Puttalam Online
ladies

சிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே!

  • 10 January 2017
  • 1,387 views

சுகப்பிரசவத்தை நாடுவதே கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் – சிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே!

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

பிள்ளை பிறப்பை அண்மித்த காலம் தொடர்பான இலங்கை மருத்துவர்கள் சங்கத்தினர் சுகாதாரக் கல்வி பணியகத்தில் அண்மையில் (03.11.2016) நடாத்திய செய்தியாளர் கருத்தரங்கில் சங்கத்தின் தலைவரான சமூக மருத்துவ நிபணர் கபில ஜயரட்ன, கொழும்பு பல்கலைக்கழக மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பீட பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்கா, யுனிசெப் நிறுவனத்தின் சமூக மருத்துவ நிபுணர் தீபிக்கா ஆட்டிகல, காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் வி.டி. ரத்னசிறி, சிறுவர் நோயியல் (நியோநேட்டலொஜி) நிபுணர் எல். பி. ஜி. சமன் குமார ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

இனவிருத்தி ஆரோக்கியத்தில் சுகப் பிரசவம் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆரம்ப காலம் முதல் உலகம் முழுவதும் சுகப் பிரசவமே இடம்பெற்று வந்திருக்கின்றது.

இருப்பினும் மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பயனாக சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவ முறை கண்டுபிடிக்கப்பட்டது. அம்முறைமை இன்று உலகெங்கிலும் வியாபித்து பயன்பாட்டில் உள்ளது. சுகப் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் தான் இச்சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ நிபுணர்களின் சிபாரிசின் அடிப்படையில் தான் இப்பிரசவத்திற்கு செல்ல வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

csesarian

சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பில்லாத போது தான் சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்திற்கு பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் சிபாரிசு செய்வர். அது தான் மருத்துவ ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒழுங்காகும். ஆனால் பெரும்பாலான தாய்மார் சுகப் பிரசவத்தை விடவும் சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்தையே அதிகம் விரும்புகின்றனர். அப்பிரசவத்திற்கே அண்மைக் காலமாக ஆர்வமும் காட்டப்படுகின்றது. அதுவே சிறந்த பிரசவ முறைமை என்ற மனப்பதிவும் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் பிரசவ வலி ஏற்பட்டுத்தான் சுகப் பிரசவம் இடம்பெறும். அது இயல்பானது. பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் இடம்பெறுவது தான் சிறந்தது என்பது பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ நிபுணர்களின் கருத்தும் கூட. அவ்வகைப் பிரசவம் தான் குழந்தைக்கும் தாய்க்கும் உகப்பானது.

imagesஇருப்பினும் இப்பிரசவ வலியைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும், அவ்வலி தொடர்பான அச்சம் காரணமாகவுமே பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார் சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்தை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் எண் சோதிடத்திற்கு ஏற்பவும், சுப நேரத்திலும் பிள்ளை பிரசவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பல கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்தை விரும்புகின்றனர். ஆனால் இவை முற்றிலும் தவறான விருப்பங்கள் என்பதே மருத்துவ நிபுணர்களின் அபிப்பிராயமாகும். சிசேரியன் சத்திர சிகிச்சைப் பிரசவத்தைப் பொறுத்த வரை பிரசவ வலி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. மாறாக கருப்பையில் இருக்கும் சிசுவை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

சிசேரியன் சத்திர சிகிச்சைப் பிரசவம் இலகுவானதாக விளங்கினாலும் அதன் விளைவாக ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவ்வகைப் பிரசவத்திற்கு பின்னர் பலவித அசௌகரியங்களும், பாதிப்புக்களும் தாய்க்கும் பிள்ளைக்கும் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவம் குழந்தைக்கு நல்லதல்ல. அதனால் தாயும் பிள்ளையும் நீண்ட காலத்தில் ஆரோக்கிய ரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூட நேரிடலாம். அத்தோடு ஏனைய பிரசவங்களின் போதும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பெண் நோயியல் மற்றும் மகப்பேறு தொடர்பான பீடாதிபதி பேராசியர் ஹேமந்த சேனநாயக்கா தெரிவித்திருக்கின்றார்.

images-1

‘என்றாலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மருத்துவ நிபுணர்களின் சிபாரிசுக்கு அமைய சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்திற்கு செல்வதில் தவறில்லை. அவையே உடல் உள ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை தொடர்பில் மக்கள் மத்தியில், குறிப்பாக தாய்மார் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவது அவசியம்’ என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் வீட்டில் பிரசவம் இடம்பெறுவதே பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது. இன்று அந்த நிலைமை இல்லை. இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிரசவரம் இடம்பெறுவதே பாதுகாப்பானதாக நம்பப்படுகின்றது. அந்தவகையில் 99 வீதமான பிரசவங்கள் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் இன்று வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்றன.

இதேவேளை, ‘முதல் பிரசவம் சிசேரியன் சத்திர சிகிச்சைப்படி இடம்பெற்றதால் அடுத்த பிரசவமும் அவ்வாறே இடம்பெறாலாம் என்ற அபிப்பிராயம் சில தாய்மார் மத்தியில் காணப்படுகின்றது. இக்கருத்தில் எதுவித உண்​ைமயும் இல்லை’ என்று குறிப்பிட்ட கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் யு. டி. பி. ரத்னசிறி ‘எமது வைத்தியசாலையின் பிரசவத் தரவுகளை எடுத்துப் பார்த்தால் முதல் பிரசவத்தை சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பெற்றவர்களில் 70 வீதமானோர் அடுத்த பிரசவத்தை சிசேரியன் சத்திர சிகிச்சையின்றி சுகப் பிரசவமாகப் பிரசவித்துள்ளனர்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக இலங்கையில் ஒரு பெண் மூன்று தடவைகள் மாத்திரமே சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய மருத்துவத் துறையினர் சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் சில பெண்கள் 5, 6 தடவைகள் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிரசவம் செய்தவர்களும் உள்ளனர். ஆகவே கர்ப்பிணித் தாய்மார் போதிய தெளிவில்லாத காரணத்தினால் தான் சிசேரியன் சத்திர சிகிச்சைப் பிரசவத்தை விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது. அதனால் அவர்களை அறிவூட்டி வலுப்படுத்தினால் சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.

எனினும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகம் முழுவதும் தனியார் வைத்தியசாலைகளில் தான் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் அதிக பிரசவங்கள் இடம்பெறுகின்றன. என்றாலும் இந்நாட்டில் இடம்பெறும் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பாகத் தெளிவான தரவுகள் இல்லாதுள்ளன. அதன் காரணத்தினால் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கு பிள்ளைப் பிறப்பை அண்மிய காலம் தொடர்பான இலங்கை மருத்துவ நிபுணர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஆகவே சிசேரியன் சத்திர சிகிச்சைப் பிரசவத்தை விடவும் சுகப் பிரசவமே ஆரோக்கியமானது. இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மாருக்கும் குடும்பத்தினருக்கும் அறிவூட்டி அவர்களைச் சுகப் பிரசவத்திற்காக ஊக்குவிக்க வேண்டும். அதற்காக இடமளிக்கப்படவும் வேண்டும். அப்போது சிசேரியன் சத்திர சிகிச்சை பிரசவம் மூலம் தாய்க்கும் பிள்ளைக்கும் நீண்ட காலத்தில் ஏற்படக் கூடிய உடல் உள ரீதியிலான ஆரோக்கிய அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All