்பாடல் செயற்பாடுகளின் பெரும்பகுதியும் நிறைவடைந்திருக்கும். அதனால் இவ்வகைப் பிள்ளைகளுக்கு இச்சமயம் சிகிச்சை அளிப்பதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன்களை விடவும் ஆரம்ப கட்டத்திலேயே குறைபாட்டை இனம் கண்டு அளிக்கும் சிகிச்சை மற்றும் செயன்முறைப் பயிற்சி மூலம் அதிக பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

downloadஇருந்தும் இதனைப் பெரும்பாலான பெற்றோர்கள் அறியாதுள்ளனர். ஆனால் இவ்விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் எந்தவொரு பிள்ளையும் காரணமின்றி கல்வித் திறன்களில் பின்னடைவுக்கு உள்ளாவதில்லை. பொதுவாகப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி கருவில் தான் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. அதனால் பிள்ளை பிறந்த பின்னர் அதன் அறிவை மாற்ற முடியாது. சில சமயம் சில பிள்ளைகளிடம் அறிவு மட்டம் சாதாரண மட்டத்தை விடவும் குறைவாகக் காணப்படலாம். ஆனாலும் பரம்பரை அலகு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் என்பவற்றின் ஊடாக அவர்களது அறிவு மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

என்றாலும் இப்பின்னடைவுக்கு பிள்ளைகள் எவ்வாறு உட்படுகின்றன என்ற கேள்வி பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதாவது கருப்ப காலத்தில் அல்லது பிரசவ வேளையில் ஏற்படும் நெருக்கடிகளின் போது குழந்தையின் மூளைக்கு கிடைக்க வேண்டிய ஒட்சிசனின் அளவு சொற்ப நேர காலத்திற்காவது குறைவடையுமாயின் அதன் விளைவாக எற்படும் பாதிப்பின் நீண்ட காலத் தாக்கமாக கல்வி கற்பதில் பின்னடைவு ஏற்படலாம்.

special-education-2அதனால் பிள்ளை கிடைக்கப்பெற்று வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு கொண்டு வந்தது முதல் பிள்ளையில் ஏதாவது வித்தியாசங்கள் தென்படுகின்றனவா? என்பது குறித்து பெற்றோரும் மருத்துவ துறையினரும் அவதானிக்க வேண்டும். அதனூடாகப் பிள்ளையின் நிலைமையை அறிந்து ஆரம்ப கட்டம் முதலே சிகிச்சை அளிக்க முடியும். அதன் மூலம் அப்பிள்ளையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். இது 5 வயதில் அளிக்கப்படும் சிகிச்சையை விடவும் அதிக பயன்மிக்கதாக அமையும்.

மேலும் கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகக் கூடிய பிள்ளைகளின் பெளதீக வளர்ச்சியில் எதுவித வித்தியாசங்களையும் அவதானிக்க முடியாது. ஆனால் அவர்களது அறிவு திறன்களில் தான் வித்தியாசங்களை காணக் கூடியதாக இருக்கும்.

இந்நாட்டின் சமூகப் பின்புலத்தில் கல்விக்கு பலவிதத் தடங்கல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பெளதீக வளங்களும் கல்வியில் தாக்கம் செலுத்துகின்றன. அதேநேரம் திறன்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல கல்வி. அதனால் சில சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகளுக்கு கல்வியில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு கூட இல்லாது போகலாம். மேலும் சில பிள்ளைகளிடம் காணப்படும் நோய்கள் அவர்கள் கல்வியை சீராக மேற்கொள்வதற்கு தடங்கல்களாக அமையலாம்.

இருப்பினும் கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகும் பிள்ளைகளில் ஒரு தொகையினரை மருந்து மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். ஆனால் மருந்துகளை விடவும் செயற்பாடுகளின் ஊடாக அவர்களில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இதேவேளை கல்வியில் பின்னடைவுக்கு உள்ளான பிள்ளைகளை மருத்துவ சிகிச்சை மூலம் வழமையான நிலைமைக்கு கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை பெரும்பாலான பெற்றோரிடம் காணப்படுகின்றது. இது முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நம்பிக்கை அல்ல. ஏனெனில் இவ்வாறான பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ள பிள்ளைகளுக்கு மருந்துகளை விடவும் செயன்முறைப் பயிற்சிகளே அதிகம் பயனளிக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

எனினும் கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள பிள்ளைகள் மத்தியில் பலவித பின்னடைவுகள் காணப்படும். அவற்றில் கல்வியில் கவனம் செலுத்துவதில் காணப்படும் பின்னடைவு, துருதுருப்பு மிக்க பிள்ளைகள் மத்தியில் கல்வியில் காணப்படும் பின்னடைவு என்பன குறிப்பிடத்தக்கன. இப்பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களது கவனம் செலுத்தும் நிலையை மேம்படுத்தலாம். அதன் மூலம் இவர்கள் கல்வியை சிறந்த முறையில் மேற்கொள்ள உதவலாம். அத்தோடு துருதுருப்பு மிக்க பிள்ளைகள் கல்வியில் பின்டைவதை அவதானித்தால் அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையின் ஊடாக அவர்களின் கல்விப் பின்னடைவையும் தவிர்க்கலாம்.

