Puttalam Online
historical-notes

சகிரியன்களின் “பாட்டி வீடு” – எங்கிருக்கிறது தெரியுமா..?

  • 30 January 2017
  • 1,474 views

சகிரியன்களின் “பாட்டி வீடு”

Newton Isaac

நம் உப்பு மண்ணில் பெருமையோடு எழுந்து நின்ற அந்தக் காலத்துக் கட்டிடங்கள் எல்லாம் காலச் சுழற்சியின் வேகத்துக்கு எதிர்த்து நிற்க மாட்டாது காற்றோடு காற்றாக மறைந்து போய்விட்ட நிலையில் வயோதிப நிலையில் இங்கொண்றும் அங்கொண்றுமாக நிற்கும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.

Zahiriyan

அடையாளம் காண முடியுமா? புத்தளம் ‘நேரர்த்’ வீதியில் பெரிய முதலாளி வீடு என்று அழைக்கப்பட்ட ESM வீட்டுக்கு எதிர்த் திசையில் காலத்தை வென்று நிற்கும் இது யாருடைய வீடு என்று கேட்டால் “சாகிராவின் தாய் வீடு” என்று சொல்வேன். அதாவது இன்றைய “சகிரியன்” களின் “பாட்டி வீடு”.

உருன்டோடிவிட்ட நூற்றாண்டின் பின் அரைப் பகுதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வீட்டில்தான் கருக்கட்டி, பிறந்து கண் விழித்தது சாகிராக் கல்லூரி.

இங்கும் அங்குமாக இன்னும் வாழ்வோர் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் சாகிராவின் மூத்த புத்திரர்களில் ஒருவரான “முபாரக் மாஸ்டர்” என்ற பெயரால் இனங்காணப்படும் ஊரறிந்த பிரபல்யம் எஸ்.எம். முபாரக் அவர்களிடம் இந்த சாகிராவின் தாய் வீட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்று காலை சென்றபோது அவர் அன்றைய ஆங்கில தினசரியில் மூழ்கிப் போயிருந்தார்.

Mubarack Sir

சாகிராவின் தாய் வீட்டில் கல்வி அமுதை அள்ளிப் பருக நுழைந்த இந்த உப்பு மண்ணின் மூத்த மைந்தர்களில் ஒருவரான முபாரக் மாஸ்டருக்கு இப்போது வயது 80 ஆகி விட்டது. இவரின் சேர்விலக்கம் (Admission Number) 36.

சுவாரிசயமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் மூத்த நகர மகன் முபாரக் மாஸ்டர். அந்தக் காலத்தில் புத்தளம் நோர்த் ரோட்தான் படித்த, வசதி வாய்ப்புள்ள, செல்வாக்குள்ள இடமாக இருந்ததால்தான் அந்தப் பக்கத்தில் வாழ்ந்த முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எச்.எஸ். இஸ்மாயீல், சாலிஹ் மரிக்கார், இப்ராகீம் நயினா மரிக்கார் போன்றோரின் மனங்களில் கருக்கட்டி வளர்ந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாக இங்கு சாகிரா கருக்கட்டி வளர்ந்துள்ளது.

அந்தக் காலத்திலே இந்த மாடி வீட்டை சாலிஹ் மரிக்கார், இப்ராகீம் நயினா மரிக்கார், பலுலூன் மரிக்கார் ஆகிய பரோபகார தனவந்தர்கள் சாகிராவின் பிறப்புக்காக இலவசமாகவே வழங்கியிருக்கிறார்கள். சீத்தைப் புடவை கட்டிய அந்தக் காலத்து இளம் பெண்களும், அரைக் கால் சட்டை அணிந்த பையன்களுமாக சுமார் 200 கொண்டு ஆரம்பமான இது ஆரம்பத்தில் கொழும்பு சகிராவின் கிளையாகத்தான் ஆரம்பித்தார்களாம்.

மர்ஹும் எம்.எச்.எம். நயினா மரிக்கார் சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு இங்கிலாந்திலிருந்து இலங்கை திரும்பியபோது சாகிராவின் புத்திரர் தொகை 400 ஐ எட்டிப் பிடித்துக் கொண்டிருந்ததால் சாகிராவுக்கென புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணி பெரிய மனிதர்கள் கூட்டம் கூடி பேசியபோது சாகிராவின் இப்போதைய அமைவிடத்தை இலவசமாகவே வழங்க எம்.ஸீ.எம் காஸிம் மரிக்கார் முன்வர, அங்கு ஒரு கட்டிடத்தை தனது சொந்த செலவில் கட்டித்தர மர்ஹும் எம்.எச்.எம். நயினா மரிக்கார் முன்வர இந்தப் பிறந்த வீட்டில் இருந்து சாகிரா மன்னார் விதிப் பக்கமாகச் சென்றுள்ளது.

சாகிராவின் வரலாறு எழுத நான் முயற்சிக்கவில்லை.இளய சகிரியன்களுக்கு பாட்டி வீட்டைக் காட்ட வந்தேன்.

நகர நடப்புக்களைப் பார்க்கும்போது நிகழும் மாற்றங்களுக்கு முகங் கொடுக்க மாட்டாது சாகிராவின் தாய்வீடும், சகிரியன்களின் பாட்டி வீடும் இன்னும் எத்தனை காலத்துக்கு நிலைக்குமோ தெரியாது. அந்தப் பக்கமாகப் போய் இளம் சகிரியன்கள் பாட்டி வீட்டையும் பார்த்துக் கொள்ளட்டுமே.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All