Puttalam Online
historical-notes

கண்டதுண்டா நம் மண்ணில் – கண்டவர்கள் சொன்துண்டா….?

  • 25 January 2017
  • 909 views

16298392_601977870003374_5045036756293373800_n

Newton Isaac

காலத்தை வெண்று கால் கடுக்க 150 வருடங்களாக நமது நகரில் நிற்கும் இது பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற மிச்ச சொச்சம். நம்மை சுற்றி என்னென்னவெல்லாம் இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. கண்டு கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் நமக்கு ஆவலும் இல்லை. என்ன செய்வது அவரவர் கவலை அவரவருக்கு.

இந்த இலட்சணத்தில் இந்த மண்ணாங் கட்டிகளையெல்லாம் பார்க்கவா நேரம் என்று பலர் எரிச்சல் படலாம். எனவே ஆசுவாசமாக எப்போதாவது நேரம் கிடைக்கும்போதாவது பார்த்துக் கொள்ளட்டுமே என்றுதான் இன்றைய தினத்தின் பரபரப்புக்களுக்கு மத்தியிலும் புத்தளம் மாவட்ட செயலக (Kacheri) வளாகத்துக்குள் சென்று இந்த பிரதான நிருவாகக் கட்டித்தை ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

முன்பெல்லாம் கச்சேரி வளாகத்துக்குள் நாம் நினைத்தபடி நுழையலாம். ஆனால் இப்போது அப்படிச் செய்ய முடியாது நுழைவாயிலில் தகவல் படிவம் ஒன்றை நீங்கள் நிரப்ப வேண்டி வரும். உள்ளே சென்று வெளியே வரும் போது வந்த காரியம் நல்லபடி முடிந்ததா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் இன்னுமொரு கேள்விக்கும் பதில் கொடுக்க வேண்டும். வந்த காரியம் ஆகாமல் வெறுங் கையோடும் ஏமாற்றத்தோடும் திரும்புவர்களுக்கு இந்த படிவத்தில் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கத்தான் எண்ணம் வரும். என்றாலும் எல்லோருக்கும் பயம்.

இவைகளல்ல நான் இங்கு பேச வருவது. இந்த கட்டத்தில் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளைக்காரர் முதல் சிங்களவர்களும், தமிழரும் கூட GA என்று சொல்லப்படும் மாவட்ட செயலாளர்களாக கடமை செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் பங்குக்கும் மொகிதீன் என்ற ஒரு அரசாங்க அதிபர் 1960 களின் வால் நுணிப் பகுதியில் கடமை செய்துள்ளார்.

எமது நினைவுகள் சரியாக இருக்குமானால் மூன்று முஸ்லிம்கள் அலுவலக உதவியாளராக (Office Assistants) கடமை செய்துள்ளார்கள். ஒருவர் எம்.ஐ.பி இப்ராகீம் (பொறியிலாளர் ஜிப்ரியின் தந்தை, இன்னுமொரு இப்ராகீம் இவர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர், செயினுல் ஆப்தீன் (அறிமுகம் செய்யத் தெரியவில்லை) இவர் சிறிது காலம் காதி நீதிபதியாகவும் கடமையாற்றினார்.

மாவட்ட செயலகத்தை புத்தளத்துக்கு வெளியே கொண்டு செல்ல மிக நீண்ட காலமாக முயற்சி செய்யப்பட்டது. அதிஸ்டவசமாக பொருத்தமான இடம் இந்த மாவாட்டத்துக்குள் உள்ள ஏனைய நான்கு தொகுதிகளிலும் கிடைக்கவில்லை. எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு அந்த வளாகத்துள் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை அமைத்தனர்.

புதிய கட்டிடத்துக்கு அரச அதிபரின் பணிமனை மாற்றப்பட்டபின்னர் இந்த புராதன கட்டிடத்தில் முக்கியமற்ற சில பகுதிகள் இயங்குகின்றன. காலத்தை வென்று நிற்கும் இந்த நிருவாகத் தொகுதி தொல் பொருள் பெறுமதிமிக்கது. இதை புத்தளம் மாவட்ட ‌தொல்பொருள் காட்சியகமாக மாற்றுவது பற்றி சில ஆண்டுகளுக்கு முன் இலேசாகப் பேசப்பட்டது. பின்னர் அது மெல்ல மெல்ல கரைந்து மறைந்து விட்டது. இது இன்னும் பல தலைமுறைகளைக் காணக் காத்திருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All