Puttalam Online
health

மீண்டும் தீவிரடடையும் டெங்கு…!

  • 20 January 2017
  • 805 views

மர்லின் மரிக்கார்

நுளம்புகள் பரப்பும் நோய்களில் ஒன்றான டெங்கு இலங்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்நிலைமை அண்மைக் காலமாகத் தான் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வருடம் டெங்கு வைரஸ் அச்சுறுத்தலோடு தான் ஆரம்பமாகி இருக்கின்றது.

Dengue

குறிப்பாக கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, காலி, மாத்தறை. கல்முனை ஆகிய மாவட்டங்களில் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்ற இதேவேளையில், யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வருடம் ஆரம்பமான ஒரு வார காலப்பகுதிக்குள் சுமார் ஆயிரம் பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெங்கு ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் கடந்த வருடம் 54,354 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர். இவர்களில் 80 பேர் உயிரிழந்தனர். இதனை சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு உத்தியோகபூர்வமாக அண்மையில் அறிவித்துள்ளது.

டெங்கு என்பது இலங்கைக்கு மாத்திரமுரிய பிரச்சினை அல்ல. அது உலகில் 110 நாடுகளில் பொது சுகாதாரப் பிரச்சினையாக விளங்குகின்றது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டில் 60 மில்லியன் பேர் இந்நோய்க்கு உள்ளாகினர். அவர்களில் 13,600 பேர் உயிரிழந்தனர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியது.

இந்த டெங்கு நோய் நுளம்புகளால் காவிப் பரப்பப்படும் ஒரு வைரஸ் நோய். இது இப்போது போன்று முன்பெல்லாம் அடிக்கடி தீவிரமடைந்ததும் கிடையாது. இந்நாட்டினருக்கு சவாலாக அமைந்ததுமில்லை.

Puttalam dengueஆனால் அண்மைக் காலமாகத் தான் இந்த அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. இதன்படி மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழலிலும் ஏதோ பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. அது தான் உண்மை. முன்பெல்லாம் அடிக்கடி சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பிரதேசங்கள் சுத்தப்படுத்தப்படும்.

ஆனால் அண்மைக் காலமாக சிரமதானம் இடம்பெறுவதையே அவதானிக்க முடியாதுள்ளது. இது மக்கள் மத்தியில் கூட்டு பொறுப்பு குறைவடைந்துள்ளமையே வெளிப்படுத்துகின்றது.

இதன் விளைவாக மழை நீர் தேங்கக் கூடிய பொலித்தின் பைகள், உறைகள் உள்ளிட்ட கைவிடப்பட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் இல்லாத இடமே நாட்டில் இல்லை என்றளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இந்நிலைமையே நாட்டில் நுளம்புகள் பெருகுவதற்கு பெரிதும் துணைபுரிகின்றன.

dengueநுளம்புகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மழை நீர் தேங்கும் இடங்களில் குறிப்பாகத் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகக் கூடியது தான் இந்நோயை பரப்பக் கூடிய ஈடிஸ் எஜிப்டைய் என்ற நுளம்பு. இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் இந்நாட்டில் முன்பை விடவும் இப்போது நுளம்பு பெருகுவதற்கு ஏற்ற சுற்றுச்சூழல் அதிகளவில் காணப்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு நாட்டில் நாளுக்கு நாள் சேரும் கழிவுப்பொருட்களும் பாரியளவில் அளவில் அதிகரித்துள்ளது. இருந்தும் அவற்றை ஒழுங்குமுறையாக அகற்றாத நிலைமை காணப்படுவதால் பல பிரதேசங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் கழிவுப்பொருட்கள் கூட இந்நாட்டுக்கு பிரச்சினையாக மாறியுள்ளன.

இதேநேரம் கட்டட நிர்மாண நடவடிக்கைங்களும் அதிகரித்துள்ளன. அப்பிரதேசங்களும் இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு சிறந்த இடங்களாக மாறியுள்ளன. அத்தோடு பாடசாலைகள். பொதுக்கட்டடங்கள். அரசாங்கக் கட்டடங்கள் என்பவற்றிலும் இவை பெருகுவதற்கு ஏற்ற சுற்று சூழல் அதிகளவில் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டிருப்பதாக நோய் பரவுதல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு வீடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழலையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

dengue_comic

இவ்வாறான இடங்களில் தெளிந்த நீர் தேங்கும் போது அவற்றில் நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப் பெருகின்றன. அவை ஆண் பெண் வயது வித்தியாசமின்றி எவரையும் குத்தி டெங்கு வைரஸைப் பரப்புகின்றது. அதனால் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் பலவித அறிகுறிகள் வெளிப்படும். அவற்றில் உடல் வலி, தலைவலி. மூட்டு வலி, அரிப்பு போன்றவாறான அறிகுறிகள் குறிப்பாக வெளிப்படும். அதேநேரம் இந்நோய் தீவிர நிலையை அடையும் போது மலம் கபில நிறமாகவோ. கறுப்பு நிறமாகவோ வெளிப்படலாம். சிறுநீரின் நிறம் மாற்றமடையும். உடலின் சில பாகங்களில் தோலின் அடிப்பகுதியில் இரத்தப் புள்ளிகளும் வெளிப்படும்.

‘அதன் காரணத்தினால் எவருக்காவது இரண்டு நாட்கள் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்ட சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு மருத்துவ நிபுணரான டொக்டர் பிரசிலா சமரவீர, ‘கர்ப்பிணிகள் சிறுவர்கள், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் தற்போதைய சூழலில் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது ஒரே நாளிலேயே மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் டெங்கு வைரஸ் நோயைப் பொறுத்த வரை ஒன்றில் அதனை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது அதனை ஆரம்பத்திலேயே இனம் கண்டால் முழுமையாக குணப்படுத்திக் கொள்ளவும் முடியும். என்றாலும் இந்நோயில் நான்கு கட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலிரு கட்டங்களும் சாதாரண காய்ச்சல் போன்று காணப்பட்டாலும் ஏனைய இரு கட்டங்களும் டெங்கு இரத்தப் போக்காகவும், டெங்கு அதிர்ச்சி நிலையாகவும் வெளிப்படலாம். அதனால் இந்நோய் குறித்து அசிரத்தை காட்டக் கூடாது. அது உயிராபத்து மிக்கதாக அமையலாம். ஆகவே காய்ச்சல் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் டெங்கு வைரஸ் மனிதனின் செங்குருதிச் சிறுதட்டுக்களைத் தாக்கக் கூடிய பண்பைக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவரின் இரத்தத்தைப் பரிசோதனை செய்தால் அவரது இரத்தத்தில் செங்குருதி சிறுதட்டுக்கள் குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடியும். டெங்கு நோய் ஏற்பட்டிருப்பதற்கான பிரதான வெளிப்பாடு அதுவேயாகும். அதனடிப்படையில் தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அத்தோடு இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் அதிகம் ஒய்வு எடுத்துக் கொள்வதோடு நீராகரத்தையும் அதிகளவில் உட்கொள்வது அவசியம்.

ஆகவே இக்காலப் பகுதியில் ஏற்படும் காய்ச்சல் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படும் போது டெங்கு வைரஸின் ஆபத்துக்களையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நன்றி : தினகரன் – (மகுடம்)
14.01.2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All