அதேநேரம் பிள்ளைகள் கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாவதற்கு தேவையற்ற பயமும் ஒரு காரணமாகும். அதுவும் ஒரு நோயே. குறிப்பாக பரீட்சைகள் தொடர்பில் இப்பயம் காணப்படும். இவ்வாறான பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சை மூலமும், செயற்பாட்டு பயிற்சிகள் மூலமும் இயல்பு நிலையை ஏற்படுத்தலாம். இதன் நிமித்தம் அவர்களுக்கென வீட்டில் மாதிரி பரீட்சைகளை நடாத்தினால் அவர்களிடம் காணப்படும் அச்ச உணர்வு நீங்கிவிடும்.

இன்னும் சில பிள்ளைகளிடம் சிறிய மனக் கிளர்ச்சி, சிறிய மன அழுத்தம் போன்றவாறான நோய்களையும் அவதானிக்கலாம். இவ்விதமான பிள்ளைகளுக்கு மருந்து மூலமே சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் ஒரு பிள்ளை நல்ல முறையில் கல்வியை மேற்கொண்டு வந்து திடீரென கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகும் நிமைலையை அவதானித்தால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். அதனூடாக அதற்கான காரணத்தை உரிய முறையில் இனம் கண்டு அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும் சில பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியில் எந்த வித்தியாசத்தையும் அவதானிக்க முடியாது. அவர்களது அறிவு வளர்ச்சியும் இயல்பானதாகவே இருக்கும். இவர்களது அறிவு மட்டமும் சாதாரணமாக காணப்படும் ஆனால் நாம் எழுதும் எழுத்துக்களையும், காதில் கேட்டும் பேச்சுக்களையும் வசனங்களாக விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருப்பர். ஏனெனில் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வசனங்களாக விளங்கிட உதவும் மூளையின் திறன் வளர்ச்சியில் காணப்படும் தாமதமே இதற்கு காரணம். இவ்வகைப் பிள்ளைகளை இனம் கண்டு அவர்களுக்கு பலவித செயற்பாடுகளின் ஊடாக உதவும் போது அவர்களால் சாதாரண பிள்ளைகள் போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியதாக இருக்கும்.

இருந்தும் இவ்வாறான பிள்ளைகள் முகம் கொடுத்துள்ள பாதிப்புக்களின் உண்மை நிலையை ஆசிரியர்களும், சக மாணவர்களும் அறியாததன் விளைவாக வகுப்பில் இப்பிள்ளைகள் இம்சைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஏனெனில் பாடசாலையில் பணிகளை உரிய முறையில் செய்ய முடியாமை மற்றும் அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக அமையலாம்.

அதனால் இப்பிள்ளைகள் பாடசாலை செல்ல விரும்ப மாட்டார்கள். இவர்களது பாடசாலை வேலைகளைப் பெற்றோரே செய்து கொடுக்கவும் வேண்டும். அதன் காரணத்தினால் இவ்வகைப் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் நிறுத்தி விடுவர். அவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதும் கஷ்டம். ஏனெனில் அதே ஆசிரியர், அதே மாணவர்ளுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதே அடிப்படைக் காரணமாகும்.

ஆகவே கல்வியில் பின்னடைவுக்கு உள்ளாகக் கூடிய பிள்ளைகளை ஆரம்ப கட்டத்திலேயே இனம் காண்பதில் ஒவ்வொரு பெற்றோரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் இவ்வகைப் பிள்ளைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவக் கூடிய மருத்துவ மற்றும் செயற்பாட்டு பயிற்சிகள் அதிகமுள்ளன. இப்பிள்ளைகள் தொடராகச் சிகிச்சை பெறவும் வேண்டும். அதனூடாக அவர்களை கல்வியில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதனால் அதற்கு ஏற்ப அவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோரினதும் மருத்துவர்களினதும் ஆசிரியர்களதும் பொறுப்பாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All